இன்று அறிமுகப்படுத்திய Fuel Pass இல் ஏற்பட்ட பிரச்சினைகள்...

July 16, 2022


மின்சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சரினால் இன்றைய தினம் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய எரிபொருள் அனுமதி அட்டை (National Fuel Pass) தொடர்பாக பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.


இது அரசாங்கத்தின் மற்றுமொரு தோல்வியடைந்த திட்டம் எனவும் பலராலும் குற்றம் சாட்டப்படுகிறது. அறிமுகப்படுத்தப்பட்ட தருணத்திலிருந்து பெருமளவிலானோர் பதிவு செய்ய முற்பட்டமையினால் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. 


சேர்வர் பிரச்சினை மற்றும் OTP இலக்கங்களை பெற்றுக் கொள்வதிலும் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இது மாத்திரமன்றி 


பெறப்படுகின்ற QR Code இல் வாகன இலக்கத்தை அடையாளப்படுத்திக் கொள்வது தொடர்பான பிரச்சனைகளை கொண்ட Bugs களும் காணப்படுவதாக பலராலும் குற்றம் சாட்டப்படுகிறது. 


இவ்வாறாயினும் இன்று அறிமுகப்படுத்தப்பட்ட முறை இன்றே செயலிழந்த நிலையில் தற்போது பதிவுகளை மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது.

National Fuel Pass Registration/ தேசிய எரிபொருள் அனுமதி பத்திரத்திற்கான விண்ணப்பம்


தற்போது பராமரிப்பு வேலை நடைபெறுவதாக (Under Maintenance) என்ற தகவல் மாத்திரமே குறித்த இணையதளத்தில் காட்சிப்படுத்தப்படுகிறது.


இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தனது ட்விட்டர் பக்கத்தில், பலமுறை இதில் பதிவு செய்ய முயற்சித்தும் பலனில்லை என தெரிவித்துள்ளார்.


இன்று அறிமுகப்படுத்திய Fuel Pass இல் ஏற்பட்ட பிரச்சினைகள்... இன்று அறிமுகப்படுத்திய Fuel Pass இல் ஏற்பட்ட பிரச்சினைகள்... Reviewed by Irumbu Thirai News on July 16, 2022 Rating: 5

Logo Competition (University of Colombo)

July 16, 2022

The Annual Research Symposium (ARS) of the University of Colombo will be held on 16th November 2022. 

The University of Colombo invites staff and students to submit a digital logo that will function as a unique symbol of this event. 
 
Closing date: 1st August 2022, 23.59 PM 
 
Click the link below for full details.
Logo Competition (University of Colombo) Logo Competition (University of Colombo) Reviewed by Irumbu Thirai News on July 16, 2022 Rating: 5

கோத்தாபய அனுப்பிய ராஜினாமா கடிதத்தின் தமிழ் வடிவம்

July 16, 2022


கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுவதற்காக சபாநாயகருக்கு அனுப்பி வைத்த ராஜினாமா கடிதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை இங்கே தருகிறோம். 

நாட்டிற்காக தொடர்ந்தும் அர்ப்பணிப்போடு செயல்படுவதாகவும் அந்த ராஜினாமா கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


குறித்த ராஜினாமா கடிதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை கீழே காணலாம்.


கோத்தாபய அனுப்பிய ராஜினாமா கடிதத்தின் தமிழ் வடிவம் கோத்தாபய அனுப்பிய ராஜினாமா கடிதத்தின் தமிழ் வடிவம் Reviewed by Irumbu Thirai News on July 16, 2022 Rating: 5

National Fuel Pass Registration/ தேசிய எரிபொருள் அனுமதி பத்திரத்திற்கான விண்ணப்பம்

July 16, 2022 

வாராந்தம் கோட்டா அடிப்படையில் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்குவதை உறுதிப்படுத்துவதற்கான தேசிய எரிபொருள் அனுமதி பத்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சனா விஜயசேகர தெரிவித்துள்ளார். 


ஒரு தேசிய அடையாள அட்டைக்கு ஒரு வாகனத்தை பதிவு செய்யலாம். வாகனத்தின் விவரங்களும் அடிச்சட்ட இலக்கமும் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் வாகனத்திற்கான QR Code ஒதுக்கப்படும். அதன் அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கப்படும். 

வாகன இலக்கத்தகடின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் வாரத்திற்கு இரண்டு நாட்கள் ஒதுக்கப்பட்டு எரிபொருள் விநியோகிக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். 

இந்த அனுமதி பத்திரத்தை பெறுவதற்கான Online விண்ணப்பப் படிவம் மின் சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. 

குறித்த Online விண்ணப்பத்திற்கு செல்ல கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
National Fuel Pass Registration/ தேசிய எரிபொருள் அனுமதி பத்திரத்திற்கான விண்ணப்பம் National Fuel Pass Registration/ தேசிய எரிபொருள் அனுமதி பத்திரத்திற்கான விண்ணப்பம் Reviewed by Irumbu Thirai News on July 16, 2022 Rating: 5

ரஞ்சனின் விடுதலையும் ரணிலின் அரசியல் விளையாட்டும்...

July 16, 2022

ஊழலுக்கு எதிரான இலங்கை மக்களின் போராட்டத்தில் முக்கிய குறியீடு ரஞ்சன் ராமநாயக்க. தன்னுடைய கட்சியே என்றாலும் கடுமையாக விமர்சனம் செய்வதன் காரணமாகவும், இலங்கையின் சூப்பர் ஸ்டார் நடிகர் என்பதாலும், இலங்கையின் ஜனரஞ்சக அரசியவாதி விஜேகுமாரதுங்கவின் உறவினர் என்பதாலும், வாய்ப் பேச்சில் வீரர் என்பதாலும் தினமும் ஊடகங்களுக்கு தீனி போடும் அரசியல்வாதியாக திகழ்ந்தார். 

நீதிமன்றம் அவமதிப்பு வழக்கில் குற்றவாளியான அவர் சிறைத்தண்டனைக்கு உட்பட்டார். அன்றிலிருந்து அவருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். 

ரஞ்சன் கருணை மனு அளித்தால் பரிசீலிக்க தயார் என்று கோட்டா சொன்ன நிலையில் ரஞ்சன் தரப்பு அதற்கு தயாராக இருக்கவில்லை. 

இந்நிலையில் அவரின் சிறைப்படுத்தலுக்கு எதிராக SJB எம்பியான ஹரின் நிறைய பேசினார். கருப்பு சால்வை அணிந்து பாராளுமன்றம் வந்தார். அமைச்சுப் பதவி பெறும்வரை கருப்பு சால்வையுடனே பாராளுமன்றத்தில் இருந்தார். 

இப்போது அவர் ஆதரித்த ரணில் ஜனாதிபதிக்கான அதிகாரங்களுடன் ஜனாதிபதி கதிரையில் அமர்ந்து விட்டடார். இந்நிலையில் ரஞ்சனின் விடுதலை குறித்து ஹரின், மனுஷ இருவரும் ரனிலை சந்தித்து உரையாடியாதாகவும், அவர்களுக்கு செவிமடுத்த ஜனாதிபதி ரணில் நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்க்ஷவிடம் விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு கோரி இருப்பதாகவும் செய்திகள் கசிந்துள்ளன. 

ஜனாதிபதி கனவில் உள்ள ரணில் இந்த விடுதலையை செய்வதன் மூலம் ஊழலுக்கு எதிரான முகாமில் தாம் இருக்கிறேன் என்ற செய்தியை அழுத்தமாக சொல்ல எதிர்பார்ப்புதாகவே தோன்றுகிறது. அதன் மூலம் SJB தரப்பின் சில வாக்குகளை திரட்டும் எதிர்பார்ப்பு இருக்கும். அந்த பணிக்கு பயன்படுத்திக் கொள்ள உததேசிக்கும் ஹரின் மனுஷ இருவருக்கும் இது உந்துதலாக அமையும். 

இந்த விடுதலை 20 ஆம் திகதிக்கு முன்னர் நடைபெறலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதன் மூலம் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள வாக்கெடுப்பில் தனக்கு சாதகமாக ஒரு சில வாக்குகளையேனும் பெற்றுக் கொள்ளலாம் என ரணில் எதிர்பார்க்கலாம். பார்க்கலாம். ரஞ்சன் விடுதலை செய்யப்படுவாரா? 

ரஞ்சன் விடுவிக்கப்பட்டால் தன்னுடைய MP பதவியை ராஜினாமா செய்து ரஞ்சன் மீண்டும் பாராளுமன்றம் வர வழிவிடுவேன் என்று சொன்ன ஹரின் ராஜினாமா செய்வாரா? அதற்கு பதிலாக SJB செயலாளர் நியமிக்க வேண்டிய உறுப்பினரை SJB இல் இருந்து வெளியேறி உள்ள ஹரின் பேச்சைக் கேட்டு நியமிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

-Fayas M. A. Fareed.


Related:

ரஞ்சனின் விடுதலையும் ரணிலின் அரசியல் விளையாட்டும்... ரஞ்சனின் விடுதலையும் ரணிலின் அரசியல் விளையாட்டும்... Reviewed by Irumbu Thirai News on July 16, 2022 Rating: 5

ஜனாதிபதி தெரிவு குறித்து யாப்பு என்ன சொல்கிறது? ஒரு சுருக்கப் பார்வை....

July 16, 2022

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகி ரணில் விக்கிரமசிங்ஹ பதில் ஜனாதிபதியாக கடமையேற்றுக் கொண்டார். ஜனாதிபதியின் பதவி விலகல் இன்றைய தினம் அறிவிக்கப்பட்டாலும் 14 ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையிலேயே அவர் இராஜினாமா செய்துள்ளார். எனவே, ஆகஸ்ட் மாதம் 13 ஆம் திகதிக்கு முன்னர் அடுத்த ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் பொறுப்பு பாராளுமன்றத்திற்கு உள்ளது. 
 
இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ஜே.ஆர். ஜெயவர்த்தன 1978 ல் பதவியேற்ற பின் வரலாற்றில் இரண்டாம் முறையாக தனது பூரண பதவிக் காலத்தை நிறைவு செய்ய முன்னர் ஜனாதிபதி பதவி வெற்றிடமாகி உள்ளது. 1993 மே ௦1 ஆம் திகதி குண்டு வெடிப்பில் ஜனாதிபதி ஆர். பிரேமதாஸ கொல்லப்பட்டமையினால் ஒருமுறை வெற்றிடமானது. அப்போது பிரதமராக இருந்த டி.பி. விஜேதுங்க பதில் ஜனாதிபதியானார். அது ஜனாதிபதியின் மரணத்தின் காரணமாக ஏற்பட்ட வெற்றிடமாகும். ஆனால் ஜனாதிபதியொருவர் ராஜினாமா செய்ததால் வெற்றிடம் ஏற்படுவது இதுவே முதல் தடவையாகும்.
 
அப்போதெல்லாம் கட்சி என்பது ஒரு கட்டுக் கோப்பில் இருக்கும். அதே போன்று கட்சியில் முக்கிய இரண்டாம் கட்டத் தலைவர்களாக இருந்த லலித், காமினி போன்றோர் வெளியேறி இருந்தமை (லலித் கொல்லப்பட்டிருந்தார்) போன்றவற்றால் டி.பி. விஜெதுங்கவுக்கு போட்டி எதுவும் இருக்கவில்லை. பிரேமதாஸவின் வலது கையாக இருந்த சிறிசேன குரே போன்றவர்களை ஓரம் கட்டிய ரணில் முன்னே வந்து டி.பி. விஜதுங்கவை முன்மொழிந்து ஜனாதிபதியாக்கினார். ஆளும் கட்சிக்கு தேவையான பலம் அப்போது இருத்தது. குழப்ப நிலை இருக்கவும் இல்லை. 
 
ஆனால் இப்போதைய நிலை மாறுபட்டது. சமூக வலைத்தளங்கள், இலத்திரனியல் ஊடகங்கள் வளர்ந்து விட்ட இந்தக் காலத்தில் எம்பிக்களின் ஒவ்வொரு நகர்வும் மக்களால் அவதானிக்கப்படுகிறது. மக்கள் நிறைய தேடித் தெரிந்து கொண்டுள்ளனர். 1993 ல் போன்று புதிய ஜனாதிபதி இவர்தான் என்று ரேடியோவில் சொல்வதைக் கேட்டுக் கொண்டு செல்லும் மனநிலையில் மக்கள் இல்லை. யாப்பு என்ன சொல்கிறது? அதன் அடிப்படையில் எல்லாம் நடைபெறுகிறதா? என்பது போன்ற பல விடயங்களை மக்கள் தேடுகிறார்கள். 
 
அதன் அடிப்படையில் தற்போதைய நிலை தொடர்பில் யாப்பு என்ன சொல்கிறது என்பது குறித்து இந்த கட்டுரையின் அடுத்து வரும் பகுதிகள் அமையும். 
 
பதவிக் காலம் முடியும் முன்னர் ஜனாதிபதி ஒருவரின் பதவி வெற்றிடமாதல் தொடர்பில் அரசியல் யாப்பின் 38 ஆம் பிரிவில் சொல்லப்பட்டுள்ளது. 38-1 ஜனாதிபதி பதவி பின்வரும் சூழ்நிலைகளில் வெற்றிடமாகும். 
 
அ) அவர் இறப்பதன் மேல். 
ஆ) அவர், சபாநாயகருக்கு முகவரியிட்டனுப்பும் தம்கைப்பட்ட கடிதத்தின் மூலம் பதவியைத் துறந்தால். 
இ) அவர் இலங்கையின் ஒரு பிரசையாக இல்லாதொழிந்தால். 
ஈ) ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட ஆள், தமது பதவிக் காலம் தொடங்கிய திகதியிலிருந்து இரு வாரங்களுக்குள் வேண்டுமென்றே பதவியேற்கத் தவறினால். 
உ) அவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டால். (அது தொடர்பான விபரங்கள் ஊ பிரிவில் சொல்லப்பட்டுள்ளது. அத்தோடு 38-2, 39 என்பவற்றின் கீழ் நீக்குதல் பற்றியும் சொல்லப்பட்டுள்ளது. தற்போது அவை அவசியம் இல்லை என்பதால் இக்கட்டுரை அது குறித்துப் பேசவில்லை.) 
 
யாப்பின் அடிப்படையில் 38 இன் 1 ஆ பிரிவின் கீழ் சபாநாயகருக்கு அனுப்பிய கடிதம் மூலமே கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியுள்ளார். எனவே, பதவி வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய சந்தர்ப்பம் உருவானால் அடுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து யாப்பின் 40 ஆம் பிரிவு விபரிக்கின்றது. 
 
40-1 (அ) 
ஜனாதிபதியின் பதவி அவரது பதவிக்காலம் முடிவடையும் முன்பாக வெற்றிடமானால், பாராளுமன்றம் ஜனாதிபதி என்ற பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு தகைமையுடையவராகவுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை ஜனாதிபதியாக தெரிவு செய்தல் வேண்டும். ஜனாதிபதி பதவிக்கு அவ்வாறு வரும் ஆள் எவரும், பதவியை வெற்றிடமாக்கிச் செல்கின்ற ஜனாதிபதியின் பதவிக் காலத்தில் முடிவுறாது எஞ்சியுள்ள காலத்திற்கு மட்டுமே பதவி வகித்தல் வேண்டும். 
 
ஆ) அத்தகைய தேர்தல் வெற்றிடம் ஏற்பட்ட பின்னர் இயன்றளவு விரைவாகவும், எச்சந்தர்ப்பத்திலும் வெற்றிடம் ஏற்பட்ட திகதியிலிருந்து ஒரு மாதத்துக்கு பிந்தாமலும் நடாத்தப்படல் வேண்டும். பாராளுமன்றம் சட்டத்தினால் ஏற்பாடு செய்யக் கூடியவாறான அத்தகைய நடவடிக்கை முறைக்கிணங்க அத்தகைய தேர்தல் இரகசிய வாக்களிப்பு மூலம் அளிக்கபட்ட வாக்குகளின் பூரண பெரும்பான்மை மூலம் நடைபெற வேண்டும். ஆயினும் அத்தகைய வெற்றிடம் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் ஏற்பட்டால் ஜனாதிபதியானவர் புதிய பாராளுமன்றத்தின் முதல் கூட்டம் நடைபெற்ற திகதியிலிருந்து ஒரு மாத காலத்துக்குள் பாராளுமன்றத்தினால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். 
 
இ) அத்தகைய வெற்றிடம் ஏற்பட்ட திகதியில் இருந்து புதிய ஜனாதிபதி பதவி ஏற்கும் காலம் வரை பிரதமர் ஜனாதிபதி பதவியின் பதிற்கடமை ஆற்ற வேண்டும் என்பதுடன், பிரதமர் பதவியில் கடமையாற்றுவதற்கென அமைச்சரவையின் ஏனைய அமைச்சர்களுள் ஒருவரை நியமிக்கலாம். ஆயினும், அந்த நேரம் பிரதமர் பதவி வெற்றிடமாக இருக்கும் பட்சத்தில் அல்லது பிரதமர் பதிற்கடமையாற்றுவதற்கு இயலாதவராக இருபாரெனின், ஜனாதிபதி பதவியில் சபாநாயகர் பதிற்கடமையாற்ற வேண்டும். 
 
2. ஜனாதிபதி பற்றிய அரசியலமைப்பின் ஏற்பாடுகள் ( 32 ஆம் உறுப்புரையின் (2) ஆம் பத்தியின் ஏற்பாடுகள் நீங்கலாக - பதவியேற்கும் ஜனாதிபதியின் பதவியேற்றதன் மேல் அரசியலமைப்பினால் உருவாக்கப்பட்ட அல்லது ஏற்றுக் கொள்ளப்பட்ட வேறேதேனும் பதவியை வகிக்காதொழிதல் வேண்டும் என்பதுடன், அவர் பாராளுமன்றத்தின் உருப்பினராகவிருப்பின் பாராளுமன்றத்தின் அவரது ஆசனம் வெற்றிடமாகும். ஜனாதிபதி எப்பதவியையேனும் எத்தகையதுமான இலாபந்தரும் பதவியையேனும் வகித்தலாகது.) அவற்றை ஏற்புடையதாக்கக் கூடிய அளவுக்கு பதில் ஜனாதிபதிக்கும் ஏற்புடையனவாதல் வேண்டும். 
 
3. ஜனாதிபதியைப் பாராளுமன்றம் தேர்ந்தெடுத்தலுக்கான நடவடிக்கை முறை பற்றிய எல்லாக் கருமங்களுக்கும், அவற்றுக்கு அவசியமான அல்லது அவற்றின் இடைநேர் விளைவான ஏனைய எல்லாக் கருமங்களுக்கும் சட்டத்தின் மூலம் பாராளுமன்றம் ஏற்பாடு செய்யதல் வேண்டும். 
 
மேற்படி யாப்பில் இருந்து பெறப்பட்ட விபரங்களின் அடிப்படையில் பின்வரும் விடயங்களை சுருக்கமாக விளங்கலாம்.
 
(1) 38 இன் 1 ஆ பிரிவின் கீழ் சபாநாயகருக்கு அனுப்பிய கடிதம் மூலமே கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியுள்ளார். எனவே, பதவி வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. 
 
(2) 40 - 1 இ பிரிவின் அடிப்படையில் பிரதமரான ரனில் விக்ரமசிங்ஹ பதில் ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்டுள்ளார். 
 
(3) 40 - 2 இன் அடிப்படையில் ஜனாதிபதியானமை காரணமாக ரணில் விக்ரமசிங்ஹவின் பாராளுமன்ற ஆசனம் வெற்றிடமாக மாட்டாது. அதாவது 32 ஆம் உறுப்புரையின் (2) ஆம் பத்தியின் ஏற்பாடுகளில் இருந்து விடுப்பு அளிக்கப்படுகிறது. 
 
(4) 40 - 1 இ இன் அடிப்படையில் தற்போதைய (அதாவது கோட்டாபய ராஜபக்ஷவின்) அமைச்சரவையில் உள்ள ஏதேனும் ஒரு கபினட் அமைச்சரை பதில் பிரதமராக நியமிக்க ரணில் விக்ரமசிங்ஹவுக்கு அதிகாரம் உள்ளது. 
 
(5) 40 - 1 அ வின் அடிப்படையில் எதிர்வரும் ஆகஸ்ட் 13 ஆம் திகதிக்குள் பாராளுமன்றம் கூடி புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்தல் வேண்டும். 
 
(6) 40 - 2 இன் அடிப்படையில் ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களிடையே நடைபெறும் வாக்கெடுப்பு தொடர்பான விடயங்களை பாராளுமன்றமே செயற்படுத்தும். அதன் அடிப்படையிலேயே 20 ஆம் திகதி வாக்கெடுப்பு என்று பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 
 
(7) 40 - 1 ஆ வின் அடிப்படையில் ஒருவருக்கு மேற்பட்டோர் போட்டியிட்டால் மட்டுமே இரகசிய வாக்கெடுப்பு நடாத்தப்படும். அந்த வாக்கெடுப்பில் அன்றைய தினம் வாக்களிக்கும் உறுப்பினர்களில் 50% ஆனோரும் மேலதிகமாக ஒருவரும் வாக்களித்து தெரிவு செய்யும் வேட்பாளர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார். 
 
(8) 38 இன் 1 ஈ இன் கீழ் அவர் 14 நாட்களுக்குள் 32 ஆம் பிரிவின் 1 ல் குறிப்பிட்டுள்ளவாறு பதவிப் பிரமாணம் செய்ய வேண்டும். 
 
(9) அவ்வாறு தெரிவு செய்யப்படும் ஜனாதிபதியின் பதவிக்காலம் 2024 நவம்பர் 17 வரையானதாகும். 
 
யாப்பில் உள்ளதன் சாராம்சமே இது. இவை தவிர ஜனாதிபதி ஒருவரைத் தேர்ந்தெடுத்தல் தொடர்பில் பாராளுமன்றத்தால் உருவாக்கப்பட்டுள்ள சட்டங்களும் இந்த தெரிவில் செல்வாக்குச் செலுத்தும். 
 
- Fayas M.A. Fareed.
 
 
Related:
 

ஜனாதிபதி தெரிவு குறித்து யாப்பு என்ன சொல்கிறது? ஒரு சுருக்கப் பார்வை.... ஜனாதிபதி தெரிவு குறித்து யாப்பு என்ன சொல்கிறது? ஒரு சுருக்கப் பார்வை.... Reviewed by Irumbu Thirai News on July 16, 2022 Rating: 5

இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாகும் வாய்ப்பு யாருக்கு?

July 15, 2022

ஜனாதிபதி தெரிவில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டுள்ள கட்சியான SLPP இன் வாக்குகள் முக்கியத்துவமிக்கவை. மொட்டு யாருக்காக புள்ளடி இடுகிறதோ அவரே ஜனாதிபதியாக வேண்டும். 

ஆனால் மொட்டுக்கு விழுந்த அடி பலமானது. எழுந்து நிற்கவே முடியாத நிலையில் உள்ளது. JVP க்கு 3% என்று கிண்டல் செய்த இவர்களின் வாக்கு வீதம் 3% ஆக குறைந்திருப்பதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு சொல்கிறதாம். 

ஆனாலும் ஜனாதிபதி தெரிவு செய்யப்படப் போவது எம்பிக்களின் வாக்கின் அடிப்படையில் என்பதால் மொட்டு பலமாகவே உள்ளது. எனினும், ஜனாதிபதி பதவிக்கான போட்டியில் மொட்டு தரப்பில் யார் போட்டியிடுவார் என்பதெல்லாம் தெளிவில்லாமல் உள்ளது. அநேகமாக டலஸ் ஆக இருக்கலாம். 

டலஸ் அழகப்பெரும போட்டியிடுவார் என்றும் ஜனாதிபதி பிரதமர் பதவிகள் இரண்டும் டலஸ் மற்றும் சஜித் இனால் பகிர்ந்து கொள்ளப்படும் என்றும் சில கதைகள் கடந்த ஓரிரு நாட்களாக சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருந்தன. 

அதனை உறுதிப்பப்டுத்தி டலஸ் தான் போட்டியிடுவதாக இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். எனினும் மொட்டுக் கட்சியின் வேட்பாளரா அல்லது சுயாதீனமாக போட்டியிடுகிறாரா என்பது தொடர்பில் தெளிவில்லாத நிலையே உள்ளது.

யார் இந்த டளஸ்? 
1990 களுக்கு முன்பே மஹிந்தவின் தீவிர விசுவாசி. இடதுசாரி பின்னணி கொண்ட அவரை கட்சியில் வளர்த்து விட்டதே மஹிந்த. சந்திரிக்கா அரசில் அமைச்சுப் பதவி வகித்த போதிலும் வெறுப்புற்று அமெரிக்கா சென்ற அவரை மீண்டும் கொண்டு வந்தார் மஹிந்த ஜனாதிபதி. 

அதன் பின் மஹிந்த சுலங்க என்ற எழுச்சியில் முக்கிய பங்காளியானார். தன்னை எப்போதும் ஒரு இடது சாரியாக காட்டிக் கொள்ளும் அவர் மொட்டின் இனவெறியில் சீரழிந்து போனார். 

கம்மன்பிலவோடு இணைந்து சிறுபான்மையை குறித்து நிற்கும் கீலங்கள் அற்ற தேசிய கொடியை ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தார். கடைசியில் கொள்கையாவது மன்னங்கட்டியாவது என்று அவரும் சீரழிந்து நாட்டையும் சீரழிக்க காரணமாகிப் போனார். 

போன இடத்திலும் அவருக்கு உரிய கெளரவம் கிடைக்கவில்லை. ஏராளமான ராஜபக்க்ஷக்களை கொண்டிருந்த பாராளுமன்றத்தில் சூரிய ஒளியில் மறையும் நட்சத்திரம் போலானார் டளஸ். 

நாட்டு நிலைமை மோசமடைய பலம் பொருந்தியதாக கருதப்பட்ட மொட்டின் சுவர்களில் விரிசல் விழ ஆரம்பித்தது. பலமானதாக அவர்கள் கருதிய இனவாதம் என்ற அடித்தளம் பொருளாதார வீழ்ச்சி என்ற பூகம்பம் காரணமாக நிலை குழைய ஆரம்பித்த போது மொட்டுக்குள் உருவான அதிருப்தியாளர் குழுவில் இணைந்து கொண்டார் டலஸ். 

இன்று மொட்டு பல பிரிவுகளாக பிளவுபட்டுள்ளது. SLFP ஒரு பக்கம், SLFP க்குள்ளேயே 2 குழுக்கள், சுசில், அனுர பிரியதர்ஷன குழு, விமல் உடன் உள்ள 10 கட்சி கூட்டு, பசில் குழு, மஹிந்த விசுவாசிகள், கோட்டா அபிமானிகள், வலு சமநிலையை பார்த்து இணைந்து கொள்ள சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருக்கும் கூட்டம் என்று பல. 

டளஸ் உடன் போட்டிக்கு சஜித் வரலாம். ஏற்கனவே சஜித் கோட்டா எதிர்ப்பு முகாமில் உள்ள பல தரப்பினருடனும் கலந்துரையாடி வருகிறார். SLFP போட்டியிடாது என்ற நிலையில் அவர்களின் ஒத்துழைப்பு சஜித்க்கு கிடைக்க வாய்ப்புள்ளது. 

இடையில் பொன்சேக்காவுக்கும் யாரோ ஆசை காட்டி விட்டார்கள். அந்தாளும் வரலாம். அதே நேரம் அநேகமாக ரணிலும் போட்டியிடலாம். ஒரே ஒரு உறுப்பினரைக் கொண்ட ரணில் என்ன செய்வார்? அநேகமாக மொட்டின் நிறைய பேரின் ஆதரவு ரணிலுக்கு கிடைக்கலாம். ஏனென்றால் இப்போதைய நிலையில் வலுவானவராக அவரைக் காணலாம் பல மொட்டினர். 

அத்தோடு டலஸ் உடன் சம அந்தஸ்தில் அல்லது அவரை விட கொஞ்சம் மேலே (உதாரணமாக ஆளும் கட்சியின் பிரதான கொறடா, சபை முதல்வர் போன்ற பொறுப்புக்களில்) இருந்தோர் எல்லாம் டலஸ் ஐ ஜனாதிபதி கதிரையில் அழகு பார்க்க மனதளவில் விரும்பமாட்டார்கள். 

அதே போன்று ஆட்சிக்கு சிக்கல் வரும் போது டளஸ் நழுவிக் கொண்டார். பசில் தரப்போடு முரண்பாட்டார். கோட்டவை பதவி விலகுமாறு பகிரங்கமாக சொன்னார் போன்ற காரணங்களால் மொட்டுவில் உள்ள குழுக்களுள் பலவற்றின் ஆதரவு டலஸ்க்கு கிடைக்காமல் போகலாம். 

மொட்டு தரப்பின் ரிமோர்ட் ராஜபக்க்ஷக்கள் வசமே இருந்தது. இப்போது அதில் பெட்டரி இறங்கி விட்டது. எனவே இயக்க யாரும் இல்லை. அதுவா என்ன செய்யும் என்பதை ஊகிக்க முடியாது. 

சஜித் தரப்பின் நிலையும் நம்பகமானதாக இல்லை. அவர் கட்சிக்கு பாராளுமன்றத்தில் இருந்த 54 ல் கொஞ்சம் 20க்கு கை தூக்க வெளியே சென்று விட்டது. அதில் ஹாபிஸ் நசீர் இன்னும் அங்கேயே உள்ளார். மற்றவர்கள் சுயதீனமாக இயங்குகின்றனர். அதே போன்று மனுஷ, ஹரின் ரனிலோடு உள்ளனர். எனவே அவரின் பலமும் 45 க்குள். அதில் பொன்சேக்கா கேட்பாரா என்பதை வைத்து கட்சியில் இன்னும் பிளவு வரலாம். அத்தோடு ஹரின், மனுஷ உதவியுடன் ரணில் மேலும் சில SJB உறுப்பினர்களின் ஆதரவை தன்பக்கம் திருப்பலாம். 

மைத்ரி தரப்பில் 14 பேர் உள்ளனர். இவர்களில் சுரேன் ராகவன், நிமல் சிரிபால, மஹிந்த அமரவீர ஆகியோர் கட்சியின் முடிவை மீறி கோட்டா ரணில் ஆட்சியில் அமைச்சு பதவி பெற்றவர்கள். இவர்கள் எப்போதும் நாயின் உடம்பில் உள்ள ஒட்டுண்ணி போன்றவர்கள். எனவே, கட்சி என்ன தீர்மானம் எடுத்தாலும் வெற்றி பெரும் சாத்தியம் அதிகம் உள்ள தரப்பிற்கு கை தூக்குவார்கள். 

அடுத்து சிறு கட்சிகள். JVP அநேகமாக யாரையும் ஆதரிக்காமல் விட அல்லது சஜித்க்கு ஆதரவளிக்கவே சாத்தியம் உள்ளது. சஜித்திற்கான வாய்ப்புக்கள் குறையும் நிலையில் இவர்கள் வாக்காளிக்க மாட்டார்கள் என்பதே என்னுடைய எண்ணம். 

விமல் வீரவன்ஷவின் தலைமையில் உள்ள 10 கட்சி கூட்டு அநேகமாக ரணிலுக்கு ஆதரவு வழங்க மாட்டாது. நடைபெறும் பேச்சுவார்த்தகள் எட்டப்பட்டுள்ள முடிவுகளை வைத்து பார்க்கும் போது அவர்கள் சஜித்தை ஆதரிக்கலாம். தமிழ் கட்சிகள் அநேகமாக சஜித்தை ஆதரிக்கலாம். ரணில் வேட்பாளராக வந்தால் அங்கேயும் திரும்பலாம். 

அதே போன்று SJB இல் பாராளுமன்றம் வந்தாலும் 43 ஆவது படையணி என்று தனியான பாதையில் செல்லும் சம்பிக்க ரணவக்க கூட போட்டியிடலாம் என்ற ஊகம் உள்ளது. அவரும் பல தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். வெற்றி தோல்வியை பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளே தீர்மானிக்கும். விதிவிலக்கான ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டாலே தவிர. 

பாராளுமன்றம் அநேகமாக 15 க்கும் மேற்பட்ட சிறு சிறு குழுக்களாக பிரிந்தே உள்ளது. நடப்பு பாராளுமன்றம் மக்களின் ஆணையை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்பதே உண்மை. எனவேதான் இத்தனை பிளவுகள். 

இந்த நிலையில் ஒரு கட்சி சார்பாக ஒரு வேட்பாளர் களம் இறங்கினால் அவரின் கட்சியில் இருப்பவர்களே அவருக்கு வாக்காளிப்பார்களா என்ற சந்தேகமே எழுகின்றது. 

பெரும்பாலும் ரணில், டலஸ், சஜித் ஆகிய மூவருக்கும் இடையேயான மும்முனைப் போட்டியாக இது அமையலாம். இவர்களில் இரண்டு பேர் ஆதரவு தேடித் திரிய மற்றவர் அந்த ரெண்டுபேருக்கும் எதிராக உள்ளோரை தன் கூடையில் போட்டு பதவி பெரும் வாய்ப்பே அதிகம் உள்ளது. காலம் பதில் சொல்லும். 

எவர் வந்தாலும் மக்களின் அவலம் விரைவாக தீர்ந்தால் சரி. 
-  Fayas M. A. Fareed.
இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாகும் வாய்ப்பு யாருக்கு? இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாகும் வாய்ப்பு யாருக்கு? Reviewed by Irumbu Thirai News on July 15, 2022 Rating: 5

உயர்தர பரீட்சை பெறுபேறு, பரீட்சைக்கான திகதிகள், விண்ணப்ப திகதிகள் தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளரின் அறிவித்தல்

July 15, 2022


உயர்தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிடல் மற்றும் இந்த வருடத்திற்கான பரீட்சைகளுக்கான விண்ணப்பம் கோரல் மற்றும் பரீட்சைகள் நடத்தப்படும் திகதிகள் என்பன தொடர்பாக பல்வேறு விடயங்களை பரீட்சைகள் ஆணையாளர் எல்எம்டி தர்மசேன தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் எதிர்வரும் மாதம் (ஆகஸ்ட்) நடுப்பகுதி அளவில் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.


தற்போதைய பல்வேறு நெருக்கடி நிலைமைகளின் காரணமாக பெறுபேறுகளை வெளியிடுவது தாமதமாகி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.


மேலும் இந்த வருடத்திற்குரிய உயர்தர பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 28ஆம் தேதி ஆரம்பமாகி டிசம்பர் 23ஆம் தேதி வரை நடைபெறும். அதற்கான விண்ணப்பங்கள் இந்த மாதம் 18 முதல் ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி வரை அனுப்பலாம்.


இதேவேளை இந்த வருடத்திற்குரிய தரம் 05 புலமை பரிசில் பரீட்சை நவம்பர் 27ஆம் தேதி நடாத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.


மேலும் இந்த வருடத்திற்குரிய சாதாரண பரீட்சை அடுத்த வருட முற்பகுதியில் நடைபெறும்.


இந்த பரீட்சைகள் தீர்மானிக்கப்பட்டவை நாட்டின் நிலைமைகள் சுமுகமானது என்ற அடிப்படையில். நிலைமைகள் மாறினால் இந்த பரீட்சைக்கான திகதிகளையும் மாற்ற வேண்டி ஏற்படும்.


கடந்த காலங்களில் பல்வேறு நெருக்கடிகளுக்கும் சவால்களுக்கும் முகம் கொடுத்து பிள்ளைகளின் பரீட்சைகளை நடத்த பரீட்சை திணைக்களத்தால் முடிந்தது. அதே மாதிரி எதிர்வரும் காலங்களிலும் பிள்ளைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த பரீட்சைகள் நடாத்தப்படும். 


எவ்வாறாயினும் கொரோனா பரவல் காரணமாக இரண்டு வருடங்களாக சிக்கலடைந்த பரீட்சை நேரசூசி எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு முதல் உரிய முறைப்படி முன்னர் செய்யப்பட்ட விதத்திலேயே நடத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

உயர்தர பரீட்சை பெறுபேறு, பரீட்சைக்கான திகதிகள், விண்ணப்ப திகதிகள் தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளரின் அறிவித்தல்  உயர்தர பரீட்சை பெறுபேறு, பரீட்சைக்கான திகதிகள், விண்ணப்ப திகதிகள் தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளரின் அறிவித்தல் Reviewed by Irumbu Thirai News on July 15, 2022 Rating: 5

பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் திகதியை அறிவித்தது கல்வி அமைச்சு! (அறிவித்தல் இணைப்பு)

July 15, 2022


நாட்டிலுள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் ஆரம்பமாகும் திகதியை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

அந்த வகையில் இம்மாதம் 21ஆம் தேதி வியாழக்கிழமை பாடசாலைகள் மீள ஆரம்பமாகும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. 


கல்வி அமைச்சின் கடந்த வார அறிவித்தலின் பிரகாரம் இம்மாதம் 18 ஆம் தேதி அதாவது திங்கட்கிழமை பாடசாலைகள் ஆரம்பமாக இருந்தன.


இன்று காலை இது தொடர்பில் Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக நடைபெற்ற கூட்டத்தில் கல்வி அமைச்சின் செயலாளர், மேலதிக செயலாளர், தேசிய பாடசாலைகளுக்கான பணிப்பாளர், மாகாண கல்வி செயலாளர், மாகாண கல்வி பணிப்பாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். 


தற்போதைய எரிபொருள் நெருக்கடி மற்றும் போக்குவரத்து பிரச்சினை என்பவற்றை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


கல்வி அமைச்சின் குறித்த அறிவித்தலைக் கீழே காணலாம்.பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் திகதியை அறிவித்தது கல்வி அமைச்சு! (அறிவித்தல் இணைப்பு) பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் திகதியை அறிவித்தது கல்வி அமைச்சு! (அறிவித்தல் இணைப்பு) Reviewed by Irumbu Thirai News on July 15, 2022 Rating: 5

கோதாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியிலிருந்து விலகும் உத்தியோகபூர்வ அறிவிப்பு! (அறிவித்தலின் தமிழ் மொழிபெயர்ப்பும் வீடியோவும் இணைப்பு)

July 15, 2022


கோதாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியிலிருந்து விலகும் உத்தியோபூர்வ அறிவிப்பை சற்று நேரத்திற்கு முன்னர் சபாநாயகர் மஹிந்தயாபா அபேவர்தன வெளியிட்டுள்ளார். 

அவர் வெளியிட்ட அறிவிப்பை இங்கே தருகிறோம்.

கோதாபய ராஜபக்ஷ அவர்களின் பதவி விலகல் கடிதம் என்னிடம் கிடைக்கப்பெற்றுள்ளது. 2022-07-14ம் திகதியிலிருந்து ஜனாதிபதி அவர்கள் தனது பதவியிலிருந்து உத்தியோபூர்வமாக விலகி உள்ளார். 


இப்போதிலிருந்து புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பமாகிறது. இந்த நடவடிக்கை நிறைவு பெறும் வரை அரசியல் யாப்பின் அடிப்படையில் பிரதமர் அவர்கள் பதில் ஜனாதிபதியாக கடமையாற்றுவார். 


புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதானது, கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் என்னால் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது போல் 1981 ம் ஆண்டு 2ம் இலக்க ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான விசேட ஏற்பாடுகள் கொண்ட சட்டம் மற்றும் அரசியல் யாப்பின் 40 ஆம் சரத்திற்கு அமைய இடம்பெறும். இந்த செயற்பாட்டை மிகவும் விரைவாகவும் வெற்றிகரமாகவும் நிறைவு செய்வது எனது நோக்கம். 


தெற்காசியாவின் மிகப் பழமை வாய்ந்த ஜனநாயக நாடு என்று பெருமைப்படும் நாம், இந்த விடயத்தை உயர்ந்த ஜனநாயக வரம்புக்குள் நிறைவேற்றுவது எமக்கு மட்டுமல்ல உலக அரசியல் வரலாற்றிலும் முக்கிய நிகழ்வாக இருக்கும். 


அந்த வகையில் இந்த ஜனநாயக செயற்பாட்டுக்கு உயர்ந்த முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு பிரதானிகளுக்கும் நான் வேண்டுகோள் விடுகிறேன். 


விசேடமாக எமது நாட்டின் கௌரவமான அன்பான பிரஜைகளிடம் நான் வேண்டிக் கொள்வது, உரிய ஜனநாயக முறைப்படி பாராளுமன்ற செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் சுதந்திரமாகவும் தமது மனசாட்சி படியும் தமது செயற்பாடுகளை மேற்கொள்வதற்கும் கூட்டங்களில் கலந்து கொள்வதற்கும் அவசியமான சுமுகமான நிலைமையை ஏற்படுத்த வேண்டும். 


இவ்வாறான சுமுகமான நிலைமையின் கீழ் 07 நாட்கள் என்ற மிகக் குறுகிய காலத்தினுள் இந்த செயற்பாட்டை நிறைவு செய்ய சம்பந்தப்பட்ட சகல தரப்பினரிடமும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுகிறேன். 


அந்த வகையில் 2022-07-16ம் திகதி சனிக்கிழமை பாராளுமன்ற கூட்டப்படும் எனவே சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகிறேன். இது தொடர்பாக நீங்கள் அனைவரும் வழங்கும் ஒத்துழைப்பிற்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். என்று தனது அறிவித்தலில் தெரிவித்துள்ளார்.


சபாநாயகரின் இந்த அறிவிப்பு தொடர்பான வீடியோவை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.

https://youtu.be/RxtjnoPmZzQகோதாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியிலிருந்து விலகும் உத்தியோகபூர்வ அறிவிப்பு! (அறிவித்தலின் தமிழ் மொழிபெயர்ப்பும் வீடியோவும் இணைப்பு) கோதாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியிலிருந்து விலகும் உத்தியோகபூர்வ அறிவிப்பு! (அறிவித்தலின் தமிழ் மொழிபெயர்ப்பும் வீடியோவும் இணைப்பு) Reviewed by Irumbu Thirai News on July 15, 2022 Rating: 5

General Convocation Postponed (University of Colombo)

July 15, 2022


இம்மாதம் 15, 16 ஆகிய தினங்களில் நடைபெறவிருந்த கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளது.


 

General Convocation Postponed (University of Colombo) General Convocation Postponed (University of Colombo) Reviewed by Irumbu Thirai News on July 15, 2022 Rating: 5

கோதாபயவின் ராஜினாமா கடிதம் தொடர்பில் சபாநாயகர் விடுத்துள்ள அறிவிப்பு! (குறித்த அறிவித்தல் இணைப்பு)

July 14, 2022


இலங்கைக்கான சிங்கப்பூர் தூதுவர் அலுவலகத்தின் ஊடாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் ராஜினாமா கடிதம் சபாநாயகருக்கு கிடைக்க பெற்றுள்ளது. இதன் நம்பகத்தன்மை மீண்டும் பரீட்சிக்கப்படுவதுடன் இது தொடர்பான சட்ட நடைமுறைகள் முடிவடைந்ததன் பின்னர் நாளைய தினம் பதவி விலகல் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என சபாநாயகரின் ஊடகப் பிரிவு  அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த ஊடக அறிவித்தலை கீழே காணலாம்.கோதாபயவின் ராஜினாமா கடிதம் தொடர்பில் சபாநாயகர் விடுத்துள்ள அறிவிப்பு! (குறித்த அறிவித்தல் இணைப்பு) கோதாபயவின் ராஜினாமா கடிதம் தொடர்பில் சபாநாயகர் விடுத்துள்ள அறிவிப்பு! (குறித்த அறிவித்தல் இணைப்பு) Reviewed by Irumbu Thirai News on July 14, 2022 Rating: 5

கோத்தாபய சிங்கப்பூர் சென்ற விமானம்: படைத்தது வரலாற்று சாதனை!

July 14, 2022


கோதாபய ராஜபக்ஷ மாலைதீவிலிருந்து சிங்கப்பூருக்கு சென்ற விமானம் வரலாற்று சாதனை படைத்துள்ளது. அதாவது உலகில் அதிகமான நபர்களால் கண்காணிக்கப்பட்ட விமானம் என்ற சாதனையை படைத்துள்ளது. 


விமானங்களின் கண்காணிப்பு தொடர்பான தகவல்களை வழங்கும் இணையத்தளமான Flightradar24.com  என்ற தளத்தின் தகவல்களின்படி மாலைதீவின் மாலேயிலிருந்து சிங்கப்பூர் நோக்கி புறப்பட்ட சவுதி அரேபியாவுக்கு சொந்தமான Saudia SV- 788  என்ற விமானம் 12,200 ற்கும் அதிகமான பேரால் கண்காணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகள் உலகின் கவனத்தையே திருப்பியுள்ளது என்பதற்கு இந்த விடயம் நல்ல சான்று என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


இதே வேளை கோதாபய ராஜபக்ச சென்ற விமானம் சிங்கப்பூர் நேரப்படி இரவு 7.17 க்கு தரையிறங்கியுள்ளது. 


இதேவேளை கோதாபயவின் வருகை தொடர்பில் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில்,


கோட்டாபய தனிப்பட்ட பயணமாகவே சிங்கப்பூர் வருகை தந்துள்ளார். அவர் எவ்வித அரசியல் தஞ்சமோ புகழிடமோ கோரவில்லை. அவ்வாறு அரசியல் புகழிடம் சிங்கப்பூரால் பொதுவாக வழங்கப்படுவதும் இல்லை. அவர் சிங்கப்பூரில் எவ்வளவு காலம் தங்குவார் என தெரியவில்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோத்தாபய சிங்கப்பூர் சென்ற விமானம்: படைத்தது வரலாற்று சாதனை! கோத்தாபய சிங்கப்பூர் சென்ற விமானம்: படைத்தது வரலாற்று சாதனை! Reviewed by Irumbu Thirai News on July 14, 2022 Rating: 5

60 தோட்டாக்களுடன் ராணுவ வீரரின் துப்பாக்கியை காணவில்லை! இன்னும் மாலைதீவை விட்டு செல்லாத ஜனாதிபதி! இலங்கையில் தொடரும் பரபரப்பு!

July 14, 2022


நேற்றிரவு பத்தரமுல்ல பொல்துவ சந்திக்கு அருகாமையில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு தரப்பினருக்குமிடையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த பலர்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  மேலும் இதில் ராணுவ வீரர் ஒருவரும் போலீஸ் உத்தியோகத்தர் ஒருவரும் அடங்குவதாக போலீஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.


இதில் பலத்த காயங்களுக்கு உள்ளான போலீஸ் அதிகாரி கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து நாரஹேண்பிட்ட போலீஸ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


மேலும் இதன் போது வெல்லவாய ராணுவ முகாமில் கடமையாற்றும் ராணுவ வீரர் ஒருவரின் துப்பாக்கியானது 60 தோட்டாக்களுடன் ஆர்ப்பாட்டக்காரர்களால் பறித்தெடுக்கப்பட்டுள்ளது. 


கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தகவல்களின்படி, நேற்று பல்வேறு இடங்களில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் காயமடைந்த 79 ஆண்களும் 05 பெண்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதே வேலை சிங்கப்பூர் சென்றதும் ராஜினாமா கடிதத்தை அனுப்புவதாக கோதாபய ராஜபக்ஷ தெரிவித்ததாக செய்திகள் வெளியானாலும் இன்னமும் அவர் மாலைதீவில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 


கோத்தாபயவிற்கு பாதுகாப்பு வழங்கி அடைக்கலம் கொடுத்தமைக்கு மாலைதீவின் எதிர்க்கட்சி ஆளும் கட்சியை வன்மையாக கண்டித்துள்ளது. 


மேலும் கோதாபையவை மாலை தீவில் இருந்து உடனடியாக வெளியேற்றுமாறு கோரி மாலைதீவில் உள்ள இலங்கையர்கள் அங்குள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர். இதன் போது இருவர் கைது செய்யப்பட்டனர். 


நேற்றைய தினம் மாலைதீவிலிருந்து சிங்கப்பூர் செல்வதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் மாலைதீவின் வேலானா சர்வதேச விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தாலும் சிங்கப்பூர் செல்லும் இரு விமானங்களை நிராகரித்து அதில் செல்லாமல் அங்கேயே தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 


இதேவேளை இலங்கையில் நாடு பூராகவும் போடப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு இன்று அதிகாலை ஐந்து மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளது.


இலங்கையின் ஒவ்வொரு நிமிடமும் பலத்த எதிர்பார்ப்புகளுக்கும் சவால்களுக்கும் மத்தியில் நகருகிறது. சரியான முடிவுகள் எடுக்கப்பட்டு அமைதியான நிலைமை திரும்ப வேண்டும் என்பதே சகலரினதும் பிரார்த்தனையாகும்.

60 தோட்டாக்களுடன் ராணுவ வீரரின் துப்பாக்கியை காணவில்லை! இன்னும் மாலைதீவை விட்டு செல்லாத ஜனாதிபதி! இலங்கையில் தொடரும் பரபரப்பு! 60 தோட்டாக்களுடன் ராணுவ வீரரின் துப்பாக்கியை காணவில்லை! இன்னும் மாலைதீவை விட்டு செல்லாத ஜனாதிபதி! இலங்கையில் தொடரும் பரபரப்பு! Reviewed by Irumbu Thirai News on July 14, 2022 Rating: 5

வர்த்தமானியும் வெளியானது! நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு! கடும் பரபரப்புக்கு மத்தியில் இலங்கை!

July 13, 2022


பிரதமர் ரனில் விக்ரமசிங்கவை பதில் ஜனாதிபதியாக நியமித்து அதிவிஷேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. கோதாபய ராஜபக்சவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

தான் வெளிநாட்டில் இருப்பதால் தனது கடமைகளை நிறைவேற்ற முடியாத நிலையில் இருப்பதாலும் எனவே வெளிநாட்டில் இருக்கும் காலம் வரை தனது கடமைகளை நிறைவேற்றும் பொருட்டு தற்போதைய பிரதமர் ரனில் விக்ரமசிங்கவை பதில் ஜனாதிபதியாக நியமிக்கிறேன் என அந்த விஷேட வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை மாலைதீவிற்கு சென்ற கோத்தாபய ராஜபக்ஷ அங்கிருந்து சிங்கப்பூர் செல்வதாகவும் சிங்கப்பூரை சென்றடைந்ததும் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்புவார் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இன்றைய தினம் நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவிக்கையில் இன்றைய தினத்திற்குள் ஜனாதிபதியின்  ராஜினாமா கடிதம் கிடைக்காவிட்டால் தான் சபாநாயகர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். 

இதேவேளை கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு முப்படை தளபதிகள் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் அந்தக் கூட்டத்திற்கு சமூகமளிக்க முன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளனர். அந்த சந்திப்பின்போது அவர்களும் ரணில் விக்ரமசிங்கவை பதவி விலகும் படி கூறியுள்ளனர். பின்னர் அவர்கள் கூட்டத்திற்கு வருகை தந்தனர் ஆனால் ரணில் விக்ரமசிங்க வரவில்லை. தற்போதைய நிலையில் பாராளுமன்றத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் அண்மித்துள்ளதாகவும் அவர்கள் பாராளுமன்றத்தை சுற்றி வளைத்துள்ளதாகவும் எனவே பாராளுமன்றத்திற்கு தாக்குதல்கள் நடத்தப்பட்டால் மீண்டும் பதில் தாக்குதல் நடத்துவதற்கு அனுமதி தருமாறு கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் முப்படை தளபதிகள் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அந்தக் கோரிக்கை கட்சி தலைவர்களினால் நிராகரிக்கப்பட்டதாகவும் எதிர்க்கட்சி பிரதம அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

இது மாத்திரமின்றி அரசாங்கமும் எதிர்க்கட்சியும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நபர் ஒருவரை பிரதமராக பெயரிடுமாறு தற்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சபாநாயகருக்கு அறிவித்துள்ளார். சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கும் வகையிலேயே இவ்வாறு பிரதமர் ஒருவரை பெயரிடுமாறு அவர் தெரிவித்துள்ளார். 

இதேவேளை கடந்த 9ம் தேதி கூட்டத்தின் போது ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஆளும் கட்சியை சேர்ந்தவரும் பலராலும் ஏற்றுக்கொள்ளப்படுவதாக கருதப்படுகின்ற பாராளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழகபெரும தெரிவித்துள்ளார். அதாவது ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலக வேண்டும். சபாநாயகர் பதில் ஜனாதிபதியாக பொறுப்பேற்க வேண்டும் என்பதே கடந்த 9ம் திகதி நடைபெற்ற கட்சி தலைவர்களின் அவசர கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் ஆகும்.

இது மாத்திரமன்றி தற்போது புரட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் காணப்படும் பிரதமரின் காரியாலயம் உடனடியாக ஆர்ப்பாட்டக்காரர்களால் விடுவிக்கப்பட வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அமைதியான ஆர்ப்பாட்டத்திற்கு தாம் எப்போதும் பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகவும் ஆனால் அரச அலுவலகங்களை கைப்பற்றி சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை ரணில் விக்ரமசிங்க உடனடியாக ராஜினாமா செய்து சர்வ கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு வழி ஏற்படுத்த வேண்டும். மேலும் நாட்டின் நிர்வாகத்தை சபாநாயகருக்கு பொறுப்பு கொடுக்க வேண்டும். கடந்த ஒன்பதாம் தேதி ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய செயல்பட வேண்டும் என அரசாங்கத்திலிருந்து அண்மையில் விலகி சுயாதீனமாக செயல்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் அமைப்பு கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளது.

இது மாத்திரமன்றி தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவிக்கையில் தற்போதைய நெருக்கடியான நிலைமைக்கு பாராளுமன்றத்தால் தீர்வு காண முடியும். எனவே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் பாராளுமன்றத்தையோ சபாநாயகரின் இல்லத்தையோ முற்றுகையிடுவதை தவிர்க்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சற்று நேரத்திற்கு முன் சபாநாயகரின் உத்தியோபூர்வ இல்லத்திற்கு அண்மையிலும் போராட்டக்காரர்கள் கூடியமையால் அங்கு கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் பிரயோகம் என்பன மேற்கொள்ளப்பட்டு கடும் பதற்ற நிலை தோன்றியது.

இதேவேளை மேல் மாகாணத்திற்கு மாத்திரம் போடப்பட்டிருந்த ஊரடங்கு தற்போது நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை அதிகாலை 5 மணி வரை இந்த ஊரடங்கு உத்தரவு முழு நாட்டிற்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போதைய பதில் ஜனாதிபதியும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவினால் இந்த ஊரடங்கு உத்தரவுக்கான அதிவிசேட வர்த்தமானி சற்று நேரத்திற்கு முன் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் ஒவ்வொரு நிமிடமும் கடும் பரபரப்புக்கு மத்தியிலும் போராட்டங்களுக்கு மத்தியிலும் கழிகின்றது. நல்ல முடிவுகள் எட்டப்பட்டு சுமூகமான நிலை உருவாக வேண்டும் என்பதே அனைவரினதும் பிரார்த்தனையாகும்.

வர்த்தமானியும் வெளியானது! நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு! கடும் பரபரப்புக்கு மத்தியில் இலங்கை! வர்த்தமானியும் வெளியானது! நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு! கடும் பரபரப்புக்கு மத்தியில் இலங்கை! Reviewed by Irumbu Thirai News on July 13, 2022 Rating: 5

ஜனாதிபதி மாலைதீவுக்கு சென்றமை தொடர்பில் விமானப்படை வெளியிட்ட அறிக்கை! (விமானப்படையின் அறிக்கை இணைப்பு)

July 13, 2022

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மாலைதீவுக்கு சென்றமை தொடர்பில் இலங்கை விமானப்படை அறிக்கையை வெளியிட்டுள்ளது. 

அந்த அறிக்கையில், 

ஜனாதிபதியும் அவரது மனைவியும் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு இலங்கை விமானப்படைக்கு சொந்தமான AN 32 வகையைச் சேர்ந்த விமானத்தை வழங்கியமை இலங்கையின் அரசியல் யாப்பிற்கு உட்பட்ட விடயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் குறித்த விமானம் பாதுகாப்பு அமைச்சின் பூரண அனுமதிக்கு உட்பட்டு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு உரித்தான குடிவரவு குடியகல்வு மற்றும் சுங்க சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டே விமான நிலையத்திலிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை அந்த விமானத்தில் ஜனாதிபதி மற்றும் அவரது மனைவி அயோமா ராஜபக்ஷ மேலும் இரு பாதுகாப்பு அதிகாரிகளும் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறியமையை பிரதமர் அலுவலகமும் உறுதிப்படுத்தியுள்ளது. 

ஜனாதிபதி பதவி விலகியதை சபாநாயகர் உத்தியோபூர்வமாக அறிவித்ததும் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

அதாவது தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்காலிக ஜனாதிபதியாகப் பதவியேற்பதா? அல்லது சபாநாயகர் தற்காலிக ஜனாதிபதியாக பதவி ஏற்பதா என்பது தொடர்பில் இதுவரை தீர்க்கமான முடிவு எட்டப்படவில்லை. 

எவ்வாறாயினும் பிரதமர் ரனில் விக்ரமசிங்கவை தற்காலிக ஜனாதிபதியாக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

ஆனால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கமும் பதவி விலக வேண்டும் என்று புரட்சியாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் அடுத்த கட்ட ஒவ்வொரு நகர்வையும் முழு உலகமும் அவதானித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் சகலரினதும் எதிர்பார்ப்பு நாட்டுக்கு நல்ல முடிவுகள் எட்டப்பட வேண்டும் என்பதே!

விமானப்படை வெளியிட்ட அறிக்கையை கீழே காணலாம்.ஜனாதிபதி மாலைதீவுக்கு சென்றமை தொடர்பில் விமானப்படை வெளியிட்ட அறிக்கை! (விமானப்படையின் அறிக்கை இணைப்பு) ஜனாதிபதி மாலைதீவுக்கு சென்றமை தொடர்பில் விமானப்படை வெளியிட்ட அறிக்கை! (விமானப்படையின் அறிக்கை இணைப்பு) Reviewed by Irumbu Thirai News on July 13, 2022 Rating: 5
Powered by Blogger.