திவுலபிடிய கொரோனா எதிரொலி: 26-10-2020 நடந்தவை...


திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 22ம் நாள் அதாவது திங்கட்கிழமை (26) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • கம்பஹா மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நிலையங்கள் மற்றும் மருந்தகங்களை இன்றைய தினம் (26) காலை 08.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை திறப்பதற்கு அனுமதி. அத்துடன் அரச, தனியார் வங்கிகளைத் திறக்கவும் அனுமதி. 
  • போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி பிரதான அலுவலம் மற்றும் வேரஹெர அலுவலகம் என்பவற்றை மறுஅறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அறிவிப்பு. அத்துடன் போக்குவரத்து வைத்திய பரிசோதனைகளுக்கான நுகேகொடை மற்றும் வேரஹெர அலுவலகங்களும் மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

  • கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட தொடருந்து சேவைகள் தவிர்ந்த பிரதான மார்க்கம் புத்தளம் மார்க்கம் மற்றும் களனிவெளி மார்க்கம் என்பனவற்றில் இடம்பெறவுள்ள அனைத்து தொடருந்து சேவைகளும் இன்று முதல் ரத்து. 
  • இன்றும் நாளையும் (26&27) பாராளுமன்றம் மூடப்படுவதாகவும் தொற்று நீக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் எந்த ஊழியர்களும் கடமைக்கு சமூகமளிக்க வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் கடமை புரியும் STF உறுப்பினர்கள் உள்ள ஜயவர்தனபுர முகாமைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த முகாம் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கு பதிலாக தற்போது STF ன் தலைமையகத்திலுள்ளவர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
  • மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் 16 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் தெரிவிப்பு. முன்னதாக மட்டகளப்பில் 11 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
  • கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கு மேலதிகமாக களுத்துறை மற்றும் குருநாகல் மாவட்ட மருத்துவமனைகளின் வெளிநோயாளர்களுக்கு, நாளை (27) முதல் மருந்துகள் தபால் மூலமாக வீடுகளுக்கே விநியோகிக்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு. 
  • அமைச்சர்கள் மற்றும் உயர் மட்ட அதிகாரிகாரிகளுக்கான பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும் விசேட அதிரடி படைப்பிரிவின் உத்தியோகத்தர்கள் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது. இதன் காரணமாக ராஜகிரிய, களனி மற்றும் களுபோவில ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள விசேட அதிரடிப்படையினரின் முகாம்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் குறித்த முகாம்களில் சேவையில் ஈடுபடும் 10 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • பொரளை - ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட 8 குழந்தைகளும் தாய்மார் இருவரும் இன்று அடையாளம் காணப்பட்டனர். 
  • நுவரெலிய-கொட்டகலை பிரதேச சபை அதிகார பிரதேசங்களில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 
  • கொவிட் -19 தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகிய முதல் நிலை தொடர்பாளர்கள் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்படுவார்கள் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்தார். 
  • கொரோனா வைரஸ் நாட்டில் இன்னும் சமுகப்பரவலுக்கு உள்ளாகவில்லை என்று, தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவின் பிரதான நிபுணர், விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவிப்பு. 
  • கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்கான 6 விடயங்களை உள்ளடக்கிய மூலோபாயம் ஒன்றை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளது. 
  • புதிய சுகாதார சேவை பணிப்பாளர் நாயகமாக வைத்தியர் அசேல குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். இவர், முன்னதாக கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை பணிப்பாளராக கடமையாற்றியவராவார்.  
  • இன்றைய தினம் மேலும் 541 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 26-10-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 26-10-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on October 29, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.