விடைத்தாள் திருத்தும் பணியிலிருந்து நாளை முதல் ஆசிரியர்கள் விலகத் தீர்மானம்! - ஜோசப் ஸ்டாலின்


சாதாரண தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணியில் இருந்து நாளை (20) முதல் ஆசிரியர்கள் விலகத் தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுவதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை தமக்குத் தேவையான எரிபொருளை பெற்றுத்தரக்கோரி எம்பிலிப்பட்டிய, ஹட்டன், காலி மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் கல்வி அமைச்சர், அமைச்சின் செயலாளர், பரீட்சைகள் ஆணையாளர் ஆகியோர் இணைந்து நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது பரீட்சைகள் ஆணையாளர் தெரிவிக்கையில், 110 விடைத்தாள் திருத்தம் மத்திய நிலையங்கள் இருக்கும் நிலையில் அதில் 5, 6 மத்திய நிலையங்கள் தற்போதைய நிலையில் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். எரிபொருள் பிரச்சினை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் இன்று காலையும் பேசினேன்... விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் கடமைக்கு செல்வதற்கு முன்னர் காலை 6 மணி முதல் 7 மணி வரை அல்லது கடமை நிறைவடைந்து செல்லும்போது மாலை 5 மணி முதல் 6 மணி வரையான காலப்பகுதியிலும் எரிபொருளை பெறச் சென்றால் அதனை வழங்க முடியுமாக இருக்கும் என்று எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரத்தை காட்டி எரிபொருள் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஆசிரியர்கள் ஏச்சு பேச்சு வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

விடைத்தாள் திருத்தும் பணியிலிருந்து நாளை முதல் ஆசிரியர்கள் விலகத் தீர்மானம்! - ஜோசப் ஸ்டாலின் விடைத்தாள் திருத்தும் பணியிலிருந்து நாளை முதல் ஆசிரியர்கள் விலகத் தீர்மானம்! - ஜோசப் ஸ்டாலின் Reviewed by Irumbu Thirai News on June 19, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.