ஆசிரியர் அதிபர்களின் போராட்டம் தொடர்வது சம்பந்தமாக தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள்:
Irumbu Thirai News
October 15, 2021
அதிபர் ஆசிரியரின் தொழிற்சங்க போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவது தொடர்பாக அரச தரப்பைச் சேர்ந்தவர்களும் பௌத்த மதகுருமாரும் தெரிவித்த கருத்துக்களை இங்கு தொகுத்து வழங்குகிறோம்.
காணி அமைச்சர் எஸ். எம். சந்திரசேன (13-10-2021 - அநுராதபுரம் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில்): 
தொழிற்சங்கததினர் முன்வைத்த கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்க அரசாங்கம் பொறுப்புடன் யோசனைகளை முன்வைத்துள்ளது. இந்த கொவிட் தாக்கத்திற்கு மத்தியிலும் சம்பள அதிகரிப்பிற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. 
இந்த தொழிற்சங்க போராட்டம் இன்று அரசியல் மாற்றத்திற்கான போராட்டத்தை நோக்கி நகர்வதாக தெரிகிறது. தொழிற்சங்கத்தின் ஒரு சில தலைவர்களின் செயற்பாடுகளின் ஊடாக இதை விளங்கிக் கொள்ள முடிகிறது. 
எவ்வாறான தீர்வை வழங்கினாலும் அதனை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இவர்கள் இல்லை. இவர்களின் இந்த முறையற்ற செயல்பாடுகளினால் பாரிய விளைவு ஏற்படப் போகிறது. 
எதிர்வரும் 21ஆம் திகதி பாடசாலைகளை முதற்கட்டமாக திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் பாடசாலைக்கு போவதற்கு தயாராக இருந்தாலும் ஒரு சில தொழிற்சங்கத்தினர் அதற்கு தடையாக இருக்கிறார்கள். 
ஆசிரியர், அதிபர்கள் பாடசாலைக்கு போவதைத் தடுக்கும் உரிமை தொழிற்சங்கத்தினருக்கு கிடையாது. 
21ஆம் திகதி சகல பாடசாலைகளின் முன்பாகவும் பாதுகாப்பு தரப்பில் சேவையில் ஈடுப்படுத்தப்படுவார்கள். பாடசாலைக்கு முன்பாக தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை கைது செய்ய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. வடமத்திய அபிவிருத்தி குழு கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 
வடமத்திய மாகாணத்தில் 18,000 பட்டதாரிகள் ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இவர்கள் 21ஆம் திகதி பாடசாலைக்கு செல்லாவிட்டால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். இதுமாத்திரமன்றி பாடசாலை வெளிகள ஊழியர்களும் சேவைக்கு வருகை தர வேண்டும். 
எதிர்வரும் 21ஆம் திகதி பாடசாலைகளை மீள ஆரம்பித்தல், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பாடசாலைக்கு வருதல் தொடர்பாக ஆளுநர்கள் விசேட அவதானம் செலுத்துவார்கள். 
மாணவர்களின் எதிர்காலத்தை விளையாட்டாக பயன்படுத்திக் கொள்ளும் இதுபோன்ற தொழிற்சங்கத்தினரது அழுத்தங்களுக்கு ஒருபோதும் அடிபணிய முடியாது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் எஸ். பி. திசாநாயக்க (12-10-2021 பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் வைத்து..) 
இந்தப் போராட்டத்தை எவ்வாறு நிறுத்த வேண்டும் என்று எனக்கு தெரியும். இந்த வேலைநிறுத்தத்தை தோல்வியடையச் செய்து.. இந்த வேலை நிறுத்தத்தை அடக்கி நாம் பாடசாலையை தொடங்க வேண்டும். 
இவர்களின் கருத்து தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வழங்கிய பதில் கருத்துக்களைப் பார்வையிட இங்கே கிளிக் செய்க.
கலாநிதி பெல்லன்வில தம்மரதன தேரர்: 
தற்போதைய நிலையில் ஆசிரியர் சங்கங்கள் கேட்கும் அனைத்தையும் கொடுக்கும் நிலையில் அரசாங்கம் இல்லை என்பது எமக்கு விளங்குகிறது. நாட்டின் பொருளாதார நிலை தற்போது மிகவும் சவாலுக்கு உட்பட்ட நிலையில் இருப்பது தெளிவாகத் தெரிந்த விடயம். எனவே இந்த நிலையை கருத்திற்கொண்டு அரசினால் முன்வைக்கப்பட்ட யோசனையை ஏற்றுக்கொண்டு ஆசிரியர்கள் செயல்பட்டால் மிகவும் நன்றாக இருக்கும். பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு ஆசிரியர்களின் இந்நேரத்தில் செயல்படாவிட்டால் மக்களின் கடும் அதிருப்தியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். 
வேண்ருவே உபாலி தேரர் (அஸ்கிரிய பீடம்): 
சம்பளத்தையும் எடுத்துக்கொண்டு நன்மையையும் செய்யக்கூடிய தொழில் ஆசிரியர் தொழிலாகும். கடவுளாக முடியாவிட்டால் ஆசிரியராக இரு என்று சொல்லுவார்கள். எனவே அந்த வகையில் பாடசாலைகள் மிகவும் விரைவாக திறக்கப்பட வேண்டும்.
ஆசிரியர் அதிபர்களின் போராட்டம் தொடர்வது சம்பந்தமாக தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள்:
 Reviewed by Irumbu Thirai News
        on 
        
October 15, 2021
 
        Rating:
 
        Reviewed by Irumbu Thirai News
        on 
        
October 15, 2021
 
        Rating: 
 
 
 
