வெற்றி யாருக்கு? கள நிலவரம்...


கோட்டாபய ராஜபக்க்ஷ இலங்கையின் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய நிலையில் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது. 
 
அதில் 03 பேர் போட்டியிடுகின்றனர். தற்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹ, SLPP இன் உறுப்பினரும் பா. உ ஆன டலஸ் அழஹப்பெரும, NPP இன் தலைவரான அனுர குமார திசாநாயக்க ஆகியோரே அவர்கள். 
 
நாம் ஏற்கனவே எதிர்வு கூறிய டலஸ் மற்றும் சஜித் கிடையிலான உடன்பாடு எட்டுப்பட்டமையினால் சஜித் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை. மாறாக அவர் டலஸ் இன் பெயரை பிரேரித்தார். 
 
அனுர வெற்றிக்காக போட்டியிடவில்லை. மற்றைய தரப்புக்களோடு ஒப்பிடும் போது கொள்கை அரசியல் செய்யும் அவருக்கும் அவர் சார்ந்த கூட்டணிக்கும் மற்றைய இருவரில் ஒருவரை தெரிவு செய்ய முடியாத கொள்கை முரண்பாடுகள் உள்ளன. எதிர்கால அரசியல் எதிர்பார்ப்பு இல்லாத ஒருவரை முன்னிறுத்தி அனைத்துக் கட்சி ஆட்சி ஒன்றை அமைக்க வேண்டும் என்று அவர்கள் எடுத்த முயற்சி தோல்வி கண்டு விட்டது. 
 
பெரிய கட்சிகள் இரண்டும் தேர்தலுக்கு செல்ல தயாரில்லை. இந்நிலையில் NPP இன் மூன்று உறுப்பினர் தவிர்ந்த வேறு வாக்குகள் அவர்களுக்கு கிடைத்தாலே அவர்கள் வென்றது போலதான். ஆனால் ஓரிரு வாக்குகள் கூடுதலாக கிடைக்கலாம். 
 
பிரதான போட்டி டலஸ் மற்றும் ரணில் இடையேதான். அதன் அடிப்படையில் மொத்தமுள்ள 225 இல் NPP இன் மூன்று தவிர எஞ்சியுள்ள 222 ஐ பகிர்ந்து கொள்ளவே போட்டி நடக்கவுள்ளது. 
 
இவர்களில் பெரும்பாலானோர் SLPP இன் உறுப்பினர்கள். நடப்பு பாராளுமன்றத்தைப் பொறுத்தவரை SLPP தேர்தலில் 145 ஆசனங்களை வென்றிருந்தது. அவர்களோடு கூட்டணியில் இருந்த அதாவுல்லாஹ்வின் தேசிய காங்கிரஸ் ஒரு ஆசனத்தையும், யாழ் மாவட்டத்தில் தனியாக போட்டியிட்ட SLFP ஒரு ஆசனத்தையும், சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தலைமையிலான TMVP ஒரு ஆசனத்தையும், டக்ளஸ் தேவாநந்தாவின் EPDP இரண்டு ஆசனங்களையும் பெற்று 150 ஆசனங்களை கொண்டிருந்தது. 
 
எனினும் அது இப்போது பல தூண்டுகளாக உடைந்து உள்ளது. விமல் தலைமையில் 10 கட்சிக் கூட்டணி, SLFP இரண்டு பிரிவுகளாக உள்ளது. அனுர பிரியதர்ஷன சுசில் தலைமையில் மற்றொரு 14 பேர் கொண்ட அணி, இப்போது டலஸ் வேட்புமனு தாக்கல் செய்ததோடு SLPP இன் தவிசாளர் ஜிஎல் உடன் இன்னொரு குழு என பல பிரிவுகள். 
 
யார் என்ன சொன்னாலும் SLPP இன் இந்த பிரிவுகளே வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாகும். SJB க்கு தேர்தலில் 54 ஆசனங்கள் கிடைத்தது. அவர்களின் கூட்டணி கட்சிகளான SLMC, ACMC என்பன தனியாக போட்டியிட்டு தலா ஒரு ஆசனத்தை வென்றிருந்தது. அத்தோடு முஸ்லீம் ஐக்கிய கூட்டமைப்பு என்ற பெயரில் புத்தளம் மாவட்டத்தில் ஒரு உறுப்பினருமாக 57 பேர் இருந்தனர். 
 
20 ஆம் சீர்திருத்த வாக்கெடுப்பு நிகழ்ந்த போது SLPP இன் விஜேதாச ராஜபக்க்ஷ அதனை எதிர்த்து வாக்காளித்தார். SLMC, ACMC இன் உறுப்பினர்கலும், முஸ்லீம் கூட்டமைப்பின் புத்தளம் உறுப்பினரும், மனோ கணேஷனின் அரவிந்த குமார் எம்பியும் அரசுடன் இணைந்து கொண்டனர். 
 
தற்போதைய நிலையில் யார் எந்தப் பக்கம் இருக்கிறார்கள்? எந்தக் கொள்கையில் இருக்கிறார்கள் என்பதே தெரியாத நிலையே உள்ளது. எனினும் கிடைக்கின்ற உள்ளக தகவல்களை வைத்து பார்க்கும் போது பாராளுமன்றத்தில் தேசியப் பட்டியல் மூலம் ஒரே ஒரு ஆசனம் பெற்று வந்த ரணில் விக்ரமசிங்ஹவின் கையே ஓங்கி இருப்பதாக தெரிகிறது. 
 
பொதுவாக இரு தரப்பும் ஏட்டிக்குப் போட்டியாக பதவிக்களுக்கான பேரம் பேசலில் இருப்பதாக தெரிகிறது. சில வேலை சற்று ஒதுங்கி இருக்கும் கருப்பு நிற பறவையின் கருப்பு பணமும் சூட்கேஸ் வழி கை மாறலாம். இலங்கை அரசியலில் அது ஒன்றும் புதிதல்லவே. 
 
 தற்போதைய நிலையில் சில அரசியல் கட்சிகளும் தனி நபர்களும் தம்முடைய ஆதரவு யாருக்கு என்று பகிரங்கமாக அறிவித்துள்ளனர். அந்த அறிவிப்புக்களின் பின்னர் அந்தக் கட்சிகளில் சில விரிசல்களும் ஏற்பட்டுள்ளன. அதிக ஆசனங்களைக் கொண்ட SLPP பல பகுதிகளாக பிரிந்து உள்ளது என்று ஏலவே பார்த்தோம். 
 
கட்சியின் உறுப்பினரான டலஸ் போட்டியிடுவதாக சொன்ன நிலையில் கட்சியின் ஆதரவு ரணில்க்கு என்று செயலாளர் அறிவிக்க, அது எப்படி என்று தவிசாளர் போர்க்கொடி தூக்கினார். அது தவிர தேசிய ரீதியில் அறியப்பட்ட பல பின்வரிசை உறுப்பினர்கள் அவ்வாறான தீர்வு ஒன்று கட்சியால் எடுக்கப்படவில்லை என்று உள்ளக முரண்பாட்டை பகிரங்கமாக கூறினார். 
 
மறுபுறம் SJB இலும் ரணில்க்கு சார்பான ஒரு குழு உருவாகி இருக்கலாம் என்றும், சஜித் வேட்பாளராக களம் இறங்காமல் போனால் அவர்கள் ரணில்க்கு வாக்காளிக்கலாம் என்ற நிலையும் காணப்பட்டது. மறுபுறம் இன்று காலை டலஸ் க்கு ஆதரவு வழங்குவது என்ற கடைசி முடிவு எடுக்கப்பட்ட சமயத்தில் கூட சஜித் போட்டியிடவில்லை என்றால் தனக்கு போட்டியிட அனுமதிக்குமாறு சரத் பொன்சேக்கா கோரிக்கை விடுத்ததாகவும், அது நிராகரிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. 
 
ஏற்கனவே, SJB இல் இருந்த 57 பேரில் சுமார் 7 பேர் 20 க்கு கை தூக்கவும், இன்னும் இருவர் ரணிலுடன் ஆட்சியமைக்கவும் சென்று விட்ட நிலையில் இருக்கும் 50 க்கும் குறைவானவர்களை வைத்துக் கொண்டு ஜனாதிபதியை  தெரிவு செய்வதை மட்டுமல்ல அரசுக்கு எதிராக துரும்பைக் கூட நகர்த்த SJB இனால் முடியாது. 
 
இந்நிலையிலேயே SLPP இல் உருவான பிளவுகளை வைத்து பதவியைப் பிடிக்கும் வேலையை SJB ஆரம்பித்தது. ஜனாதிபதி ஆக சாதாரண பெரும்பான்மையே போதும். SJB க்கு ஒருபுறம் மேலதிகமாக தேவைப்படும் மேலதிக உறுப்பினர்களை தேடிக் கொள்ளும் சவால் ஒருபுறம். ரணிலின் வேட்டையில் இருந்து தம் உறுப்பினர்களை பாதுகாத்துக் கொள்ளும் சவால் ஒருபுறம் என்ன சஜித் இன் நிலை பரிதாபமானது. 
 
பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்தன. 150+ ஆதரவு தமக்கு இருப்பதாக வாய் சவடால் எல்லாம் விடப்பட்டது. எனினும், டலஸ் கேட்கும் நிலையில் SLPP இன் ரணில் எதிர்ப்பு அணியின் வாக்குகள் எல்லாம் டலஸ் க்கு கிடைக்கும் சாத்தியமே காணப்பட்டது. 
 
SLFP இன் வாக்கு எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் சஜித்க்கு என்று செயலாளர் தயாசிறி சொல்ல, ஒன்றுக்கு மேற்பட்டோர் வேட்பாளர்களாக வந்தால் தாம் யாருக்கும் வாக்களிப்பதில்லை என்று தலைவர் மைத்ரி சொன்னார். மறுபுறம் நிமல் சிறிபால, மஹிந்த அமரவீர உள்ளிட்ட சுமார் 10 உறுப்பினர்களின் ஆதரவு ரணிலுக்கு என்று தகவல்கள் கசிந்துள்ளன. எனினும் இன்று மாலை SLFP டலஸ் க்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது. மைத்ரிக்கு சபாநாயகர் பதவிக்கான Offer ஒன்று பற்றிய தகவல்கள் கூட வெளி வந்துள்ளன. 
 
டலஸ் கேட்பதால் விமல் தலைமையிலான 10 கட்சி கூட்டணி சஜித் ஐ ஆதரிக்காது என்று சிக்னல்களை வெளிக்காட்டியது. சஜித் பின்வாங்க இது முக்கிய ஒரு காரணம். விமல் அணி டலஸ் ஐ ஆதரிக்க முடிவு செய்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டணியின் ஆதரவும் டளசுக்குதான். அவர்களுடன் 10 உறுப்பினர்கள் உள்ளனர். சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) ஏற்கனவே பகிரங்கமாக சொல்லி விட்டார். 
 
பெரிய கட்சிகளில் இருந்து பிரிந்து தனித்தனியாக இருக்கும் சில உறுப்பினர்கள் என்ன செய்வார்கள் என்று தெரியாது. என்னதான் வெற்றி தோல்வியை பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்கில் தங்கி இருந்த போதிலும் அதற்கு வெளியே உள்ள போராட்டக்காரர்களின் தாக்கம் அவர்கள் மீது இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. குறிப்பாக அவர்கள் ரணில் ஜனாதிபதியாக வந்தால் போராட்டம் தொடரும் என்ற செய்தி, போராட்டத்திற்கு கிடைத்த மக்கள் அங்கீகாரம் என்பனவும் கட்சித் தலைமைகளின் முடிவுகளைப் போலவே எம்பிகள் தம் தீர்மானங்களை எடுப்பதில் செல்வாக்கு செலுத்தும் என எதிர்பார்க்கலாம். 
 
ரணில்க்கு அதிக உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகவே உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரம் சமூகத்தில் அதன் தாக்கம் பேரணிகளாய், போராட்டங்களாய் வீதிகளில் எதிரொலிக்கிறது. 
 
இன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் புள்ளடி தீர்மானிக்கும் அடுத்த இரண்டரை ஆண்டுகள் இலங்கையின் முதற் பிரஜை யார் என்று... 
 
- Fayas M. A. Fareed.
 
வெற்றி யாருக்கு? கள நிலவரம்... வெற்றி யாருக்கு? கள நிலவரம்... Reviewed by Irumbu Thirai News on July 20, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.