(28.3.2026 வெளியான இலங்கை தொடர்பான செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்)
ஹட்டன் பகுதியிலுள்ள பிரதான பாடசாலை ஒன்றில், வகுப்பறைக்குள் வைத்து மாணவர் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக இரண்டு மாணவர்கள் மற்றும் ஒரு பழைய மாணவர் உட்பட மூவர் இன்று (28) கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் தலைமையக காவல்துறையினர் தெரிவித்தனர்.
உலகின் மிகக் குறைந்த கட்டுப்படியாகக்கூடிய வீட்டுச் சந்தைகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளதாக தி எக்கோனமிஸ்ட் இதழ் தெரிவித்துள்ளது. இலங்கையில் நிலவும் தற்போதைய பொருளாதாரச் சூழலில், நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் பெறும் மக்கள் சொந்தமாக ஒரு வீட்டைக் கொள்வனவு செய்வது எட்டாக்கனியாக மாறியுள்ளதை இந்த அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
கேகாலை - அம்பேபுஸ்ஸ பகுதியில் 1200 லீற்றர் டீசலை சட்டவிரோதமாக விற்று வந்த நடமாடும் வாகனமும், ஒரு நபரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சித்திரை புத்தாண்டு மற்றும் பண்டிகைக் காலங்களில் அத்தியாவசியப் பொருட்களைப் பதுக்குவதைத் தடுப்பதற்காக, ஏப்ரல் 30 ஆம் திகதி வரை மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களில் விசேட சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.
இலங்கையின் பல மாகாணங்களில் வெப்பச் சுட்டெண் அதிகரித்து வருவதால், வளிமண்டலவியல் திணைக்களம் வெப்ப எச்சரிக்கையை விடுத்துள்ளது. எதிர்வரும் நாட்களில் வெப்பநிலை மேலும் உயர்வாகவே காணப்படும் என்பதால் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குமண தேசிய பூங்காவிற்குட்பட்ட பம்பர கஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்தில் தங்கியிருந்த துறவி ஒருவர் சிறுத்தை தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
காவல்துறை வழங்கிய தகவலின்படி, உயிரிழந்த துறவி செக் குடியரசு நாட்டைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இலங்கையில் இன்று 24 கரட் தங்கம் ஒரு பவுண் 390,000 ரூபாயாகவும்
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 358,800 ரூபாயாகவும் அதிகரிப்பு
பேருந்துகளில் திருத்தப்பட்ட கட்டணங்களைப் பொதுமக்களுக்குக் காண்பிப்பது கட்டாயம் என மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது. இவ்வாறு கட்டணப் பட்டியலைக் காட்சிப்படுத்தாத பேருந்துகளின் அனுமதிப்பத்திரங்கள் ரத்து செய்யப்படும் அல்லது அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் நோக்கில், பதிவுசெய்யப்பட்ட சுற்றுலா வாகன நடத்துனர்களுக்கு 400,000 லீற்றர் எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
வாகனங்கள் இன்றி இயந்திரங்கள் மூலம் விவசாயம், கடற்றொழில் மற்றும் ஏனைய தொழில்களில் ஈடுபடுவோருக்காகப் புதிய QR குறியீட்டு முறையொன்றை அறிமுகப்படுத்த இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
உழவு இயந்திரம், படகுகள் மற்றும் ஏனைய இயந்திரங்களைப் பயன்படுத்தும் விவசாயிகள், கடற்றொழிலாளர்கள் மற்றும் சிறு தொழிலதிபர்களுக்கு இது வரப்பிரசாதமாக அமையும்.
பொதுமக்கள் தமது எரிபொருள் தேவை குறித்து கிராம உத்தியோகத்தர் அல்லது பிரதேச செயலகத்திற்குத் தெரியப்படுத்துவதன் மூலம் இதனைப் பெற்றுக்கொள்ளலாம்.
மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க, எதிர்வரும் மார்ச் மாதம் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வாகனப் பதிவின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய முறைகேடுகள் மற்றும் மோசடிகள் தொடர்பான விசாரணைகளுக்காக, நேற்றிரவு (27) குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் (CID) அவர் கைது செய்யப்பட்டார்.
நீர்கொழும்பு பகுதியில் சுற்றுலாவிசாவில் நாட்டிற்கு வருகை தந்து இணையவழி மோசடியில் ஈடுபட்ட 45 வெளிநாட்டுபப்பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் சீனா, மலேசியா மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் என தெரிய வந்துள்ளது.
இலங்கை தொடருந்து திணைக்களம், CSRP செயற்திட்டத்தின் கீழ் ஏப்ரல் மாதம் முதல் 'ஸ்மார்ட்' பயணச்சீட்டு (Smart Ticketing) முன்னோடித் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளது.
இதன் மூலம் நாடு முழுவதும் தற்போது நடைமுறையிலுள்ள காகித பயணச்சீட்டுகளுக்குப் பதிலாக புதிய டிஜிட்டல் பயணச்சீட்டு முறையை அறிமுகப்படுத்துவதே நோக்கமாகும்.
இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்வி நலனைக் கருத்திற்கொண்டு, இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர் கல்வி நிதியத்தினால் (CEWET) வழங்கப்படும் கல்விப்புலமைப்பரிசில்களுக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இந்த மார்ச் மாத இறுதியில் எரிபொருள் விலைகளில் எவ்வித திருத்தங்களும் மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் திருச்சி, கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் 39 வயதான ஆர். கோகுலேஸ்வரன் என்பவர், தமிழ்நாட்டில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் இந்தியப் பிரஜையாக முதல்முறையாகத் தனது வாக்கைப் பதிவு செய்யவுள்ளார்.
-- xx--
Sri Lanka News Updates 28.3.2026
Reviewed by Irumbu Thirai News
on
March 29, 2026
Rating:
Reviewed by Irumbu Thirai News
on
March 29, 2026
Rating:

No comments: