உ.தர பரீட்சை: பெற்றோருடன் சில நிமிடங்கள்...



A/L பரீட்சை எழுதும் மாணவர்களின் பெற்றோர்களே...... 

எமது பிள்ளைகள் பரீட்சைக்கு முகம்கொடுக்கும் இந்த நேரத்தில் பெற்றோர்கள் நடந்துகொள்ள வேண்டிய சில வழிமுறைகளை உங்கள் கவனத்திற்கு தருகின்றோம். அவற்றை பின்பற்றி பிள்ளையின் உள உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி ஊக்கமும் உற்சாகமும் வழங்கி பரீட்சைக்கு தைரியமாக முகம் கொடுக்க வழிகாட்டலாம். 

1. அமைதியாக பேசுவோம் 
பிள்ளையுடன் பேசும் போது அவசரப்படாமல் அமைதியாக பேசுவோம். பெற்றாரின் வார்த்தைகள் மிகவும் சக்திவாய்ந்தவை, ஆறுதல் தரக்கூடியவை, அதனால் ஊக்கம் தரும் வகையில் அழகான வார்த்தைகளை பேசுவோம். அவர்கள் ஏதேனும் சொல்ல வந்தால் நாம் அமைதியாக செவிமடுப்பதை பிள்ளைக்கு உணர்த்துவோம். எமது தடுமாற்றத்தை அல்லது டென்ஷனை அவர்களிடம் காட்டாதிருப்போம். 


2. கோரிக்கைகளை தவிர்த்துக் கொள்வோம் 
நீ எப்படியோ சித்தியடைய வேண்டும் என்றோ, நீ சித்தியடைவது தான் எங்கள் எதிர்பார்ப்பு என்றோ, அல்லது சித்தியடைய வேண்டும் என்பதற்காக ஏதாவது முறையில் வேண்டுகோள்கள், அழுத்தங்கள் கொடுப்பது நல்லதல்ல. இந்த முக்கியமான நேரத்தில் பிள்ளைகளுக்கு ஆறுதல் அளிப்பவர்களாக நாம் இருக்க வேண்டும். நாம் தைரியமாக இருந்து பிள்ளையை எமது அழகான வார்த்தைகள் மூலம் தைரியப்படுத்துவோம். 


3. மனச்சோர்வை புரிந்து கொள்வோம் 
பிள்ளை பரீட்சை பற்றி மனச்சோர்வாக இருக்கக் காணும் போது அதை புரிந்துகொண்டு அவசரப்பட்டு பொருத்தமற்ற எதனையும் சொல்லிவிடாமல்… பிள்ளை செய்வது அவருக்கு போதுமானது என்பதை தெரியப்படுத்துவோம்.. மற்றவர்களுடன் போட்டியிடுவதற்காக நீங்கள் படிப்பதில்லை, உங்கள் திறமையை வெளிப்படுத்தவும் அதை காணவுமே படிக்கிறீர்கள் என்று எடுத்துக்கூறுவோம். 


4. நேர்மறையான சுய எண்ணங்களை உருவாக்க வழிகாட்டுவோம் 
நேர்மறையான சுய எண்ணங்களை உருவாக்கிக் கொள்ளுமாறு சொல்லிக் கொடுப்போம்.. உதாரணமாக...... 
▪️ நான் தைரியசாலி.. 
▪️இந்தப் பரீட்சையில் நான் சிறப்பாக செயற்படுவேன்.. 
▪️நான் படித்திருக்கிறேன்.. 
▪️எனக்கு பதில்கள் தெரியும்.. 
▪️என்னால் தைரியமாக பரீட்சைக்கு முகம் கொடுக்க முடியும்.. என்று சொல்லுமாறு சொல்லிக் கொடுப்போம். 


5. நல்ல சிந்தனையை உருவாக்குவோம்
"நல்ல சிந்தனையால் மட்டுமே வெற்றியாளராக ஆகமுடியும்".. அதனால் 
▪️'என்னால் முடியும்', 
▪️'நான் சாதிப்பேன்' என்ற எண்ணங்களை மனதிற்கு கொண்டுவருமாறு எடுத்துக்கூறலாம். 


6. ஒப்பிடுவதை தவிர்த்துக் கொள்வோம்.. 

பிள்ளையை மற்றப்பிள்ளைகளோடு ஒப்பிடுவதை முற்றாக தவிர்த்துக் கொள்வோம். பிள்ளைக்கும் தன்னை எந்தப் பிள்ளையுடனும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம் என்பதையும் எடுத்துச் சொல்வோம். மற்ற பிள்ளைகள் எப்படிச் செய்வார்கள் என்று எண்ணுவதை விட்டுவிட்டு, உங்கள் திறன்கள் மீது அவதானம் செலுத்துங்கள் என்றும் சொல்லிக் கொடுப்போம்.. 


7. கவலைப்படத் தேவையில்லை என்பதை உணர்த்துவோம்...

 பிள்ளை கவலையோடு இருக்கக் கண்டால், பரீட்சை பற்றி அதிகம் கவலைப்படத் தேவையில்லை. நீங்கள் எதிர்பார்த்த அளவு அதிகம் செய்ய முடியாவிட்டால் நீங்கள் உங்களையே சங்கடப்படுத்திக்கொள்ள வேண்டியதுமில்லை. ஆனால் இப்போது கிடைத்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தை அழகாக பயன்படுத்தி உங்களால் முடிந்தவரை முழுமையாகச் செய்ய முயற்சியுங்கள்... என்று எடுத்துக் கூறலாம். 


9. பிள்ளையின் தலை தடவி பிரார்த்திப்போம்.

எங்கள் பிரார்த்தனை பிள்ளைக்கு நம்பிக்கையை கொடுக்கும். பெற்றாரின் அழகான பிரார்த்தனைகள் மிகவும் பலமானவை என்று நாம் அறிவோம்... 

அன்பின் பெற்றோர்களே..! 
பெற்றோர்களாகிய நாங்கள் எமது பிள்ளைகளின் பரீட்சை பயணத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றோம். எங்கள் வழிகாட்டுதலும் ஆதரவும் அவர்களின் கல்விப் பயணத்தில் மிகச் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்வோம். 
உங்கள் பிள்ளை மனதைரியத்துடன் பரீட்சைக்கு முகம்கொடுத்து, நல்ல பெறுபேறுகள் பெற்று கல்விப் பயணத்திலும் வாழ்க்கை பயணத்திலும் பயனுள்ள வெற்றிகள் பெறவேண்டும் என்று நாமும் மனம் திறந்து பிரார்த்தனை செய்கிறோம்...🤲🤲🤲🤲🤲 ✍️ 

நன்றி: அஸ்ஹர் அன்ஸார். 
(மனோதத்துவ ஆலோசனை, நிபுணர் மனோதத்துவ எழுத்தாளர்)


 Previous post:



உ.தர பரீட்சை: பெற்றோருடன் சில நிமிடங்கள்... உ.தர பரீட்சை: பெற்றோருடன் சில நிமிடங்கள்... Reviewed by Irumbu Thirai News on November 10, 2025 Rating: 5

No comments:

Powered by Blogger.