அரசியல் களத்தில் திரைக்கு பின்னால்...... - சமகால அரசியல் பார்வை...


#அரசியல், பொருளாதார சிக்கல்களை மிஞ்சிய கோவிட் 19

கோவிட் 19 ஐ மிஞ்சிய 20 என்ற தலைப்பில் கடந்த கடைசி கட்டுரையில் முதல் உபதலைப்பை இட்டிருந்தோம். இன்று அதன் மறுதலையான தலைப்பை இடும் அளவிற்கு கோவிட் 19 இன் தீவிரம் அதிகரித்துள்ளது. 
கோவிட் 19 இன் இரண்டாம் அலை மிக மோசமாக இலங்கையை தாக்கியுள்ளது. சிறப்பாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்த பரவலானது இரண்டாம் அலை காரணமாக தறிகெட்டு பரவும் நிலை உருவாகியுள்ளது. 
குறிப்பாக இலங்கைக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட அமெரிக்க இராஜாங்க செயலர் பொம்பியோவின் வருகையை விட கோவிட் 19 தொடர்பான விவகாரங்களே ஊடகங்களில் முதன்மை இடம் பெற்றன. 
#அமைச்சரவைக் கூட்டம்
கடந்த வாரத்தின் அமைச்சரவைக் கூட்டம் கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. வழமையாக ஓரிரு மணித்தியாலங்களில் நிறைவடையும் அமைச்சரவைக் கூட்டம் இம்முறை சுமார் மூன்றரை மணி நேரம் நடைபெற்றது. கோவிட் 19 இன் இரண்டாம் அலை மற்றும் அமெரிக்க ராஜாங்க செயலர் பொம்பியோவின் வருகை பற்றிய விடயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளமையால் இது நீண்ட நேரம் நீடித்துள்ளது. இவை தொடர்பில் நீண்ட விளக்கங்களை ஜனாதிபதி வழங்கினார். 
எதிர்க்கட்சிகள் சொல்வது போன்று அமெரிக்க இராஜாங்க செயலரின் வருகை MCC ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கானது அல்ல என்றும், அது தொடர்பில் உடன்பாடுகள் ஏற்படுத்திக் கொள்ளப்பட மாட்டாது என்றும் கூறியதுடன், 
கோவிட் 19 ஐ கட்டுப்படுத்த எல்லா நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும், முழு நாட்டையும் மீண்டும் லொக் டவுன் செய்யும் நோக்கம் இல்லையென்றும், நோயாளர்கள் கண்டுபிடிக்கப்படும் பிரதேசங்களை தனிமைப்படுத்தி கட்டுப்படுத்த முடியும் என்றும் கூறினார். 

#பொம்பியோ வருகை
கடந்த புதன் கிழமை இரவு அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இலங்கை வந்தார். இந்தியா, மாலைதீவு மற்றும் இந்தோனேஷிய விஜயத்தில் திடீர் என்று இலங்கையையும் இணைத்துக் கொண்டு, சுமார் 12 மணிநேர விஜயமாக இலங்கைக்கு வந்து சென்றார் பொம்பியோ. புதன் கிழமை காலை அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தார். 
MCC ஒப்பந்தம் கைச்சாத்திடப்படலாம் அல்லது அது தொடர்பான தீர்மானம் ஏதும் மேற்கொள்ளப்படலாம் என்று பலரும் எதிர்வு கூறிய போதிலும் நாம் ஏற்கனவே சொன்னது போன்று அவ்வாறான எவையும் இங்கே நடைபெறவில்லை. டிரம்ப் ஜனாதிபதியின் பின்னரான அமெரிக்க சீன உறவில் ஏற்பட்டிருக்கும் பதற்றமே இந்த பயணத்திற்கான காரணமாகும். 
பொம்பியோவின் விஜயத்திற்கு முன்னர் "இருவரில் ஒருவரை தெரிவு செய்ய வேண்டும்" என்று சொன்னமை, "சீன கடன் பிடியில் இலங்கை சிக்க வைக்கப்பட்டுள்ளது" என்று சொன்னமை மற்றும் அவற்றுக்கான சீன அரசின் பதில்கள் என்பன சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்திருந்தன. சந்திப்பின் போது "யுத்தம் நிறைவடைந்த பின்னர் நாட்டைக் கட்டியெழுப்ப சீனா எமக்கு உதவியது. அவ்வாறில்லாமல் சீனாவின் கடன் பிடியில் நாம் சிக்கவில்லை" என்று பொம்பியோவிடம் ஜனாதிபதி தெரிவித்தமை முக்கிய திருப்பமாக இருந்தது. 
அவ்வாறே அமெரிக்கா வழங்கிய ஒத்துழைப்புக்களையும் நினைவுகூர்ந்த ஜனாதிபதி அதற்கு நன்றி தெரிவித்தார். அத்துடன் இலங்கை தொடர்ந்தும் அணிசேராக் கொள்கையை கடைப்பிடிக்கும் என்றும் தெரிவித்தார். 

#பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறாக கோவிட் 19# 
இம்மாதத்திற்கான பாராளுமன்ற அமர்வுகள் செவ்வாய்க் கிழமை ஆரம்பமாகின்றது. பொதுவாக பாராளுமன்ற நடவடிக்கைகள் பிரதி வாரமும் செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை நடைபெறுவது வழமை. எனினும் இவ்வாரம் ஒரு நாளுக்கு அது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இம்மாத பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கான கூட்டம் சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற போது கோவிட் 19 காரணம் காட்டி இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
தினேஷ், ஜோன்ஸ்டன், கிரிஎல்ல, டலஸ், பீரிஸ், வாசு, அமரவீர, அலி சப்ரி, டிலான், ஹக்கீம், மஹிந்த சமரசிங்க ஆகியோர் பங்குபற்றிய கட்சித்தலைவர் கூட்டத்தில் இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோவிட் 19 சவாலிடையே பாராளுமன்றத்தை நடாத்திச் செல்வது தொடர்பில் ஆராயப்பட்டதுடன், வாரம் முழுவதும் பாராளுமன்ற கூட்டத்தை நடாத்திச் செல்வது பொருத்தமானது அல்ல என்று எல்லா கட்சித் தலைவர்களுமாற் போல் கருத்து தெரிவித்தனர். 
3 ஆம் திகதி கொண்டு வருவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள மருத்துவ சட்டமூலத்தின் விதிகளை விவாதித்து நிறைவற்றிக் கொள்வது என்றும் 2 மணித்தியாளங்களுக்கு மட்டும் கூட்டத்தை மட்டுப்படுத்துவதுடன், வரையறுக்கப்பட்ட உறுப்பினர்களாக மாத்திரம் பாராளுமன்றிற்கு அழைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறே இவ்வாண்டுக்காக முன்வைக்கப்பட்டுள்ள குறைநிரப்புப் பிரேரணையை எதிர்வரும் 12, 13 ஆம் திகதிகளில் விவாதத்திற்கு எடுத்து நிறைவேற்றிக் கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது. 

#பட்ஜெட்க்கு தடையாகும் கோவிட் 19#
அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 17 ஆம் திகதி முன்வைக்கப்படவுள்ளது. முன்னர் வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டால் இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதம் ஒரு வார காலமும், குழு நிலை விவாதம் ஒரு மாத காலமும் நடைபெறுவது வழக்கம். எனினும் இம்முறை அவற்றுக்கான கால எல்லைகள் குறைக்கப்படுவதற்கான சாத்தியமே உள்ளது. அவற்றிலும் சில அமைச்சுக்களின் செலவுத் தலைப்புகள் தொடர்பில் குழு நிலை விவாதம் நடத்தாமல், நிலையியற் குழுக்களுக்கு அனுப்பி கலந்துரையாடலின் பின்னர் குழு நிலையில் நிறைவேற்றிக் கொள்வது தொடர்பிலும் அரசு அவதானம் செலுத்தி வருகிறது.  

#சஜித் ஆனந்த தேரர் சந்திப்பு
 2015 ஜனாதிபதி தேர்தலில் தோல்வி கண்டு மெதமூலன வலவ்வ ஜன்னலில் தொங்கி மக்களுடன் பேசிய மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் போஷித்து, புது வழிகாட்டி, செயற்பாட்டு அரசியலுக்கு அழைத்து வந்ததில் முக்கிய பங்கு கொழும்பு அபயாராம விகாராதிபதி மேல் மாகாண சங்க நாயக்க முறுத்தெட்டுவே ஆனந்த தேரரின் பங்களிப்பு மறுக்க முடியாதது. 
20 க்கு எதிராக பகிரங்கமாக முரண்பட்டு நின்ற தேரரை கடந்த வாரம் எதிர்க்கட்சி தலைவர் சஜித் சந்தித்தமை முக்கிய நிகழ்வாக அமைந்திருந்தது. அதன் போது மத மறுமலர்ச்சிக்காக சஜித் மேற்கொள்ளும் "சசுனட அருண' வேலைத்திட்டம் குறித்தும் தேரருக்கு தெளிவுபடுத்தினார். கொரோனா, 20க்கு ஆதரவு வழங்கிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றியும் சஜித் தேரரிடம் பேசினார். 

#சஜித்க்கு நன்றி தெரிவித்த சவேந்ர# 
இறுதி யுத்தம் நடைபெற்ற போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகக் கூறி, இலங்கை இராணுவத்தின் முக்கிய படைப்பிரிவு ஒன்றின் கமாண்டராக கடமையாற்றிய தற்போதைய இலங்கை ராணுவத் தளபதி சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பயணத் தடை விதித்துள்ளது அமெரிக்கா. 
அமெரிக்க இராஜாங்க செயலாளரின் இலங்கை விஜயத்தின் போது குறித்த தடையை நீக்க கோருமாறு எதிர்க்கட்சியினர் அரசிடம் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வந்தனர். குறிப்பாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் தொடர்ச்சியாக இது குறித்து பேசினார். இது குறித்து தமது நன்றிகளை சஜித்க்கு தெரிவித்துக் கொண்டார் இராணுவ தளபதி சவேந்திர சில்வா. 

#ஐக்கிய மக்கள் சக்தியின் உரிமை யாருக்கு
கடந்த வாரம் ஐமச இன் கூட்டம் நடைபெற்றது. "Sir டயானா (கமகே) சொல்கிறார் இந்தக் கட்சி அவருடையது என்று" என ஆரம்பித்தார் ஹேஷா எம்பி. "கட்சி தாவியவர்களை கட்சியை விட்டு நீக்க எடுத்த முடிவு நல்லது. கட்சி தாவித் திரியும் தவளைகளுக்கு இப்படித்தான் செய்ய வேண்டும்" என்று சொன்னார் சாமிந்த விஜேசிறி எம்பி. 
 "அது மட்டுமல்ல எம்மைப் பற்றியும் ஒவ்வொரு வதந்திகள் உலாவுகின்றன" என இணைத்து கொண்டார் மயந்த எம்பி. "ஆளாளுக்கு சொல்லும் கதைகளுக்கு நாம் பதிலளிக்க அவசியமில்லை. அவர்கள் பொய்களை ஏந்திக்கொண்டு சுற்றட்டும். இறுதியில் அவர்களுக்கு எஞ்சுவது பொய்களை எடுத்துக்கொண்டு சுற்றிய களைப்பு மட்டுமே" என சஜித் கூறினார். 
தொடர்ந்தும் "இந்த வதந்திகளை பரப்பும் நபர்கள் யார் என்பதையும், அவர்கள் என்ன நோக்கில் செய்கிறார்கள் என்பதையும் நான் அறிவேன். நீங்கள் உங்கள் வேலைகளைச் செய்யுங்கள். எமது வேலை மக்களை வெற்றியடையச் செய்வது" என்றும் கூறினார். 
 
#ஆடைத் தொழிற்சாலைகளில் இருந்து சஜித்க்கு வந்த முறைப்பாடு
கம்பஹா மாவட்டம் உட்பட பல பகுதிகளில் உள்ள பல தொழிற்சாலைகளில் பணியாற்றும் பலர் சஜித் ஐத் தொடர்பு கொண்டு தமது குறைகளைக் கூறி வருகின்றனர். அவ்வாறு தொடர்பு கொண்ட இளைஞர்கள் சிலர் "நாங்கள் கஷ்டப்பட்டு உழைத்து நாட்டிற்கு வெளிநாட்டு செலாவனியைக் கொண்டு வருகிறோம். இப்போது எம்மை யாருமே கவனிப்பதில்லை. தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளது. போடிங்களில் எம்மை வெளியேற்றி விட்டார்கள். வீதிக்கு இறங்கினால் போக முடியாது. நாங்கள் மாட்டிக்கொண்டு இருக்கிறோம். அவர்களில் பெரும்பாலோர் பெண்கள். குறைந்த பட்சம் அவர்களைப்பற்றியாவது யாரும் சிந்திப்பதில்லை" எனக் கூறினார். உடன் இது தொடர்பில் விசாரித்து அறிந்து கொண்ட சஜித் அடுத்த கட்ட நடவடிக்கைகளை சில பிரதிநிதிகளிடம் ஒப்படைத்தார். 
அத்துடன் இது தொடர்பில் ஊடக சந்திப்பில் ஊடகங்களுக்கும் விளக்க நடவடிக்கை எடுத்தார். அத்துடன் சுதந்திர வர்த்தக வலைய ஊழியர்கள் தொடர்பில் தேடிப் பார்க்குமாறும் கட்டளை பிறப்பித்தார். இவை கடந்த வார நிகழ்வுகளின் சுருக்கமே. கொரோனா பரவலின் தீவிரம் இவ்வாரம் குறையலாம். கூடலாம். அதனை அடிப்படையாகக் கொண்டே அரசியல் விவகாரங்களின் சூடு தங்கியுள்ளது. காலம் பதில் சொல்லும். 
- fபயாஸ் MA f பரீட்.
அரசியல் களத்தில் திரைக்கு பின்னால்...... - சமகால அரசியல் பார்வை... அரசியல் களத்தில் திரைக்கு பின்னால்...... - சமகால அரசியல் பார்வை... Reviewed by irumbuthirai on November 03, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.