திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 6ம் நாள் அதாவது சனிக்கிழமை (10) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம்.
- ஊரடங்கு உத்தரவை மீறிய 97 பேர் இதுவரை கைது. 27 வாகனங்களும் பறிமுதல் செய்ததாக அறிவிப்பு.
- சாதாரண மக்கள் இடையில் கொரோனா கொத்தணி உருவானால் வைரஸ் சமூக மயப்படுத்தப்பட்டதாக பிரகடனப்படுத்தப்படும் என தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு தெரிவிப்பு.
- தற்போதைய கொவிட் தொற்று நிலமையில் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தை முழுமையாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என இலங்கை முதலீட்டாளர்கள் சபை தெரிவிப்பு.
- நாளை (11) நடைபெறும் புலமைப்பரிசில் பரீட்சையை கொரோனா உறுதி செய்யப்பட்ட 5 மாணவர்கள் எழுதவுள்ளனர். இவர்கள் தாம் சிகிச்சை பெறும் IDH வைத்தியசாலையில் எழுதவுள்ளதாகவும் இதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித்த தெரிவிப்பு. அதேபோன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ள உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சார்த்திகளுக்கு அந்த நிலையங்களிலேயே பரீட்சை நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவிப்பு.
- திருகோணமலை மாவட்டத்தில் இதுவரை 60க்கும் மேற்பட்டோர் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் மாகாணப் பணிப்பாளர் ஏ.லதாகரன் தெரிவிப்பு.
- நாளைய தினம் (11) நடைபெறவுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ள கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை என்பன நடைபெறவுள்ள பரீட்சை மத்திய நிலையங்கள் சுகாதார பாதுகாப்புடன் உள்ளதாகவும் எனவே பரீட்சைகள் தொடர்பில் பெற்றோர்கள் அச்சமடைய வேண்டிய அவசியமில்லை எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவிப்பு.
- ஆயுர்வேத திணைக்களமும் ஆயுர்வேத மருந்தாக்கற் கூட்டுத்தாபனமும் இணைந்து கொரோனாவுக்கு மருந்து கண்டு பிடித்ததாகவும் இது தொடர்பான நிகழ்வு எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெற இருப்பதாகவும் சுதேச வைத்திய துறை அமைச்சர் தெரிவிப்பு.
- கொழும்பு ரிஜ்வே வைத்தியசாலையின் செவிலியர் ஒருவருக்கு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக அறிவிப்பு.
- பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதி ஒருவரின் மகளுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து குறித்த அவசர சிகிச்சை பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவிப்பு.
- கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மூன்று சிறு ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். இதன் காரணமாக வைத்தியசாலையின் மூன்று வார்டுகளும் மற்றும் அறுவை சிகிச்சை அரங்கம் ஒன்றும் மூடப்பட்டது.
- கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் அமைந்துள்ள Next ஆடை தொழிற்சாலையில் மேலும் 11 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினம் அங்கு பணிபுரியும் ஒரு ஊழியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து ஏனைய அனைவரும் பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
- கொரோனா காலத்தில் வெளிநாட்டிலுள்ள இலங்கையரை இலங்கைக்கு அழைத்து வருவதில் திட்டமிடப்பட்ட ஊழல்கள் நிகழ்ந்துள்ளமை அம்பலமாகியுள்ளது. இதில் அரச அதிகாரிகள் மற்றும் தூதரக மட்டத்திலான அதிகாரிகள் உட்பட பலர் சம்பந்தப்பட்டிருப்பதாக புலனாய்வு தகவல்களை ஜனாதிபதிக்கு சாட்சி சகிதம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தற்பொழுது இந்த பணி Covid-19 தேசிய செயற்பாட்டு மையத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
- இன்று மாத்திரம் 105 பேருக்கு கொவிட்- 19 தொற்றுறுதியானது. மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையின் பணியாளர்கள் இரண்டு பேருக்கும், அவர்களுடன் தொடர்புடைய மேலும் 101 பேருக்கும், வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 2 பேருக்கும் நேற்று கொவிட் 19 தொற்றுறுதியானது. இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 628 ஆக அதிகரித்தது.
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 10-10-2020 நடந்தவை...
Reviewed by irumbuthirai
on
October 11, 2020
Rating:
Reviewed by irumbuthirai
on
October 11, 2020
Rating:

No comments: