எலிகளிடம் பரிசோதனை: கண்டுபிடிக்கப்பட்டது கொரோனாவுக்கான சிகிச்சை முறை!
irumbuthirai
July 08, 2021
உலகையே அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரசுக்காக இதுவரை பல தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் இதற்கான சிகிச்சை முறை ஒன்றை தற்போது அமெரிக்க கன்சாஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அந்த வகையில் கொரோனா வைரஸ் பாதித்த எலிகள் உள்ளிட்ட இன்னும் சில விலங்குகளுக்கு புரோட்டீஸ் என்சைம் தடுப்பான் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன்போது, அவற்றின் இறப்புகள்
குறைவதுடன், நுரையீரல் தொற்று குறைவதும் கண்டறியப்பட்டு உள்ளது.
வைரஸ் தடுப்பு மருந்துகளின் ஒரு வகையான இந்த புரோட்டீஸ் தடுப்பான்களால், வைரஸ்களின் இனப்பெருக்கம் தடுப்பதுடன், வைரஸ் உற்பத்திக்கு தேவையான புரதங்களை செயல்படுத்துவதையும் தடுக்கப்படுகிறது.
இது தொடர்பாக கன்சாஸ் பல்கலைக்கழக இணை பேராசிரியரான யுன்ஜியோங் கிம் கூறுகையில்,
‘பூனைகளுக்கு கொரோனா சிகிச்சைக்காக நாங்கள் இந்த புரோட்டீஸ் தடுப்பான்களை ஜிசி376 உருவாக்கினோம். தற்போது அது விலங்குகளுக்கான மருந்தாக வர்த்தக ரீதியான தயாரிப்பில் உள்ளது’ என்று தெரிவித்தார்.
கொரோனா வைரசுக்கு எதிராக இந்த தடுப்பானும் பயனுள்ளதாக இருப்பதாக பல ஆராய்ச்சி குழுக்கள் தெரிவித்ததாக கூறிய கிம், தற்போது பலரும் இதை ஒரு சிகிச்சையாக தொடர்வதாகவும் தெரிவித்தார்.
இந்த புரோட்டீஸ் என்சைம் தடுப்பான் ஜிசி376-ஐ டியூட்டிரேசன் மூலம் மாற்றியமைக்கும்போது, அது கொரோனா வைரசுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவதாக இந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தொற்று பாதித்த எலிக்கு 24 மணி நேரத்துக்கு பின் இந்த சிகிச்சையை மேற்கொள்ளும்போது, சிகிச்சை பெறாத எலிகளை விட சிகிச்சை பெற்ற எலிகளிடம் இறப்பு விகிதம் மிகவும் குறைவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
கொரோனாவுக்கு எதிராக பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி மேம்பட்ட தடுப்பான்களை வைரஸ் சிகிச்சை நிபுணர்கள் உருவாக்கி வருகின்றனர். இதில் மேற்படி சிகிச்சை முறை மேலும் சாத்தியமான மேம்பாட்டுக்காக மதிப்பீடு செய்யப்படுகிறது.
எலிகளிடம் இந்த சிகிச்சை முறை வெற்றி பெற்றிருப்பதன் மூலம் இது கொரோனா சிகிச்சை முறையில் முக்கிய திருப்பு முனையாக கருதப்படுகிறது.
Source: Thinakaran.
எலிகளிடம் பரிசோதனை: கண்டுபிடிக்கப்பட்டது கொரோனாவுக்கான சிகிச்சை முறை!
Reviewed by irumbuthirai
on
July 08, 2021
Rating:
Reviewed by irumbuthirai
on
July 08, 2021
Rating:













