பட்டம் விடும் சிறுவர்கள்: விடுக்கப்படும் எச்சரிக்கை!

August 18, 2026


பாடசாலை விடுமுறை என்பதால் தற்போது சிறுவர்களிடையே பட்டம் விடுவது மிகவும் பிரபலமாகியுள்ள நிலையில், அதனால் ஏற்படும் விபத்துகளும் அதிகரித்திருப்பதாக கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனை பதில் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் பிரதீப் ரத்னசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், பட்டம் விடுதல் மகிழ்ச்சி அளிக்கும் செயலெனினும், பாதுகாப்பு விதிகளைப் புறக்கணிப்பது கடும் விளைவுகளை ஏற்படுத்தும். குழுக்களாக விளையாடும்போது ஏற்படும் மோதல்கள், உயரமான இடங்களில் இருந்து வீழ்தல், கட்டடங்களில் ஏறி நின்று பட்டம் விடும்போது கீழே விழுதல் போன்றவற்றால் பலத்த காயங்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. மிக முக்கியமான அபாயமாக, மின்கம்பிகளில் நூல் சிக்கும்போது மின்சாரம் நூல் வழியே பாய்ந்து குழந்தைகள் மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். இதனால் கை, தோள்பட்டை, நெஞ்சுப் பகுதிகளில் திசுக்கள், இரத்த நாளங்கள், நரம்புகள் கடுமையாக சேதமடைகின்றன. சில சந்தர்ப்பங்களில், சேதமடைந்த பகுதிகளை அறுவை சிகிச்சை மூலம் நீக்க வேண்டிய அவசியமும் ஏற்படுகிறது. என்றார்.

மேலும், இவ்வாறான விபத்துக்களில் உடனடி உயிரிழப்புகள் கூட நிகழலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே, உயர் மின்னழுத்த கம்பிகள் உள்ள பகுதிகளில் சிறுவர்கள் பட்டம் விடுவதைத் தடுக்க பெற்றோர்களும் பெரியவர்களும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளின் பொழுதுபோக்கைப் போன்றே அவர்களின் உயிர் பாதுகாப்பும் முக்கியமானது. இதனால், விபத்துக்களைத் தவிர்க்க பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் சமூகம் அனைவரும் பொறுப்புடனும் விழிப்புணர்வுடனும் செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


Previous:
பட்டம் விடும் சிறுவர்கள்: விடுக்கப்படும் எச்சரிக்கை! பட்டம் விடும் சிறுவர்கள்: விடுக்கப்படும் எச்சரிக்கை! Reviewed by Irumbu Thirai News on August 18, 2026 Rating: 5

கின்னஸில் இடம்பெறுமா திருகோணமலை சத்திரசிகிச்சை?

August 17, 2026


திருகோணமலை மாவட்ட பொது மருத்துவமனையில் உள்ள அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழுவினர், ஒரு நோயாளியின் சிறுநீர்ப்பையிலிருந்து 3.1 கிலோகிராம் எடையுள்ள மிகப்பெரிய கல்லை வெற்றிகரமாக  அகற்றியுள்ளனர். 

இது ஒரு உலக சாதனைக்குரிய மருத்துவ சாதனையாகக் கருதப்படுகிறது. 3 கிலோகிராம் 100 கிராம் எடையுள்ள இந்தக் கல், அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட உலகில் மிகப் பெரிய சிறுநீர்ப்பைக் கல் என்று நம்பப்படுவதாக இதில் ஈடுபட்ட மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 52 வயதுடைய நோயாளிக்கு, கடந்த வெள்ளிக்கிழமையன்று இந்த முக்கிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 

சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரகலாதன் பாலகிருஷ்ணன் தலைமையிலான நிபுணர் குழுவினர் இந்தச் சிக்கலான அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். இது ஒரு அர்ப்பணிப்புமிக்க குழு முயற்சியின் விளைவு என்று அவர் குறிப்பிட்டார். வெற்றிகரமான அறுவை சிகிச்சைக்குப் பிறகு பேசிய டாக்டர் பாலகிருஷ்ணன், ஆரம்பக்கட்ட பரிசோதனைகளில் வழக்கத்திற்கு மாறாக மிகப்பெரிய சிறுநீர்ப்பைக் கல் இருப்பது கண்டறியப்பட்டதாகவும், அதனையடுத்து நோயாளி, அறுவை சிகிச்சை குழுவிடம் பரிந்துரைக்கப்பட்டதாகவும் கூறினார். 

"இந்தச் சாதனை ஒரு கூட்டு முயற்சியின் விளைவாகும். ஆரம்பக்கட்ட பரிசோதனைகளில் நோயாளிக்கு மிகப்பெரிய சிறுநீர்ப்பைக் கல் இருப்பது தெரியவந்தது. பின்னர் அந்த விடயம் எங்கள் நிபுணர் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. அனைத்துத் தேவையான அறுவை சிகிச்சை நடைமுறைகளையும் பின்பற்றி, நோயாளியின் சிறுநீர்ப்பையிலிருந்து அந்தக் கல்லை வெற்றிகரமாக அகற்றினோம். கிடைக்கப்பெற்ற பதிவுகளின்படி, அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டதிலேயே இதுதான் மிகப்பெரிய சிறுநீர்ப்பைக் கல் ஆகும். நோயாளி தற்போது நல்ல உடல்நலத்துடன் உள்ளார்," என்று அவர் கூறினார். 

மிகவும் சவாலான இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்ட மருத்துவக் குழுவினரைப் பாராட்டிய மருத்துவமனை பணிப்பாளர் டாக்டர் சந்தமாலி சமரகோன், இதில் ஈடுபட்ட மருத்துவர்கள் மற்றும் துணைப் பணியாளர்களின் திறமை மற்றும் அர்ப்பணிப்பைச் சுட்டிக்காட்டினார். 

"எங்கள் மருத்துவர்களின் நிபுணத்துவம் மற்றும் அர்ப்பணிப்பு காரணமாகவே இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சிக்கலான சிகிச்சையைச் செய்வதற்கு மருத்துவக் குழுவும் மருத்துவமனை ஊழியர்களும் கிடைக்கக்கூடிய வளங்களைச் சிறந்த முறையில் பயன்படுத்தினர். இந்தச் சாதனை எங்கள் மருத்துவமனை அமைப்பு மற்றும் சுகாதார சேவையின் சிறப்பம்சத்தையும், தொழில்முறைத் திறனையும், ஆற்றலையும் பிரதிபலிக்கிறது," என்று அவர் கூறினார். 

இந்த மிகப்பெரிய சிறுநீர்ப்பைக் கல் வெற்றிகரமாக அகற்றப்பட்டது இலங்கையின் சுகாதாரத் துறைக்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமைவதுடன், நாட்டின் பொது சுகாதார அமைப்பில் பணியாற்றும் மருத்துவ நிபுணர்களின் திறனையும் வெளிப்படுத்துகிறது. நோயாளி தொடர்ந்து குணமடைந்து வருவதாகவும், இன்னும் சில நாட்களில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Previous 
கின்னஸில் இடம்பெறுமா திருகோணமலை சத்திரசிகிச்சை? கின்னஸில் இடம்பெறுமா திருகோணமலை சத்திரசிகிச்சை? Reviewed by Irumbu Thirai News on August 17, 2026 Rating: 5

மாயமான இலவச பாடநூல்கள்! ஐந்து பேர் கைது! தொடரும் விசாரணை....

August 17, 2026


இலவச பாடப் புத்தகங்களின் காணாமல் போன சம்பவம் குறித்து விசாரிக்கத் துறைசார் விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகக் பிரதி கல்வி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்தார். 

இந்த விவகாரம் தொடர்பாகக் பொலிஸ் விசாரணைகளும் நடைபெற்று வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார். 

பொலிஸ் விசாரணைகளின்படி, பாடப் புத்தகங்கள் போக்குவரத்திற்காக ஒப்படைக்கப்பட்ட பின்னர், முதல் சந்தேகநபர் குறித்த தொகுதி புத்தகங்களை அலவ்வவில் உள்ள ஓர் இடத்திற்கு விற்றுள்ளார். பின்னர், அந்த நிறுவனத்தின் உரிமையாளர் அந்தப் புத்தக இருப்பை நாரம்மலவில் உள்ள ஒரு நிலையத்திற்கு மறுவிற்பனை செய்துள்ளார்; அங்கிருந்து அவை பின்னர் வத்தளைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. 

கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு விநியோகிப்பதற்காக, கல்வி வெளியீட்டுத் திணைக்களம் மே 24 ஆம் திகதி இப்பாடப்புத்தகங்களை ஒப்படைத்திருந்தது. இத்தொகுப்பில் தமிழ் மொழிப் பயிற்சிப் புத்தகங்கள் மற்றும் மூன்றாம் தவணைக்கான முதலாம் வகுப்புப் பாடப் புத்தகங்கள் ஆகியவை அடங்கியிருந்தன. 

இவற்றின் பெறுமதி 800,000 ரூபாய்க்கும் அதிகமாகும். இச்சம்பவம் தொடர்பாக  இதுவரை  ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் முடியும் வரை அவர்கள் ஆகஸ்ட் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ்  உறுதிப்படுத்தியது.
மாயமான இலவச பாடநூல்கள்! ஐந்து பேர் கைது! தொடரும் விசாரணை.... மாயமான இலவச பாடநூல்கள்! ஐந்து பேர் கைது! தொடரும் விசாரணை.... Reviewed by Irumbu Thirai News on August 17, 2026 Rating: 5

பிள்ளைகளின் கருத்துக்களை வெளியிடல்: ஊடகங்களுக்கு கல்வி அமைச்சு விடுத்த எச்சரிக்கை!

August 16, 2026


ஊடகங்கள் குழந்தைகளின் கருத்துகளை அவர்களின் பெற்றோர் அல்லது ஆசிரியர்களின் அனுமதியின்றி பதிவு செய்வதையோ அல்லது வெளியிடுவதையோ தடை செய்து கல்வி அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த ஆண்டு 5ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய சில மாணவர்கள், ஊடகங்களுக்கு வழங்கிய கருத்துகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு கேலிக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவங்களை அடுத்தே இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

 பரீட்சைக்குப் பின் பிள்ளைகள் வழங்கிய கருத்துகள் மேற்கோள் காட்டப்பட்டு, அவர்களை ஏளனத்திற்கு ஆளாக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுவதை அமைச்சு அவதானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 பெற்றோர், பாதுகாவலர் அல்லது ஆசிரியர்களின் அனுமதியின்றி பிள்ளைகளின் கருத்துகளைப் பெறவோ, பதிவு செய்யவோ அல்லது ஒலிபரப்பவோ ஊடக நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை என அமைச்சு வலியுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

 மேலும், இவ்வாறான குழந்தைகள் தொடர்பான வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட ஊடக நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் கல்வி அமைச்சு எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிள்ளைகளின் கருத்துக்களை வெளியிடல்: ஊடகங்களுக்கு கல்வி அமைச்சு விடுத்த எச்சரிக்கை! பிள்ளைகளின் கருத்துக்களை வெளியிடல்: ஊடகங்களுக்கு கல்வி அமைச்சு விடுத்த எச்சரிக்கை! Reviewed by Irumbu Thirai News on August 16, 2026 Rating: 5
Powered by Blogger.