(30.3.2026 அன்று வெளியான இலங்கை தொடர்பான செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்)
2026 ஓகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களைக் கோருவது தொடர்பான அறிவித்தலை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, இன்று (30) முதல் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி வரை விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
எக்காரணம் கொண்டும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான இறுதித் திகதி நீடிக்கப்பட மாட்டாது என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
கணேமுல்ல சஞ்சீவ படுகொலைச் சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டு, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் (CCD) தடுத்து வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்திக்கு பிறந்தநாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டமை தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
யாழ்ப்பாணத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை உழவு இயந்திரத்தால் மோதிக் கொலை செய்ததுடன், மற்றுமொரு உத்தியோகத்தருக்குப் படுகாயமேற்படுத்திய சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரதான சந்தேகநபர் தலைமறைவாக உள்ள நிலையில், அவரைத் தேடும் பணிகளை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோரால் முன்வைக்கப்பட்ட ஆரம்பக்கட்ட ஆட்சேபனைகளை நிராகரிப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
நாளை (31) மனித உடலுக்கு உணரக்கூடிய வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. முதியவர்கள் மற்றும் நோயாளிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும், குறிப்பாக சிறுவர்களை வாகனங்களுக்குள் தனியாக விட்டுச் செல்வதைத் தவிர்க்குமாறும் கூறப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தமக்கான சேவைகளை இலகுவாகப் பெற்றுக்கொள்வதற்காக, தேர்தல் ஆணைக்குழு தனது இணையவழி "தேர்தல் இ-சேவை" (E-Services) முறையை மேலும் விரிவாக்கியுள்ளது.
இதன்படி, கிராம உத்தியோகத்தர் அலுவலகங்கள், மாவட்ட தேர்தல் அலுவலகங்கள் அல்லது தேர்தல் ஆணைக்குழுவிற்கு நேரில் செல்லாமலேயே, இணையம் ஊடாகத் தேவையான சேவைகளைப் பெற்றுக்கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து சரத் கணேகொட மார்ச் 31ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ராஜினாமா செய்துள்ளார்.
அரகலய' போராட்டக் காலத்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான இல்லத்திற்கு அருகில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சட்டமா அதிபர் இன்று (30) உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ விநியோகக் கொள்வனவு நடவடிக்கைகள் குறித்து அரசாங்க கணக்காய்வாளர் நாயகத்தினால் தடவியல் கணக்காய்வு (Forensic Audit) ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக சட்டமா அதிபர் இன்று (30) உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடி நிலைமையையடுத்து, நாட்டில் யூரியா உரக் கையிருப்பு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் உள்ளதால், நெற்செய்கைக்கு மாத்திரம் யூரியா உரத்தை வழங்க விவசாய அபிவிருத்தி திணைக்களம் தீர்மானித்துள்ளது.
முறைைற்ற இடமாற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், விருப்பமின்றி நாளை (31) காலை 08.00 மணி முதல் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை 10 சதவீதத்தால் அதிகரிப்பதற்குப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது. நுகர்வோர் பயன்படுத்தும் மின்சார அலகுகளின் அடிப்படையில் இம்முறை மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படும் சதவீதம் மாறுபட்டுள்ளது. இந்த மின்சாரக் கட்டண திருத்தம் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
வெளிநாடுகளில் மறைந்துள்ள குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை நாட்டிற்கு கொண்டு வரும் திட்டத்தின் கீழ், கடந்த மூன்று ஆண்டுகளில் 30 பாரிய குற்றவாளிகளை நாட்டிற்கு அழைத்து வர முடிந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
1990 ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரையை முடித்துவிட்டு, கல்முனை வழியாகக் காத்தான்குடிக்குச் சென்று கொண்டிருந்த முஸ்லிம்கள் ஆயுததாரிகளால் இடைமறிக்கப்பட்டு, குருக்கள்மடத்தில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டு அப்பகுதியில் புதைக்கப்பட்ட வழக்கு விசாரணைகளை தொடர்ந்த களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற நீதிவான் ரி. பிரதீபன் முன்னிலையில் இன்று (30) முதலாம் கட்ட அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
இணையதளம் ஊடாக நிதி மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 125 சீனப் பிரஜைகள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில், தினசரி சில மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டியிருக்கும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர், பொறியியலாளர் சந்தன பண்டார தெரிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க, ஏப்ரல் 10 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
-- x --
News Updates in Tamil (30.3.2026)
Reviewed by Irumbu Thirai News
on
March 30, 2026
Rating:
Reviewed by Irumbu Thirai News
on
March 30, 2026
Rating:

No comments: