கல்வியமைச்சின் செயலாளருடனான கூட்டத்தில் நடந்தது என்ன? முழு விபரம்..
நேற்று மாலை வேளையில் நடைபெற்ற இந்த கூட்டம் முடிவடைந்து ஊடகங்களுக்கு தொழிற்சங்க பிரதிநிதிகள் கருத்து தெரிவித்தனர்.
கல்வியமைச்சின் செயலாளர் உடனான இந்த சந்திப்பு தோல்வியில் முடிவடைந்தது. அமைச்சரவை தீர்மானம் எடுக்கப்பட்டு 16 நாட்கள் கடந்த பின்னர் தான் இவ்வாறு உத்தியோகபூர்வமாக அறிவிப்பதற்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். அங்குள்ள அதிகாரிகளால் எமது பிரச்சினைக்கு தீர்வு தர முடியாத. கல்வி அமைச்சராவது அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
இந்த பிரச்சினைகளை அவசரமாக தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை. அமைச்சரவை உப குழுவின் பரிந்துரைகளின் படி அதிபர் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் தொடர்பாகவும் நாம் தெரிவித்தோம். அவை எவற்றுக்கும் சரியான பதில் கிடைக்கவில்லை.
இந்த போராட்டங்களை இவ்வளவு நாட்கள் இழுத்துச் செல்வது அரசாங்கம்தான். நிதியமைச்சர் உடனும் ஜனாதிபதியுடனும் பேசினால்தான் இதற்கான தீர்வு வரும் என நாம் நினைக்கிறோம். எனவே அதை நாம் வலியுறுத்தினோம்.
இறுதியில் கல்வி அமைச்சின் ஏற்பாட்டுடன் நிதியமைச்சர் உடனான சந்திப்புக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தி தருவதாக அதிகாரிகள் கூறினர் என அவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை அரச சார்பு தொழிற்சங்கமான இலங்கை பொதுஜன கல்வி சேவை சங்கத்தின் தலைவி வசந்தா தெரிவிக்கையில்,
எமது சங்கம் 5000 ரூபா இடைக்கால கொடுப்பனவை பெற்றுக்கொண்டு பணிகளை ஆரம்பிக்க தயாராக இருக்கிறது. ஆனால் இவர்கள் அதற்கு இணங்க கிறார்கள் இல்லை.
நிதியமைச்சர் உடனான சந்திப்புக்கான நேரமல்ல இது. அவருக்கு இதைவிட முக்கியமான கடமைகள் பொறுப்புக்கள் காணப்படுகின்றன என்ற அடிப்படையில் அவர் கருத்து தெரிவித்தார்.
இதேவேளை உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்ப திகதி நீடிப்பு தொடர்பாக தீர்மானம் எடுக்கப்பட்டதா? என ஊடகவியலாளர் கேட்டதற்கு
அவ்வாறான எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என தெரிவித்தனர். தற்போதைய நிலைமைகளை கருத்திற்கொண்டு விண்ணப்பத்தை நீடிக்குமாறு நாம் வேண்டுகோள் விடுத்தோம் என்றனர்.
பரீட்சைகள் தொடர்பாக வினவியதற்கு, பரீட்சைகளை நடத்த வேண்டுமென்றால் பாடசாலைகளை ஆரம்பிக்கவேண்டும். பாடசாலைகளை ஆரம்பிக்க வேண்டும் என்றால் அதற்குரிய முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். இதில் எது நடக்க வேண்டுமென்றாலும் எங்களது போராட்டம் நிறைவுக்கு வர வேண்டும். போராட்டம் நிறைவு பெறாமல் இந்த கருமங்கள் நடைபெறாது என தெரிவித்தனர்.
மேலும் அரசாங்கம் உரிய தீர்வை தரும் வரை இந்த போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்தனர்.
- Irumbuthirainews.com
