வெல்லுமா ரனிலின் தந்திரம்?


இலங்கை அரசியலில் தந்திரத்துக்கு புகழ் பெற்றவர் ரனில். 6 முறை பிரதமராக பதவி ஏற்றவர். ஒரு முறையேனும் பூரண பதவிக் காலத்தை நிறைவு செய்ததில்லை. அநேகமான தன்னுடைய தந்திரத்தின் மூலம் எல்லாம் சாதிக்கலாம் என்ற சிந்தனையில் எதையுமே சாதிக்காமல் போன தலைவனாகவே ரனில் நோக்கப்படுகிறார். 

இந்நிலையில் 2020 பொதுத் தேர்தலுக்கான எல்லா தந்திரங்களும் பொய்த்துப் போய் தேசிய ரிதியாக கிடைத்த ஒரே ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்துடன் திருப்திப்பட வேண்டி ஏற்பட்டது. அதற்கும் ஒருவரை நியமிக்க உடன்பாடு ஏற்படுத்திக் கொள்ள முடியாமல் 10 மாதங்கள் கழித்து ஒற்றை உறுப்பினராக எதிர்க்கட்சியில் அமர்ந்த ரனில் இன்று பதில் ஜனாதிபதியாக, சிலவேளை அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கான ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கான வலுவான சாத்தியங்களுடன் இருக்கிறார். 

கோட்டாவை பதவி விலகச் செய்வதற்கான ஆர்ப்பாட்டங்கள் இம்மாத ஆரம்பத்தில் தீர்க்கமான கட்டத்தை அடைந்தன. 9 ஆம் திகதி தேசிய ரீதியான மாபெரும் எதிர்ப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் இணக்கப்பாட்டு அரசு ஒன்றை உருவாக்கிக் கொள்ள பல பேச்சுவார்த்தைகளை நாடாத்தின. கோட்டா பதவி விலகும் பட்சத்தில் யாரை அடுத்த ஜனாதிபதியாக கொண்டு வருவது உள்ளிட்ட பல விடயங்கள் அங்கே பேசப்பட்டன. ஒருவாறு கோட்டா பதவி விலகலோடு புதிய ஜனாதிபதி தேர்வு விடயம் மேடைக்கு வந்தது. கடைசியில் 4 பேர் போட்டியிடும் நிலைமை உருவானது. சம்பிக்க, பொன்சேகா இருவரும் போட்டியிடும் ஆர்வத்தில் இருந்த போதிலும் போட்டியிடவில்லை. இங்கே ரனில் தன் விளையாட்டை ஆரம்பிக்கிறார். 

ரனிலை பிரேரித்து ஆதரவு அளிப்பது SLPP. 1993 ல் இருந்து ரனில் எதிர்ப்பு அரசியல் முகாமில் அரசியல் செய்யும் SLPP இனரில் எத்தனை பேர் தமக்கு வாக்காளிப்பார்கள் என்பதை ரனிலால் மட்டுமல்ல. யாராலும் ஊகிக்க முடியாது. எனவே ரனில் தன்னுடையை வாக்குகளை அதிகரித்துக் கொள்வதற்கான முயற்சியை மட்டுமல்லாது எதிராணி வாக்குளை உடைக்கும் வேலையையும் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். 

சஜித் கேட்டால் SLPP இன் விரல் விட்டெண்ணக் கூடிய ஓரிருவர் சஜித்க்கு வாக்கு அளிப்பார்கள். ஆனால் SLMC, ACMC தெளிவாக சஜித் ஐ ஆதரிக்கும். அதே போன்று TNA வும் சஜித் ஐ ஆதரிக்கும். 

மறுபுறம் சஜித் – டலஸ் கூட்டை விட டலஸ் தனியாக கேட்கும் போது SLPP இன் உறுப்பினர்களில் அதிகமானோர் டலஸ்க்கு வாக்காளிக்கும் சாத்தியம் அதிகமாக இருக்கும். இதனை நன்றாக திட்டமிட்ட ரனில் அநேகமாக சஜித் – டலஸ் கூட்டையே விரும்பி இருப்பார். 

மறுபுறம் SLPP இல் இருந்த மிகத் தீவிர இனவாதிகளாக அறியப்பட்ட பலர் தமது ஆதரவை டலஸ் கூட்டுக்கு தெரிவித்து வருகின்றனர். SLPP இன் முன்னணி தலைவர்களான பலர் மெளனம் காக்கும் போது வெறும் இனவெறியை மட்டுமே மூலதனமாக்கி அதன் மூலம் பாராளுமன்றம் வந்து, பதவிகளைப் பெற்று, கையாலகாதவர்கள் என்று மக்களிடம் பெயர் பெற்று அடுத்த தேர்தலில் வெற்றி பெறும் சாத்தியம் மிகக் குறைவாக உள்ள சன்ன ஜயசுமண, நாலக கொடஹேவா, ரத்ன பிக்கு போன்றோர் பகிரங்கமாக பேசுவதில் பல உள்குத்துக்கள் இருக்கலாம். அதன் விளைவாக டலஸ் சஜித் கூட்டு இனவாதிகளின் கூடாரம் போன்ற ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே, விமல் கம்மன்பில வின் 10 கட்சி கூட்டும் அங்கே உள்ளது. போதாக்குறைக்கு முன்னொரு காலத்தில் டலஸ், கம்மன்பிலவுடன் மாற்றம் செய்யப்பட்ட தேசியக் கொடியை ஏந்திய படம் வேறு ஓடிக் கொண்டிருக்கிறது. ரனிலின் தேவையும் அதுவே. அதன் விளைவாக TNA, ACMC, SLMC உள்ளிட்ட சிறுபான்மைக் காட்சிகளின் வாக்கை தம்பக்கம் ஈர்க்க முடியும் என நம்புகிறார். அநேகமாக அந்த நம்பிக்கை வீண் போகாத நிலை உருவாகி வருவதாகவே தோன்றுகிறது. 

கிடைக்கின்ற தகவல்களின் அடிப்படையில் அநேகமான ரவூப் ஹக்கீம், ரிஷார்ட் பதியுத்தீன், தெளபீக் ஆகிய முஸ்லீம் பா. உ க்களைத் தவிர ஏனைய எல்லா முஸ்லீம் உறுப்பினர்களின் ஆதரவும் ரனிலுக்கு என்றே அறிய வருகிறது. 

அது தவிர SLFP உத்தியோகபூர்வமாக தமது ஆதரவு டலஸ்க்கு என்று அறிவித்த போதிலும் அவர்களில் பலர் ரனிலின் வலையில் வீழ்ந்து விட்டதாகவே சொல்லப்படுகிறது. 

இது தவிர நேற்று நடந்த TNA வின் நாடாளுமன்ற உறுப்பினர் குழுக் கூட்டத்தின் போது தொடர்பு கொண்ட இந்திய உயர் ஸ்தானிகரலாயத்தின் பிரதித் தூதுவர் டலஸ்க்கு வாக்காளிகுமாறுகேட்டு கொண்டதாகவும், அதனை உடனேயே ரனிலிடம் உள்ளிருந்த யாரோ எம்பி போட்டுக் கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே, இந்தியா ரனிலுக்கு பச்சைக் கொடி காட்டியுள்ள நிலையில், இதை ரனில் இந்திய மேல் மட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார். அநேகமாக இது இந்திய உளவு அமைப்பான ரோ வின் நகர்வு என்றே நம்பலாம். 

பொதுவாக கொழும்பில் உள்ள பல மேற்கு நாட்டு தூதுவராலயங்கள் ரணிலுக்கு பச்சைக் கொடி காட்டி இருப்பதாகவும், கட்சித் தலைவர்கள் பலருக்கு அது தொடர்பில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக்கவும் சொல்லப்படுகிறது. 

இதை விட ரனிலின் மற்றோரு மாஸ்டர் plan சஜித் ஐ டலஸ் உடன் கூட்டு வைக்க தூண்டியதன் மூலம் SJB இன் பல வாக்குகளை கவர்வதாகும். இதன் மூலம் சஜித் தலைமையை ஏற்க தைரியம் அற்றவர் என்ற சிந்தனையை மக்களுக்கும், SJB உறுப்பினர்களுக்கும் வழங்கலாம். நீண்ட கால அடிப்படையில் SJB இன் கட்டமைப்பை சிதைக்கும் ஒரு நகர்வாகவும் இதனை கருதலாம். 

ஆரம்பத்திலேயே டலஸ் சஜித் கூட்டு உருவாகி இருந்தால் பொன்சேகா அல்லது வேறு ஒருவர் சுயேச்சையாக முன்வந்து SJB இன் வாக்குளை உடைத்திருக்கலாம். ஆனால் கடைசி நேரத்தில் இந்த நகர்வு ஏற்பட்டமையானது அவ்வாறு ஒருவர் வந்து போதுமான ஆதரவை திரட்டிக் கொள்ள போதுமான அவகாசத்தையும் இல்லாமல் செய்து விட்டது. 

ஏற்கனவே, தலைமை ஏற்க தைரியம் அற்ற தலைவர் சஜித் என்று UNP இன் செயலாளர் பாலித ரங்கே பண்டார இழிந்துரைத்தார். இதனால் எதிர்காலத்தில் SJB இல் தொங்கிக் கொண்டிருப்பதால் எந்த பலனும் இல்லை என்ற செய்தியை SJB எம்பிக்களுக்கு வழங்கி ரனிலுடன் இணைவதன் மூலம் பிரகாசமான வாய்ப்பு உள்ளது என்று உடைக்க திட்டமிட்டு இருக்கலாம். 

அநேகமாக தற்போதைய நிலையில் ரனில் வென்றாலும் ரனில் ஆதரவு வாக்கில் அவர் வெல்லப் போவதில்லை. மாறாக வேறு தெரிவற்ற SLPP இன் வாக்குகள், டலஸ் - சஜித் கூட்டை விரும்பாத ஆனால் ரனில் மீதும் விருப்பற்ற SLPP இன் வாக்குகள்,டலஸ் - சஜித் இணைவை விரும்பாத SJB வாக்குகள், சஜித் மீது நம்பிக்கையிழந்த SJB வாக்குகள், டலஸ் உடன் கூட்டுச் சேர்ந்துள்ள இனவாதிகள் காரணமாக வெறுப்புற்ற சிறுபான்மையினத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் வாக்குகள் என்பவற்றினாலேயே வெல்லப் போகிறார். ஒட்டு மொத்தத்தில் 4 முனைப் போட்டி இருந்த சந்தர்ப்பத்தில் இருந்ததை விட, தற்போது ரனிலின் வாய்ப்பு பிரகாசமானது. 

-  Fayas M. A. Fareed.


வெல்லுமா ரனிலின் தந்திரம்? வெல்லுமா ரனிலின் தந்திரம்? Reviewed by Irumbu Thirai News on July 20, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.