ரத்து செய்யப்பட்ட ஆசிரியர் தற்காலிக இணைப்பு மீண்டும் நடைமுறைக்கு - ஜோசப் ஸ்டாலின்.


போக்குவரத்து பிரச்சினை காரணமாக வழங்கப்பட்ட தற்காலிக ஆசிரியர் இடமாற்றத்தை ரத்து செய்து வெளியிடப்பட்ட சுற்றறிக்கை கடிதத்தை மீண்டும் ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் எமது www.irumbuthirainews.com இணையத்தளம் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் முக்கிய அம்சங்களை தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், 

கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்தவுடன் இன்று கல்வி அமைச்சில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. இதில் அதிபர் ஆசிரியர் சங்கங்கள் மற்றும் கல்வி அமைச்சர், அமைச்சின் செயலாளர் உட்பட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இன்றைய சந்திப்பின்போது பல விடயங்களை அமைச்சருடன் கலந்துரையாடினோம்.  அதில் ஒன்று இடமாற்ற சபைகளை மீண்டும் முறைமைப்படுத்த அமைச்சர் தீர்மானித்துள்ளார். 

ஏனெனில் ஆசிரியர் இடமாற்ற சபைகளில் பல்வேறு போலியான தொழிற்சங்கங்கள் சம்பந்தப்பட்டு மோசடி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றமை தெரியவந்துள்ளது. இந்த விடயத்தை நாம் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்த போது இந்த இடமாற்ற சபைகளை முறைமைப்படுத்த அமைச்சர் இணக்கம் தெரிவித்ததோடு அவ்வாறு போலியான தொழிற்சங்கங்கள் மூலம் இடம்பெற்ற நிதி மற்றும் ஏனைய மோசடிகள் தொடர்பில் போலீஸ் விசாரணைகளை ஆரம்பிக்கவும் தீர்மானித்துள்ளார். 

மேலும் இன்றைய கலந்துரையாடலின் போது எடுக்கப்பட்ட மற்றுமொரு தீர்மானமாவது, 

போக்குவரத்து பிரச்சினை காரணமாக தற்காலிக இணைப்பு பெற்ற ஆசிரியர்களின் இடமாற்றத்தை ரத்து செய்து வெளியிடப்பட்ட சுற்றறிக்கை கடிதத்தை மீண்டும் ரத்து செய்து அந்த தற்காலிக இணைப்பை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர அமைச்சர் இணங்கியுள்ளார். 

அந்த வகையில் ஏற்கனவே உள்ளபடி டிசம்பர் 31 வரை குறித்த தற்காலிக இணைப்பு மீண்டும் செல்லுபடியாகும். இது தொடர்பிலான எழுத்து மூல அறிவித்தல் இன்று கல்வி அமைச்சால் மீண்டும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கிறோம் என்றார். 

இன்றைய கலந்துரையாடல் தொடர்பில் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்த ஜோசப் ஸ்டாலின் ராமநாதன் இந்து மகளிர் கல்லூரி அதிபர் நிதி மோசடி தொடர்பில் குற்றம் நிரூபிக்கப்பட்டு பதவி நீக்கப்பட்டமை தொடர்பிலும் தனது கருத்தை தெரிவித்தார். 

அதாவது குறித்த அதிபர் நிதி மோசடி குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப்பட்டு பொதுச் சேவைகள் ஆணைக்குழுவால் அவர் பதவி நீக்கப்பட்டுள்ளார். எனவே இந்த விடயத்தை கருத்தில் கொண்டு எமது அதிபர்கள் விசேடமாக தமிழ் மொழி மூல பாடசாலைகளின் அதிபர்கள் தமது கடமைகளின் போது மிகக் கவனமாக நடந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி:

ரத்து செய்யப்பட்ட ஆசிரியர் தற்காலிக இணைப்பு மீண்டும் நடைமுறைக்கு - ஜோசப் ஸ்டாலின். ரத்து செய்யப்பட்ட ஆசிரியர் தற்காலிக இணைப்பு மீண்டும் நடைமுறைக்கு - ஜோசப் ஸ்டாலின். Reviewed by Irumbu Thirai News on September 01, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.