ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகி ரணில் விக்கிரமசிங்ஹ பதில் ஜனாதிபதியாக கடமையேற்றுக் கொண்டார். ஜனாதிபதியின் பதவி விலகல் இன்றைய தினம் அறிவிக்கப்பட்டாலும் 14 ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையிலேயே அவர் இராஜினாமா செய்துள்ளார். எனவே, ஆகஸ்ட் மாதம் 13 ஆம் திகதிக்கு முன்னர் அடுத்த ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் பொறுப்பு பாராளுமன்றத்திற்கு உள்ளது.
இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ஜே.ஆர். ஜெயவர்த்தன 1978 ல் பதவியேற்ற பின் வரலாற்றில் இரண்டாம் முறையாக தனது பூரண பதவிக் காலத்தை நிறைவு செய்ய முன்னர் ஜனாதிபதி பதவி வெற்றிடமாகி உள்ளது. 1993 மே ௦1 ஆம் திகதி குண்டு வெடிப்பில் ஜனாதிபதி ஆர். பிரேமதாஸ கொல்லப்பட்டமையினால் ஒருமுறை வெற்றிடமானது. அப்போது பிரதமராக இருந்த டி.பி. விஜேதுங்க பதில் ஜனாதிபதியானார். அது ஜனாதிபதியின் மரணத்தின் காரணமாக ஏற்பட்ட வெற்றிடமாகும். ஆனால் ஜனாதிபதியொருவர் ராஜினாமா செய்ததால் வெற்றிடம் ஏற்படுவது இதுவே முதல் தடவையாகும்.
அப்போதெல்லாம் கட்சி என்பது ஒரு கட்டுக் கோப்பில் இருக்கும். அதே போன்று கட்சியில் முக்கிய இரண்டாம் கட்டத் தலைவர்களாக இருந்த லலித், காமினி போன்றோர் வெளியேறி இருந்தமை (லலித் கொல்லப்பட்டிருந்தார்) போன்றவற்றால் டி.பி. விஜெதுங்கவுக்கு போட்டி எதுவும் இருக்கவில்லை. பிரேமதாஸவின் வலது கையாக இருந்த சிறிசேன குரே போன்றவர்களை ஓரம் கட்டிய ரணில் முன்னே வந்து டி.பி. விஜதுங்கவை முன்மொழிந்து ஜனாதிபதியாக்கினார். ஆளும் கட்சிக்கு தேவையான பலம் அப்போது இருத்தது. குழப்ப நிலை இருக்கவும் இல்லை.
ஆனால் இப்போதைய நிலை மாறுபட்டது. சமூக வலைத்தளங்கள், இலத்திரனியல் ஊடகங்கள் வளர்ந்து விட்ட இந்தக் காலத்தில் எம்பிக்களின் ஒவ்வொரு நகர்வும் மக்களால் அவதானிக்கப்படுகிறது. மக்கள் நிறைய தேடித் தெரிந்து கொண்டுள்ளனர். 1993 ல் போன்று புதிய ஜனாதிபதி இவர்தான் என்று ரேடியோவில் சொல்வதைக் கேட்டுக் கொண்டு செல்லும் மனநிலையில் மக்கள் இல்லை. யாப்பு என்ன சொல்கிறது? அதன் அடிப்படையில் எல்லாம் நடைபெறுகிறதா? என்பது போன்ற பல விடயங்களை மக்கள் தேடுகிறார்கள்.
அதன் அடிப்படையில் தற்போதைய நிலை தொடர்பில் யாப்பு என்ன சொல்கிறது என்பது குறித்து இந்த கட்டுரையின் அடுத்து வரும் பகுதிகள் அமையும்.
பதவிக் காலம் முடியும் முன்னர் ஜனாதிபதி ஒருவரின் பதவி வெற்றிடமாதல் தொடர்பில் அரசியல் யாப்பின் 38 ஆம் பிரிவில் சொல்லப்பட்டுள்ளது.
38-1 ஜனாதிபதி பதவி பின்வரும் சூழ்நிலைகளில் வெற்றிடமாகும்.
அ) அவர் இறப்பதன் மேல்.
ஆ) அவர், சபாநாயகருக்கு முகவரியிட்டனுப்பும் தம்கைப்பட்ட கடிதத்தின் மூலம் பதவியைத் துறந்தால்.
இ) அவர் இலங்கையின் ஒரு பிரசையாக இல்லாதொழிந்தால்.
ஈ) ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட ஆள், தமது பதவிக் காலம் தொடங்கிய திகதியிலிருந்து இரு வாரங்களுக்குள் வேண்டுமென்றே பதவியேற்கத் தவறினால்.
உ) அவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டால். (அது தொடர்பான விபரங்கள் ஊ பிரிவில் சொல்லப்பட்டுள்ளது. அத்தோடு 38-2, 39 என்பவற்றின் கீழ் நீக்குதல் பற்றியும் சொல்லப்பட்டுள்ளது. தற்போது அவை அவசியம் இல்லை என்பதால் இக்கட்டுரை அது குறித்துப் பேசவில்லை.)
யாப்பின் அடிப்படையில் 38 இன் 1 ஆ பிரிவின் கீழ் சபாநாயகருக்கு அனுப்பிய கடிதம் மூலமே கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியுள்ளார். எனவே, பதவி வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.
இத்தகைய சந்தர்ப்பம் உருவானால் அடுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து யாப்பின் 40 ஆம் பிரிவு விபரிக்கின்றது.
40-1 (அ)
ஜனாதிபதியின் பதவி அவரது பதவிக்காலம் முடிவடையும் முன்பாக வெற்றிடமானால், பாராளுமன்றம் ஜனாதிபதி என்ற பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு தகைமையுடையவராகவுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை ஜனாதிபதியாக தெரிவு செய்தல் வேண்டும். ஜனாதிபதி பதவிக்கு அவ்வாறு வரும் ஆள் எவரும், பதவியை வெற்றிடமாக்கிச் செல்கின்ற ஜனாதிபதியின் பதவிக் காலத்தில் முடிவுறாது எஞ்சியுள்ள காலத்திற்கு மட்டுமே பதவி வகித்தல் வேண்டும்.
ஆ) அத்தகைய தேர்தல் வெற்றிடம் ஏற்பட்ட பின்னர் இயன்றளவு விரைவாகவும், எச்சந்தர்ப்பத்திலும் வெற்றிடம் ஏற்பட்ட திகதியிலிருந்து ஒரு மாதத்துக்கு பிந்தாமலும் நடாத்தப்படல் வேண்டும். பாராளுமன்றம் சட்டத்தினால் ஏற்பாடு செய்யக் கூடியவாறான அத்தகைய நடவடிக்கை முறைக்கிணங்க அத்தகைய தேர்தல் இரகசிய வாக்களிப்பு மூலம் அளிக்கபட்ட வாக்குகளின் பூரண பெரும்பான்மை மூலம் நடைபெற வேண்டும். ஆயினும் அத்தகைய வெற்றிடம் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் ஏற்பட்டால் ஜனாதிபதியானவர் புதிய பாராளுமன்றத்தின் முதல் கூட்டம் நடைபெற்ற திகதியிலிருந்து ஒரு மாத காலத்துக்குள் பாராளுமன்றத்தினால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
இ) அத்தகைய வெற்றிடம் ஏற்பட்ட திகதியில் இருந்து புதிய ஜனாதிபதி பதவி ஏற்கும் காலம் வரை பிரதமர் ஜனாதிபதி பதவியின் பதிற்கடமை ஆற்ற வேண்டும் என்பதுடன், பிரதமர் பதவியில் கடமையாற்றுவதற்கென அமைச்சரவையின் ஏனைய அமைச்சர்களுள் ஒருவரை நியமிக்கலாம்.
ஆயினும், அந்த நேரம் பிரதமர் பதவி வெற்றிடமாக இருக்கும் பட்சத்தில் அல்லது பிரதமர் பதிற்கடமையாற்றுவதற்கு இயலாதவராக இருபாரெனின், ஜனாதிபதி பதவியில் சபாநாயகர் பதிற்கடமையாற்ற வேண்டும்.
2. ஜனாதிபதி பற்றிய அரசியலமைப்பின் ஏற்பாடுகள் ( 32 ஆம் உறுப்புரையின் (2) ஆம் பத்தியின் ஏற்பாடுகள் நீங்கலாக - பதவியேற்கும் ஜனாதிபதியின் பதவியேற்றதன் மேல் அரசியலமைப்பினால் உருவாக்கப்பட்ட அல்லது ஏற்றுக் கொள்ளப்பட்ட வேறேதேனும் பதவியை வகிக்காதொழிதல் வேண்டும் என்பதுடன், அவர் பாராளுமன்றத்தின் உருப்பினராகவிருப்பின் பாராளுமன்றத்தின் அவரது ஆசனம் வெற்றிடமாகும். ஜனாதிபதி எப்பதவியையேனும் எத்தகையதுமான இலாபந்தரும் பதவியையேனும் வகித்தலாகது.) அவற்றை ஏற்புடையதாக்கக் கூடிய அளவுக்கு பதில் ஜனாதிபதிக்கும் ஏற்புடையனவாதல் வேண்டும்.
3. ஜனாதிபதியைப் பாராளுமன்றம் தேர்ந்தெடுத்தலுக்கான நடவடிக்கை முறை பற்றிய எல்லாக் கருமங்களுக்கும், அவற்றுக்கு அவசியமான அல்லது அவற்றின் இடைநேர் விளைவான ஏனைய எல்லாக் கருமங்களுக்கும் சட்டத்தின் மூலம் பாராளுமன்றம் ஏற்பாடு செய்யதல் வேண்டும்.
மேற்படி யாப்பில் இருந்து பெறப்பட்ட விபரங்களின் அடிப்படையில் பின்வரும் விடயங்களை சுருக்கமாக விளங்கலாம்.
(1) 38 இன் 1 ஆ பிரிவின் கீழ் சபாநாயகருக்கு அனுப்பிய கடிதம் மூலமே கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியுள்ளார். எனவே, பதவி வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.
(2) 40 - 1 இ பிரிவின் அடிப்படையில் பிரதமரான ரனில் விக்ரமசிங்ஹ பதில் ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்டுள்ளார்.
(3) 40 - 2 இன் அடிப்படையில் ஜனாதிபதியானமை காரணமாக ரணில் விக்ரமசிங்ஹவின் பாராளுமன்ற ஆசனம் வெற்றிடமாக மாட்டாது. அதாவது 32 ஆம் உறுப்புரையின் (2) ஆம் பத்தியின் ஏற்பாடுகளில் இருந்து விடுப்பு அளிக்கப்படுகிறது.
(4) 40 - 1 இ இன் அடிப்படையில் தற்போதைய (அதாவது கோட்டாபய ராஜபக்ஷவின்) அமைச்சரவையில் உள்ள ஏதேனும் ஒரு கபினட் அமைச்சரை பதில் பிரதமராக நியமிக்க ரணில் விக்ரமசிங்ஹவுக்கு அதிகாரம் உள்ளது.
(5) 40 - 1 அ வின் அடிப்படையில் எதிர்வரும் ஆகஸ்ட் 13 ஆம் திகதிக்குள் பாராளுமன்றம் கூடி புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்தல் வேண்டும்.
(6) 40 - 2 இன் அடிப்படையில் ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களிடையே நடைபெறும் வாக்கெடுப்பு தொடர்பான விடயங்களை பாராளுமன்றமே செயற்படுத்தும். அதன் அடிப்படையிலேயே 20 ஆம் திகதி வாக்கெடுப்பு என்று பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
(7) 40 - 1 ஆ வின் அடிப்படையில் ஒருவருக்கு மேற்பட்டோர் போட்டியிட்டால் மட்டுமே இரகசிய வாக்கெடுப்பு நடாத்தப்படும். அந்த வாக்கெடுப்பில் அன்றைய தினம் வாக்களிக்கும் உறுப்பினர்களில் 50% ஆனோரும் மேலதிகமாக ஒருவரும் வாக்களித்து தெரிவு செய்யும் வேட்பாளர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்.
(8) 38 இன் 1 ஈ இன் கீழ் அவர் 14 நாட்களுக்குள் 32 ஆம் பிரிவின் 1 ல் குறிப்பிட்டுள்ளவாறு பதவிப் பிரமாணம் செய்ய வேண்டும்.
(9) அவ்வாறு தெரிவு செய்யப்படும் ஜனாதிபதியின் பதவிக்காலம் 2024 நவம்பர் 17 வரையானதாகும்.
யாப்பில் உள்ளதன் சாராம்சமே இது. இவை தவிர ஜனாதிபதி ஒருவரைத் தேர்ந்தெடுத்தல் தொடர்பில் பாராளுமன்றத்தால் உருவாக்கப்பட்டுள்ள சட்டங்களும் இந்த தெரிவில் செல்வாக்குச் செலுத்தும்.
- Fayas M.A. Fareed.
Related:
ஜனாதிபதி தெரிவு குறித்து யாப்பு என்ன சொல்கிறது? ஒரு சுருக்கப் பார்வை....
Reviewed by Irumbu Thirai News
on
July 16, 2022
Rating:
Reviewed by Irumbu Thirai News
on
July 16, 2022
Rating:

No comments: