கடந்து வந்த பாதையும் கடக்கவுள்ள பாதையும்...
Irumbu Thirai News
July 20, 2022
1993 ஆர். பிரேமதாச குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட பின்னர் டீ. பி விஜேதுங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட அப்போதைய சபை முதல்வராக இருந்த ரனில் பிரதமராக நியமிக்கப்படுகிறார்.
அதன் பின் கட்சியிலிருந்து பிரிந்து சென்றிருந்த காமினி திஸாநாயக்க போன்றவர்களும் கட்சியில் இணைய கட்சி பலம் பெற்ற போதிலும் சந்திரிக்கா அலையில் அள்ளுண்டு போனது.
1994 ல் நடந்த பொதுத் தேர்தலில் PA 105, UNP 94 என ஆசனங்கள் பகிரப்பட்டன. கடைசியில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை கூட காமினியிடம் பறிகொடுத்து விட்டு நின்றார் ரனில். 105 ஆசனங்களை வென்ற சந்திரிக்கா SLMC இன் 7, சந்திரசேகரினின் 1 ஆசனம் கொண்டு ஆட்சியமைத்தார்.
மீண்டும் ஜனாதிபதி வேட்பாளராக காமினியிடம் தோற்ற ரனில் காமினி தேர்தல் பிரசாரத்தில் கொல்லப்பட பதில் வேட்பாளராக முன்வரும் வாய்ப்பு இருந்தும் கொல்லப்பட்ட காமினியின் மனைவிக்கு கொடுத்து விட்டு ஒதுங்கிக் கொள்கிறார்.
பின்னர் 1999 ஜனாதிபதி தேர்தலில் கடும் போட்டியுடன் தோல்வி.
2000 பொதுதேர்தலில் PA 107, UNP 89 என்று தோல்வி.
அதன் பின்னர் UPFA இல் பாங்களிக் கட்சிகளிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஆட்சி கவிழ 2001 தேர்தல். அங்கே UNP 109, PA 77, என ஆசனங்களை வென்றது. SLMC 5 ஆசனங்களையும் கொண்டு போதுமான பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தார் ரனில்.
ஆனால் அவரால் ஆட்சிக் காலத்தை பூரணப்படுத்த முடியவில்லை. 2004 பாராளுமன்றம் ஜனாதிபதி அதிகாரத்தைப் பயன்படுத்தி கலைக்கப்பட்டு மீண்டும் தேர்தல். அங்கே UPFA 105, UNP 82 பெற்றது.
2005 ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தவுடன் போட்டியிட்டு தோல்வி.
2009 ல் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடாமல் பொது வேட்பாளராக சரத் பொன்சேகாவை நிறுத்தி. அதிலும் தோல்வி.
2010 பொதுதேர்தலில் UPFA 144, UNP 60.
அதன் பின்னர் 2015 ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக மைத்ரியை களமிறக்கி வெற்றி பெற்று 42 உறுப்பினர்களை வைத்துக் கொண்டு பிரதமரானார் ரனில்.
தொடர்ந்து 2015 பொதுத்தேர்தலில் UNP 106, UPFA 95 பெற்றுக் கொண்டு ஆட்சியமைக்கிறார்.
2018 அக்டோபர் மாதம் ஜனாதிபதிக்கும் அவருக்கும் இடையே உருவான கருத்து முரண்பாட்டினால் அவரை பதவி நீக்கம் செய்து மஹிந்த பிரதமராக்கப்பட நீதிமன்றம் சென்று மீண்டும் பிரதமரானார்.
அதனைத் தொடர்ந்து 2019 ஜனாதிபதி தேர்தலில் சஜித் ஐ போட்டியிட சொல்லி ஒதுங்கி விட்டு அதில் சஜித் தோற்ற போது பிரதமர் பதவியை இழந்தார்.
பின்னர் 2020 பொதுத்தேர்தல் நடந்தது. அதில் SLPP 145 + (SLFP 1, EPDP 2, NC 1, TMVP) 1 UNP 1 என்ன ஆசனங்களை பகிர்ந்து கொள்ள தேசியப் பட்டியல் மூலம் கிடைத்த ஒற்றை ஆசனத்தை வைத்துக் கொண்டு பாராளுமன்றம் வருகிறார் ரனில். அதுவும் 10 மாத இழுபறிக்குப் பின்னர்.
1994 ல் 94, 2000 ல் 89, 2001 ல் 109, 2004 ல் 82, 2010 ல் 60, 2015 ல் 106 உறுப்பினர்களை கொண்டு செய்ய முடியாததை, ஒரே ஒரு உறுப்பினரை வைத்து சாதித்துள்ளார் ரனில். இதனை திறமை என்பதா? குருட்டு அதிஷ்டம் என்பதா? தந்திரம் என்பதா? விதி என்பதா?
எது எவ்வாறாக இருப்பினும் நாட்டின் பொருளாதார நிலை மிக மோசமாக உள்ளது. மக்கள் பல சிக்கல்களுக்குள் மாட்டி இருக்கிறார்கள். எரிபொருள் தட்டுப்பாடு, கேஸ் தட்டுப்பாடு, மருந்துத் தட்டுப்பாடு, உணவுப் பொருள் விலையேற்றம் என மக்கள் பிரச்சினைகள் ஒரு புறம்.
ஏற்றுமதி வீழ்ச்சி, சுற்றுலா பிரயாணிகள் வருகை வீழ்ச்சி, வெளிநாட்டு ஊழியர்கள் சட்ட ரீதியாக வங்கி மூலம் பணம் அனுப்பாமை போன்ற பல சவால்கள் ஒருபுறம்.
ரனில் கடந்து வந்த பாதை ஒன்றும் பூப்பாதை அல்ல. கல்லும் முள்ளும் நிறைந்த கரடு முரடான பாதை. கடக்க இருப்பதும் கரடு முரடான பாதை.
1974 ல் செயற்பாட்டு அரசியலுக்கு வந்து, 1977ல் பாராளுமன்றத்திற்கு தெரிவாகி, கல்வி, தொழில் நுட்பம், இளைஞர் விவகாரம் உள்ளிட்ட மிகப் பெரிய அமைச்சுக்களை வகித்து, பாராளுமன்றத்தில் சபை முதல்வராக இருந்து, 6 முறை பிரதமராக பதவி வகித்து, எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்து, எதிர்க்கட்சியின் ஒரு எம்பியாகவும் செயற்பட்டு அனுபவம் இருக்கும், நிறைய வெளிநாட்டு தொடர்புகள் இருப்பதாக சொல்லும் ரனில் மூலம் நாட்டில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்குமா? பார்க்கலாம் அனுபவமும், திறமையும் அவருக்கு கை கொடுக்கிறதா? கைவிடுகிறதா என்று.
புதிய ஜனாதிபதி அதிமேதகு இல்லை இல்லை... மன்னிக்கவும் அவர் அப்படி சொல்ல வேண்டாம் என்று சொல்லியுள்ளார். எனவே கெளரவ ரனில் விக்ரமசிங்ஹ அவர்களுக்கு இரும்புத்திரை நியூஸ் இணைய தளத்தின் வாழ்த்துக்கள்.
எது எவ்வாறாயினும் மக்களின் பிரச்சினைகள் தீர வேண்டும் என பிரார்த்திக்கிறோம்.
- Fayas M. A. Fareed.
Related:
கடந்து வந்த பாதையும் கடக்கவுள்ள பாதையும்...
Reviewed by Irumbu Thirai News
on
July 20, 2022
Rating: