அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாட்டிற்கான தீர்வு கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டு 31ஆம் திகதி அறிவிக்கப்பட்டது.
அந்தப் பரிந்துரைகளுக்கு தொழிற்சங்கம் என்ற அடிப்படையில் நாம் எதிர்ப்பு தெரிவித்தோம். மேலும் இது தொடர்பில் கலந்துரையாடல் செய்வதற்காக ஜனாதிபதியிடமும் நிதியமைச்சரிடமும் சந்தர்ப்பம் வேண்டி வேண்டுகோள் விடுத்தோம். ஆனால் இதுவரை எந்த பதிலும் இல்லை.
எனவே அரசாங்கம் இந்தப் பிரச்சினை தொடர்பில் அலட்சியமாகவே இருப்பதாக தோன்றுகிறது என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மகிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.
தனது முகநூல் காணொளி ஒன்றின் மூலமே அவர் இன்றைய தினம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
எமது போராட்டம் தொடர்பாக மதத் தலைவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தெளிவூட்டும் நடவடிக்கைகள் தற்போது சிறப்பாக முன்னெடுக்கப்படுகின்றன.
ஏனையவர்களும் இதில் இணைந்து செயற்படுங்கள். தொழிற்சங்கமே எல்லாவற்றையும் செய்து தர வேண்டும் என எதிர்பார்க்காமல் ஒவ்வொருவரும் ஆக்கபூர்வமாக பங்களிக்க வேண்டும்.
மேலும் 15 ஆம் திகதிக்கு முன்னர் பரீட்சைக்கு விண்ணப்பிக்காத அதிபர்கள் அது தொடர்பில் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்த விடயம் தொடர்பாக நாம் எமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி அவருக்கு மீண்டும் பதில் கடிதம் அனுப்பியுள்ளோம்.
அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்களின் ஒன்றியம் என்ற அடிப்படையில் எல்லா சங்கங்களும் சேர்ந்து
இந்த கடிதத்தை கடந்த 10 ஆம் திகதி செயலாளருக்கு அனுப்பி உள்ளோம்.
அதில் குறித்த விடயங்கள் எம்மால் செய்ய முடியாது என தெளிவாகவே தெரிவித்து இருக்கிறோம்.
எனவே எந்த அதிபர்களும் குறித்த பரிட்சைக்கு விண்ணப்பிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அவ்வாறு விண்ணப்பிக்காத அதிபர்களுக்காக தொழிற்சங்கம் எப்பொழுதும் முன்னிற்கும் என தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் நேற்றைய தினமும் இது தொடர்பாக அதிபர்களுடன் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. அதில் தற்போதைய சிக்கல்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. இறுதியாக பரிட்சைக்கு விண்ணப்பிப்பதில்லை என்ற தீர்க்கமான முடிவு எட்டப்பட்டது.
இதேவேளை வேறு வேறு சங்கங்களின் பெயரில்
போலியான அறிக்கைகள் வெளிவருகின்றன. அவற்றைக் கண்டு ஏமாந்து பரிட்சைக்கு விண்ணப்பிக்க வேண்டாம்.
அமைச்சரவையின் தீர்வு அறிவிக்கப்பட்டதன் பின்னர் நடைபெறுகின்ற இரண்டாவது அமைச்சரவை கூட்டம் இன்று இடம்பெறுகிறது.
கடந்த அமைச்சரவைக் கூட்டத்திலும் இது தொடர்பில் எவ்வித விடையமும் பேசப்பட்டிருக்கவில்லை.
இன்றைய அமைச்சரவை கூட்டத்திலாவது ஏதாவது முடிவு எடுக்கிறார்களா எனப் பார்ப்போம்.
எவ்வாறாயினும் உரிய தீர்வு கிடைக்கும் வரை நமது போராட்டம் தொடரும் என அவர் மேலும் தெரிவித்தார்.
Irumbuthirainews.com
போலி அறிக்கைகளைப் பார்த்து பரீட்சைக்கு விண்ணப்பிக்க வேண்டாம் - மஹிந்த ஜெயசிங்க
Reviewed by Irumbu Thirai News
on
September 13, 2021
Rating:
Reviewed by Irumbu Thirai News
on
September 13, 2021
Rating:

No comments: