திவுலபிடிய கொரோனா எதிரொலி: 24-11-2020 நடந்தவை...
irumbuthirai
November 25, 2020
திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 51ம் நாள் அதாவது செவ்வாய்க்கிழமை (24) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம்.
- நாட்டில் கொவிட் 19 தொற்று நிலைமை காணப்பட்ட போதிலும் இவ் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 9,688 வழக்குகள் சட்டமா அதிபரால் நிறைவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல், 4,019 வழக்குகளில் பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செயயப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஸாரா ஜயரத்ன தெரிவித்தார்.
- கடந்த சில தினங்களுக்கு முன்னர் பஸ்ஸர பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்திருந்த நபருக்கு கொரோனா தொற்று காரணத்தால் 5 பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
- பல்கலைக்கழக பரீட்சைகளை நடத்தும் நடைமுறை விதிகள் குறித்து இந்த வாரத்தில் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.
- நுவரெலியா மாவட்டத்தில் நேற்று (23) வரை 89 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும், அவர்களில் 25 பேர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் இருந்து வந்தவர்கள் எனவும் நுவரெலியா மாவட்ட சுகாதார பணிப்பாளர் வைத்தியர் இமேஷ் பிரதாபசிங்க இன்று (24) தெரிவிப்பு.
- இதுவரை காலமும் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் நடைமுறையே அமுலானது. இது உலகளாவிய ரீதியில் ஆராய்ந்து மேற்கொள்ளப்படும் தீர்மானமாகும். இங்கு ஒரு இனத்தை அல்லது மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு தனித்துவம் அளிக்க முடியாது. வைரஸ் தொற்று பரவும் விதம் போன்றவற்றை ஆராய்ந்து விஞ்ஞான ரீதியாக முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. இவையெல்லாம் நாட்டு நலன் கருதி மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் என டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
- கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த பிரதேசங்களிலிருந்து சென்றமை காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. நுவரெலியாவில் இரண்டு இடங்களில் பதிவாகியுள்ளன. ஒரு இடம் மஸ்கெலியா. கடந்த தினத்தில் தமிழர்களின் பண்டிகை ஒன்று இருந்தது. நாம் அறிவித்திருந்தோம் மலையக பிரதேசங்களுக்கு செல்ல வேண்டாம் என்று. எனினும் நபர் ஒருவர் மஸ்கெலியா பிரதேசத்திற்கு சென்றிருந்தார். அதேபோல் நுவரேலியா பிரதேசத்திற்கும் கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் இருந்த நபர் ஒருவர் சென்றிருந்தார். இந்த இரண்டு சம்பவங்களின் மூலம் மலையகத்திற்கு நோய் பரவியுள்ளது. நாம் இந்த இரண்டு விடயங்களையும் புலனாய்வு பிரிவு ஊடாக விசாரணை செய்தோம். ஒரு சில பிரதேசங்களில் நோயாளர்கள் பதிவாகும் அதேவேளை ஏனைய பிரதேசங்களுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பில் ஆராயப்படுகின்றது. அதனடிப்படையிலேயே தனிமை படுத்துவதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என ராணுவ தளபதி தெரிவிப்பு.
- நேற்று பாடசாலைகளில் ஆசிரியர் மற்றும் மாணவர் வரவு திருப்திகரமான மட்டங்களில் இருந்ததாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
- அம்பலாங்கொடை பகுதியில் உள்ள பிரபல பாடசாலைகள் இரண்டிலுள்ள 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த பாடசாலைகளில் கல்வி பயிலும் அம்பலாங்கொடை-திலகபுர பகுதியில் வசித்து வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தாயும் தந்தையும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பாடசாலைகளில் மூன்றாம் தவணை ஆரம்பமாகியுள்ள நிலையில் நேற்றைய தினம் குறித்த குடும்பத்தில் உள்ள இரண்டு மாணவர்கள் பாடசாலைக்கு சென்றுள்ளனர். இதன் காரணமாகவே அவர்களுடன் நெருங்கி பழகிய மாணவர்களும் ஆசிரியர்களும் தற்போது தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.
- அக்குரணையில் இதுவரை 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அங்கு குறித்த சில கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவிற்கு இன்று முதல் நடமாட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
- பேருவளை பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
- இலங்கையில் இதுவரை கர்ப்பிணித்தாய்மார்கள் 50 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இன்று முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இன்றைய தினம் மாத்திரம் 459 பேருக்கு கொரோனா உறுதியானது.
- Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 24-11-2020 நடந்தவை...
Reviewed by irumbuthirai
on
November 25, 2020
Rating:
Reviewed by irumbuthirai
on
November 25, 2020
Rating:












