Results for Corona Virus

கொரோனாவுக்கான சிகிச்சை தொடர்பில் WHO வின் முக்கிய அறிவிப்பு!

December 08, 2021

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்குவது தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. 
 
அதாவது கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் இரத்தத்திலிருந்து 

பிளாஸ்மாவை எடுத்து இன்னொருவருக்கு சிகிச்சை அளிக்கும் முறையை செய்யவேண்டாம் என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. 
 
இந்த சிகிச்சை முறையினால் உயிர் பாதுகாப்பு அதிகரிக்கவில்லை எனவும் இதற்கான நேரம் மற்றும் செலவு என்பன அதிகமாக காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. 
 
அதாவது தீவிர நோய் நிலமை இல்லாதவர்களுக்கே இந்த சிகிச்சை அவசியம் இல்லை என கூறப்பட்டுள்ளது. 
 
கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாகவும் எனவே அவர்களிடமிருந்து ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவைப் பிரித்தெடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்குவது சிறந்த முறை எனவும் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கொரோனாவுக்கான சிகிச்சை தொடர்பில் WHO வின் முக்கிய அறிவிப்பு! கொரோனாவுக்கான சிகிச்சை தொடர்பில் WHO வின் முக்கிய அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on December 08, 2021 Rating: 5

பாடசாலை மாணவர்கள் மத்தியில் புதிய டெல்டா திரிபு அபாயம் - அமைச்சர் வெளியிட்ட தகவல்

November 21, 2021

புதிய டெல்டா உப வைரஸ் திரிபானது பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பரவும் அபாயம் அதிகமாக காணப்படுவது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக 

ஆய்வில் தெரியவந்துள்ளதாக ராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். 
 
அனுராதபுரத்தில் நிகழ்வொன்றில் கலந்து விட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
 
டெல்டா திரிபின் புதிய உப திரிபொன்று இலங்கையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலை மாணவர்கள் மத்தியில் புதிய டெல்டா திரிபு அபாயம் - அமைச்சர் வெளியிட்ட தகவல் பாடசாலை மாணவர்கள் மத்தியில் புதிய டெல்டா திரிபு அபாயம் - அமைச்சர் வெளியிட்ட தகவல் Reviewed by Irumbu Thirai News on November 21, 2021 Rating: 5

கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களை பாடசாலைக்கு அழைப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம்! (தொடர்புடைய சுற்றறிக்கைகள் இணைப்பு)

November 17, 2021

கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களை சேவைக்கு அழைப்பது தொடர்பாக 16-11-2021 ஆம் திகதியிடப்பட்ட சுற்றறிக்கை கடிதம் ஒன்றை கல்வியமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ளார். 
 
இதில் கர்ப்பிணிகள் மற்றும் ஒரு வயதுக்குட்பட்ட பிள்ளைகளை கொண்ட தாய்மார்கள் மற்றும் ஏனைய விசேட நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களைப் பாடசாலைக்கு அழைப்பது தொடர்பான விபரம் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
குறித்த சுற்றறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது...

பாடசாலைகளை ஆரம்பித்து வழமையான முறையில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொழுது, சில பாடசாலைகளில் வரையறுக்கப்பட்ட ஆளணியினர் இருப்பதன் காரணமாக சிக்கல் நிலைமைகள் தோன்றியுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது. அதேபோன்று கொவிட்-19 பரவல் நிலைமை காரணமாக நீண்ட காலமாக பாடசாலைகளை திறக்க முடியாமல் போனதன் அடிப்படையில் வகுப்பறை கற்றல் கற்பித்தல் செயற்பாடு இல்லாமல்போன மாணவ மாணவியர்களை கருத்திற்கொண்டு, கல்விசார் கல்விசாரா ஊழியர்களை சேவைக்கு அழைக்கும் பொழுது கர்ப்பிணி உத்தியோகத்தர்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், விஷேட நோய் நிலைமைகளினால் பாதிக்கப்பட்டவர்களை சேவைக்கு அழைத்தல் தொடர்பாக கீழுள்ளவாறு நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
 
அதுதொடர்பாக, அரசாங்க சேவையை வழமைபோன்று கொண்டு நடத்தல் தொடர்பாக அரச சேவை, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சு செயலாளரினால் இலக்கம் 02/2021 (V) கொண்ட 2021-10-01 திகதியிடப்பட்ட சுற்றறிக்கையின் 6வது சரத்தின் அறிவுறுத்தலுக்கு உங்களது கவனத்தை செலுத்தவும். அதன்படி, குறிப்பிட்ட ஆளணியினரை அழைப்பது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறியத்தருகிறேன். 
 
என்று குறித்த சுற்றறிக்கையில் கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். 
 
மேலே குறிப்பிடப்பட்ட இலக்கம் கொண்ட சுற்றறிக்கையின் 6வது பகுதியைக் கீழே காணலாம். 
 
மேலுள்ள விடயங்களின் படி குறித்த உத்தியோகத்தர்களை அத்தியாவசியமான சந்தர்ப்பங்களில் மாத்திரமே சேவைக்கு அழைக்கவேண்டும் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. அவ்வாறு அழைக்கப்படும் பொழுது விஷேட காலப்பகுதியும் விஷேட வசதிகளும் வழங்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களை சேவைக்கு அழைப்பது தொடர்பாக 16-11-2021 ஆம் திகதியிடப்பட்ட சுற்றறிக்கை கடிதத்தைக் கீழே காணலாம்.


இலக்கம் 02/2021 (V) கொண்ட 2021-10-01 திகதியிடப்பட்ட சுற்றறிக்கையை முழுமையாக இங்கே பார்வையிடலாம்.


கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களை பாடசாலைக்கு அழைப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம்! (தொடர்புடைய சுற்றறிக்கைகள் இணைப்பு) கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களை பாடசாலைக்கு அழைப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம்! (தொடர்புடைய சுற்றறிக்கைகள் இணைப்பு) Reviewed by Irumbu Thirai News on November 17, 2021 Rating: 5

தரம் 6-9 வரையான வகுப்புக்களை ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு!

November 16, 2021
 

நான்கு கட்டங்களாக பாடசாலைகளை ஆரம்பிக்கும் திட்டத்தின்கீழ் நான்காவது கட்ட ஆரம்பிப்பிற்கான திகதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதுவரை தரம் 6 தொடக்கம் 9 வரையான வகுப்புகளைத் தவிர ஏனைய சகல வகுப்புகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தரம் 6 தொடக்கம் 9 வரையான வகுப்புகளுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த வகையில் இந்த மாதம் 22ஆம் திகதி திங்கட்கிழமை முதல் தரம் 6 தொடக்கம் 9 வரையான வகுப்புக்கள் ஆரம்பமாகும் என அமைச்சரவைப் பேச்சாளர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். 
 
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தரம் 6-9 வரையான வகுப்புக்களை ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு! தரம் 6-9 வரையான வகுப்புக்களை ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on November 16, 2021 Rating: 5

Covid-19 Recovery New Syllabus for Gr: 6-11 / தரம்: 6-11 வரை அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டம் (மூன்று மொழி மூலங்களிலும்)

November 13, 2021

கொரோனா விடுமுறை காரணமாக மாணவர்களுக்கு தவறவிடப்பட்ட பாடத்திட்டங்களைப் பூர்த்தி செய்வதற்காக தேசிய கல்வி நிறுவகத்தால் 06-11 வரையான வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
 
இந்த புதிய பாடத்திட்டங்கள் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழி மூலங்களில் தரப்பட்டுள்ளன.
 
விரும்பிய மொழி மூலத்தில் விரும்பிய பாடத்தை பார்வையிடவும் பதிவிறக்கம் செய்யவும் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
 
தேசிய கல்வி நிறுவனத்தால் (NIE) ஆரம்ப பிரிவிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட 20 வாரங்கள் கொண்ட புதிய பாடத்திட்டத்தை முழுமையாக பார்வையிட இங்கே கிளிக் செய்க.

Covid-19 Recovery New Syllabus for Gr: 6-11 / தரம்: 6-11 வரை அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டம் (மூன்று மொழி மூலங்களிலும்) Covid-19 Recovery New Syllabus for Gr: 6-11 / தரம்: 6-11 வரை அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டம் (மூன்று மொழி மூலங்களிலும்) Reviewed by Irumbu Thirai News on November 13, 2021 Rating: 5

Covid-19 Recovery New Syllabus for Gr: 10-11 / தரம்: 10-11 ற்கு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டம்

November 13, 2021

கொரோனா விடுமுறை காரணமாக மாணவர்களுக்கு தவறவிடப்பட்ட பாடத்திட்டங்களைப் பூர்த்தி செய்வதற்காக தேசிய கல்வி நிறுவகத்தால் தரம் 10, 11 ற்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
 
கீழே உள்ள லிங்குகளைக் கிளிக் செய்து உரிய பாடத்திட்டத்தை பார்வையிடலாம். பதிவிறக்கம் செய்யலாம். 

தரம்: 10 

 
இழந்த கல்வியை மீட்கும் நோக்கில் தேசிய கல்வி நிறுவகத்தால் (NIE) ஆரம்ப பிரிவிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட 20 வாரங்கள் கொண்ட புதிய பாடத்திட்டத்தை முழுமையாகப் பார்வையிட இங்கே கிளிக் செய்க.

 
 
தரம்: 11

இழந்த கல்வியை மீட்கும் நோக்கில் தேசிய கல்வி நிறுவகத்தால் (NIE) தரம்: 6-11 வரை அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்தை 3 மொழி மூலங்களிலும் பார்வையிட இங்கே கிளிக் செய்க.
Covid-19 Recovery New Syllabus for Gr: 10-11 / தரம்: 10-11 ற்கு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டம் Covid-19 Recovery New Syllabus for Gr: 10-11 / தரம்: 10-11 ற்கு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டம் Reviewed by Irumbu Thirai News on November 13, 2021 Rating: 5

அதிபருக்கும் மாணவருக்கும் கொரோனா தொற்று: மூடப்பட்டது பாடசாலை!

November 11, 2021

கொஸ்லந்தை பகுதியில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றின் அதிபருக்கு உறுதியானதைத் தொடர்ந்து அந்தப் பாடசாலை எதிர்வரும் 
 
திங்கள் வரை மூடப்பட்டுள்ளதாக ஹல்துமுல்ல பிரதேச பொது சுகாதார பரிசோதகர் ஜீவன பிரசன்ன தெரிவித்துள்ளார். 
 
இதேவேளை ஏற்கனவே அந்தப் பாடசாலையின் மாணவர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து இன்றைய தினம் மாணவர்கள் எவரும் பாடசாலைக்கு சமூகமளிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
அதிபருக்கும் மாணவருக்கும் கொரோனா தொற்று: மூடப்பட்டது பாடசாலை! அதிபருக்கும் மாணவருக்கும் கொரோனா தொற்று: மூடப்பட்டது பாடசாலை! Reviewed by Irumbu Thirai News on November 11, 2021 Rating: 5

மாணவர்கள் இழந்த கல்வியை வழங்க புதிய வேலைத் திட்டம்!

November 07, 2021

கொரோனா பரவல் காரணமாக 2020 மற்றும் 2021இல் மாணவர்கள் இழந்த கல்வியை அவர்களுக்கு வழங்குவதற்காக புதிய வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் சுனில் ஜயந்த நவரத்ன தெரிவித்துள்ளார். 
 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

இந்த புதிய வேலைத் திட்டத்திற்காக நவம்பர் மாதம் முதல் அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை ஒதுக்கப்பட்டுள்ளது. சில வேளை அது ஏப்ரல் வரை நீடிக்கப்படலாம். இழந்த கல்வியை வழங்குவதற்கும் பரீட்சைகளை நடத்துவதற்குமே இந்த காலப்பகுதி தேவைப்படுகிறது. இதன்போது பாடப்பரப்பில் உள்ள அத்தியாவசியமான பாகங்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
மாணவர்கள் இழந்த கல்வியை வழங்க புதிய வேலைத் திட்டம்! மாணவர்கள் இழந்த கல்வியை வழங்க புதிய வேலைத் திட்டம்! Reviewed by Irumbu Thirai News on November 07, 2021 Rating: 5

பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பான முழுமையான வழிகாட்டல் - 2021

November 05, 2021


கொவிட் - 19 தொற்றுப் பரவல் நிலைமையின் கீழ் சுகாதார பாதுகாப்புடன் பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பான முழுமையான வழிகாட்டல் கையேட்டை கல்வியமைச்சு வெளியிட்டுள்ளது.

மாணவர்கள், ஆசிரியர்கள், உளவள ஆலோசனை வழங்கும் ஆசிரியர், அதிபர், பெற்றோர், போக்குவரத்து சேவை வழங்குவோர் போன்ற சகல தரப்பினருக்குமான வழிகாட்டல் முழுமையாகத் தரப்பட்டுள்ளது.

 

பாடசாலை ஆரம்பம் -: 
2021 ஒக்டோபர் 21ஆந் திகதியிலிருந்து 4 கட்டங்களாக ஆரம்பிக்கப்படுகிறது.
 
கட்டம் 01: மொத்த மாணவர் தொகை 200க்கு குறைவான பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகள். 
 
கட்டம் 02: மொத்த மாணவர் தொகை 200க்கு அதிகமான பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகள் மற்றும் மாணவர் தொகை 100க்கு குறைவான பாடசாலைகளின் சகல வகுப்புகள்.
 
கட்டம் 03: சகல பாடசாலைகளினதும் தரம் 10,11,12,13 மற்றும் மாணவர் தொகை 200 க்கு குறைந்த பாடசாலைகளின் சகல வகுப்புகள்.
 
கட்டம் 04: ஏனைய தரங்களை ஆரம்பித்தல்.
 
 
கற்றல் கற்பித்தல் செயற்பாடு மற்றும் வகுப்பறை முகாமைத்துவம்: 
கற்றல் கற்பித்தல் செயன்முறை மற்றும் வகுப்பறை முகாமைத்துவத்தின்போது கவனத்திற் கொள்ள வேண்டிய முக்கிய விடயமாக அமைவது மாணவர்களிடையே சமூக இடைவெளியைப் பேணுவது மற்றும் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடித்தலாகும். 
 

 மட்டுப்படுத்தப்பட்ட மாணவர் தொகுதியினரோடு கூடிய வகுப்பை நடாத்துவதற்கு ஏற்றவாறு நேரசூசியை தயாரித்துக்கொள்ளல். 
 
 இடைவெளியோடு கூடியதாக மாணவர்களை வைத்துக்கொள்வதற்கு ஏதுவாக பாடசாலையிலுள்ள அனைத்து வகுப்பறைகளையும் கற்பித்தல் நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தல். 
 
 மேலும், பாடசாலையில் பொது இடங்களைத் தெரிவு செய்து (பிரதான மண்டபம்/மாநாட்டு மண்டபம்) பரிந்துரைக்கப்பட்ட இடைவெளி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றி தயாரிக்கப்பட்ட நேரசூசியின் அடிப்படையில் அதிகமான மாணவர் எண்ணிக்கைக்கு ஒரே தடவையில் கற்பித்தல் நடவடிக்கைகளை ஆரம்பித்தல். 
 
 வகுப்பறைகளை எப்போதும் நன்கு காற்றோட்டம் பெறும் வகையில் அமைத்துக் கொள்ளல் மற்றும் திறந்தவெளிகளில் கற்பிப்பதற்கு ஆசிரியர்களை ஈடுபடுத்தல்.
 
 மாணவர்கள் நேருக்கு நேர் முகம் நோக்கி இல்லாதவாறு வகுப்பறையில் அமரச் செய்வதற்கான முறையைத் திட்டமிடுதல்.  

பாடசாலை சிற்றுண்டிச்சாலை: 
மீள் அறிவித்தல்வரை பாடசாலைச் சிற்றுண்டிச்சாலைகளைத் மூடி வைத்திருத்தல். 
 
 
இடைவேளை: 
 பாடசாலை இடைவேளையானது, அனைத்து மாணவர்களுக்கும் ஒரே நேரத்தில் கிடைக்காத வகையில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு அமைவாக அதிபரின் விருப்பின் அடிப்படையில் மற்றும் பாடசாலைக்குப் பொருந்தும் வகையில் தயார் செய்து கொள்ளமுடியும். 
 
 உணவு உண்ணும்போது முகக் கவசத்தை கழற்றுவதால் உணவு இடைவேளைக்கான நேரத்தைக் குறைப்பதற்கு பொருத்தமான ஏற்பாடுகளை செய்தல். 
 
 எப்பொழுதும் வீட்டிலிருந்து கொண்டுவரப்படும் உணவை உண்பதற்கு ஊக்குவிப்பதோடு, பாடசாலைக்கு வரும் வழியில் உணவு வாங்குவதைத் தவிர்க்கும்படி அறிவுறுத்தல் வழங்கி, அதுதொடர்பாக மேற்பார்வை செய்யப்படல் வேண்டும். 
 
 பாடசாலை இடைவேளையின்போது, மாணவர்களுக்கிடையே இடைவெளியைப் பேணுதல், முகக் கவசம் அணிதல் மற்றும் ஒருவரையொருவர் ஸ்பரிசம் செய்யும் விதத்திலான ஆபத்தான விளையாட்டுக்களில் ஈடுபடுவதை தவிர்த்தல் வேண்டும். 

இணைப்பாடவிதான செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துதல்: 
 ஒருவரை ஒருவர் தொடாத விதமாக மற்றும் பொருட்களை பரிமாற்றம் செய்யாத தூரத்தைப் பேணும் விதத்தில் விளையாட்டு மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துதல். இவ்வாறான செயற்பாடுகள் மாணவர்களின் உடல் மற்றும் உள அபிவிருத்திக்கு உறுதுணையாக இருக்கும். 
 
 ஏனைய பாடசாலை விளையாட்டுகள் மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளை மேற்கொள்வது குறித்து எதிர்காலத்தில் அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
 
 
போக்குவரத்து செய்யவேண்டிய முறை: 
 நடந்து செல்லும் தூரம், துவிச்சக்கர வண்டியில் செல்லும் தூரம் அல்லது பெற்றோருடன் மோட்டார் சைக்கிலில் செல்லும் தூரத்தில் இருப்பின் நடந்து/ துவிச்சக்கர வண்டி மோட்டார் சைக்கிலில் பாடசாலைக்குச் செல்வது பாதுகாப்பானது. 
 
 தனிப்பட்ட வாகனத்தை பயன்படுத்துவதாயின் வாகன நெரிசல் ஏற்படாதவாறு பயன்படுத்துதல். 
 
 பொதுப் போக்குவரத்து அல்லது பாடசாலை பேரூந்து/ வேன் போக்குவரத்து சேவையினைப் பயன்படுத்துவதாயின், ஆசன எண்ணிக்கையில் மட்டும் பயணிக்கவும். 
 
 பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும்போது, வாகனத்திற்குள் ஏறும்போது மற்றும் இறங்கிய பின்னர் கிருமி நீக்கித் திரவங்களைப் பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்துகொள்ளல். வாய், மூக்கு மற்றும் கண்களைத் தொடுவதைத் தவிர்த்தல். 
 
 வாகனத்தில் குளிரூட்டியை (Air Condition) பயன்படுத்தாது, ஜன்னல்களைத் திறந்து காற்றோட்டமாக வைத்திருங்கள். 
 
 வாகனத்திற்குள் முகக்கவசத்தைக் நீக்குதல் மற்றும் உணவு வகைகள் பரிமாற்றம் செய்வதைத் தவிர்க்கவும். 
 
 வாகனத்தில் ஏறிய பின்னர் உங்களுக்கு உரிய ஆசனத்தில் அமர்வதோடு, வாகனத்திற்குள் தேவையற்ற விதத்தில் நடமாடுவதைத் தவிர்த்தல். 
 
 
 
ஆசிரியர்களுக்கான அறிவுறுத்தல்கள்:
 பாடசாலை ஆரம்பிக்கப்படும் முதல் நாளில் மாணவர்களின் மனநிலையை மேம்படுத்தவும், கொவிட் 19 இன் சவால்களுக்கு வெற்றிகரமாக முகம் கொடுக்கும் வகையிலும் ஒரு அன்பான வரவேற்பினை அளித்தல். 
 
 மாணவர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள சுகாதாரப் பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் யாவும் சகல ஆசிரியர்களுக்கும் ஏனைய பணியாளர்களுக்கும் செல்லுபடியாகும் அதேவேளை, கைகளைக் கழுவுதல், உடல் வெப்பநிலையைப் பரிசோதித்தல், முகக் கவசம் அணிதல் ஆகியன அவர்களுக்கும் கட்டாயமானதாகும். 
 
 அதிபரின் அறிவுறுத்தலின் பேரில், பாடசாலை சுகாதார மேம்பாட்டு வேலைத்திட்டத்திற்குப் பொறுப்பான ஆசிரியரினால் நடைமுறைப்படுத்தப்படும் மேற்பார்வை வேலைத்திட்டத்திற்கு சகல ஆசிரியர்களும் முனைப்புடன் பங்குபற்றிப் பொறுப்பேற்க வேண்டும். 
 
 மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மற்றும் உளநல ஆரோக்கியம் தொடர்பாகவும் கவனம் செலுத்தி, சமூக இடைவெளியைப் பேணி உளநல ஆரோக்கியத்தை மேம்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுப்பது ஆசிரியர்களின் பொறுப்பாகும். 
 
 பாடசாலைகயில் இருக்கும் காலப்பகுதியில் முகக்கவசம் அணிந்திருப்பதுடன், மாணவர்களின் முகக் கவசம் தொடர்பாக கூடிய கவனம் செலுத்துதல். 
 
 விசேட தேவையுடைய மாணவர்களின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துதல். 
 
 கிருமிநீக்கி கரைசல்களை பயன்படுத்தும்போது அவற்றை பாதுகாப்பாக கையாளுவது பற்றி மாணவர்களை தெளிவூட்டுதல். 
 
 தொலைக்கல்வியோடு ஒப்படும்போது நேரடி பாடசாலைக் கல்வியூடாக நல்ல பெறுபெறுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதை பெற்றோருக்கு தெளிவூட்டுவது ஆசிரியர்களின் பொறுப்பாகும். 
 
 
உளவள ஆலோசனை வழங்கும் ஆசிரியர்க்கான அறிவுறுத்தல்கள்:
 நீண்ட காலம் வீட்டிலிருந்து மன அழுத்தத்துக்குள்ளாகி வரும் மாணவர்களை கனிவுடன் வரவேற்பதற்காக பாடசாலை அதிபர் மற்றும் சக ஆசிரியர்களுடன் இணைந்து வேலைத்திட்டமொன்றை தயாரித்தல் 
 
 பாடசாலை மாணவர்களின் உளவியல் சமூக நன்னடத்தையை அபிவிருத்தி செய்வது தொடர்பாக கல்வி அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ள உளவியல் சமூக செயற்பாடுள் கையேட்டுக்கு அமைய நிகழ்ச்சித்திட்டங்களை செயற்படுத்தல் 
 
 அந்நிகழ்ச்சித்திட்டத்துக்கு சமாந்திரமாக பாடசாலை மட்டத்தில் மாணவர்களின் உளவியல் சமூக அபிவிருத்திக்கான நிலைபேரான திட்டமொன்றை செய்தல். 
 
 பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் பாடசாலைக்கு வரும் மாணவர்களை இனங்கண்டு தேவையான தலையீடுகளை செய்தல். 
 
 ஆபத்தான சுபாவம்கொண்ட பிள்ளைகளை இனங்கண்டு அவர்களை நேர்வழிபடுத்துவதற்குத் ஆலோசனை ரீதியான தலையீட்டினை செய்வதுடன் தேவையானபோது நிபுணத்துவ உதவியைப் பெற்றுக்கொள்ளல். 
 
 போதைப்பொருள் பாவனைக்கு பழக்கப்பட்டிருக்கும் மாணவர்களை இனங்காண்பதற்கு பொருத்தமான திட்டமொன்றை தயாரித்தல். அவர்களை அந்நிலைமையிலிருந்து மீட்டெடுப்பதற்கு தேவையான ஆலோசனை வழங்கல். மேலும் தேவையானபோது நிபுணத்துவ உதவியைப் பெற்றுக்கொள்ளல் 
 
 மாணவர்களின் பிரச்சினைகளை உளவில் விஞ்ஞான முறைமை ரீதியில் அணுகுவது தொடர்பாக சக ஆசிரியர்களுடன் கலந்துரையாடுவதன் மூலமாக அது தொடர்பில் அவர்களது கவனத்தை திருப்புதல் 
 
 பாடசாலையில் ஆலோசனை பிரிவை திட்டமிட்ட அடிப்படையில் நடாத்திச் செல்லல் மற்றும் பிரச்சினையுள்ள மாணவர்கள் தன்னை நோக்கி வரும்விதமான திட்டமொன்றை தயாரித்துக்கொள்ளல்.
 
 
மாணவர்களுக்கான அறிவுறுத்தல்கள்: 
 பாடசாலைக்குள் பிரவேசிக்கும் போது, சவர்க்காரம் இட்டுக் கைகளைக் கழுவுதல் மற்றும் பாதணிகளைக் கிருமித் தொற்றுநீக்கத்திற்கு உட்படுத்துதல்.
 
 சமூக இடைவெளியைப் பேணுதல். 
 
 புத்தகங்கள், பேனைகள் போன்றவற்றைப் பகிர்வதைத் தவிர்த்தல். 
 
 பாடசாலையில் இருக்கும்போது, முகக்கவசம் கட்டாயம் அணிதல் வேண்டும். மேலும் மேலதிக முகக்கவசம் ஒன்றை புத்தகப்பையில் வைத்திருத்தல். 
 
 உணவு அருந்தும் போது அல்லது வேறு எந்தச் சந்தர்ப்பத்திலும் தற்காலிகமாக முகக் கவசத்தைக் அகற்றி சுத்தமான பையொன்றில் வைத்தல் அல்லது அணிந்திருக்கும் சீருடையில் வைத்திருத்தல். 
 
 முகக்கவசங்களை ஒருபோதும் பொது இடங்களில் வைக்கக்கூடாது. 
 
 உணவு அருந்தும் போது அல்லது வேறு எந்தச் சந்தர்ப்பத்திலும் தற்காலிகமாக முகக் கவசத்தைக் அகற்றிய பின்னர் மீண்டும் அணிய முன்னர் கைகளை நன்கு சுத்தமாக்கிக் கொள்ளல். மேலும் பிறரின் முகக்கவசங்களை ஒருபோதும் அணியக்கூடாது. 
 
 வகுப்பறையிலிருந்து சென்று மீண்டும் வரும்போது அல்லது மேற்பரப்பு ஒன்றை தொட்ட பின்னர் கைகளை நன்கு கழுவிக்கொள்ளல் வேண்டும். 
 
 உணவு மற்றும் தண்ணீர் போத்தலை பகிரக்கூடாது 
 
 பாடசாலையினுள் அல்லது பாடசாலைக்கு வெளியே ஒன்றுகூடுவதை தவிர்த்தல் 
 
 பாடசாலை விட்டவுடன் உடனடியாக வீடு நோக்கி விரைதல் 
 
 பாடசாலைக்கு வரும்போது மற்றும் வீடுகளுக்குச் செல்லும்போது பயன்படுத்தும் தனிப்பட்ட அல்லது பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் சுகாதார அறிவுறுத்தல்களைக் கடைப்பிடித்தல். 
 
 தான் பயன்படுத்தும் போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்த தகவல்களை வகுப்பாசிரியருக்கு வழங்குதல் 
 
 தங்களுக்கு ஏதேனும் நோய், காய்ச்சல், சளி போன்ற நோய் அறிகுறிகள் காணப்படின், அந்நிலை குணமாகும் வரை பாடசாலைக்கு வருவதைத் தவிர்த்தல். 
 
 தங்கள் வீட்டில் யாரேனும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தால் அல்லது கொவிட் 19 நோயாளியுடன் தொடர்புபட்டிருந்தால் சுகாதார அறிவுறுத்தல்களின் படி மீள அறிவிப்பு வரும்வரை பாடசாலைக்கு வராதிருத்தல். 
 
 பாடசாலையில் அல்லது அதற்கு வெளியில் தேவையற்றவிதத்தில் எப்பொருளையும் தொடுவதைத் தவிர்த்தல். 
 
 
அதிபருக்கான அறிவுறுத்தல்கள்:
 பாடசாலை அதிபரினால் பாடசாலை முன்னாயத்த செயற்பாடுகள் ஆலோசனைக் கோவையின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்டு அது பற்றி சம்பவத்திரட்டில் குறிப்பிடப்படல். 
 
 கொவிட் 19 பரவலைத் தவிர்ப்பதற்காக அதிபரின் தலைமையில் பாடசாலைச் சுகாதார மேம்பாட்டுக் குழுவை முனைப்பாக முன்னெடுத்தல் மற்றும் சுகாதார மேம்பாட்டு வேலைத்திட்டத்துக்குப் பொறுப்பான பிரதி அதிபர்/ ஆசிரியரொருவரின் தலைமையில் தொடர்ச்சியாகக் கண்காணிப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல். 
 
 கொவிட் 19 பரவலைத் தவிர்க்கும் வேலைத்திட்டத்துக்காக கல்வி அமைச்சின் தலையீட்டில் பெற்றுக்கொடுக்கப்பட்ட நிதி, பொருட்கள் அல்லது உபகரணங்கள் தொடர்பாக மற்றும் பாடசாலையை பாதுகப்பாக ஆரம்பித்தல் தொடர்பில் பெற்றுக் கொடுக்கப்பட்ட அறிவுறுத்தல்கள் தொடர்பாக உரியவாறு பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்களை அறியச் செய்வதினூடாக அவர்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தல். 
 
 பாடசாலையை ஆரம்பிக்க முன்னர் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிசெய்து கொள்வதற்காக மேற்கொண்ட ஆவணங்களைப் பூர்த்திசெய்து அதிபரின் கையொப்பத்துடன் கோட்டக் கல்விப் பணிப்பாளருக்கு அனுப்பி வைப்பதுடன் அதன் பிரதிகளைப் பாடசாலையில் வைத்திருத்தல்.  
 
 கொவிட் 19 நோய்யறிகுறி காணப்படும் பிள்ளையொன்று இனங்காணப்படும் சந்தர்ப்பத்தில் அவரை நோயாளர் அறைக்கு அனுப்பி உடனடியாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியூடாக வலய மட்டத்தில் இணைக்கப்பட்டிருக்கும் பிள்ளை நோய்/ சரும நோய் தொடர்பான வைத்திய நிபுணரிடத்தில் காண்பித்தல் வேண்டும்.  பிள்ளைக்கு அவசர சிகிச்சை தேவை என உணரும் சந்தர்ப்பத்தில் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதுடன் பிரதேசத்தில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரிக்கு தெரியப்படுத்தல் வேண்டும். 
 
 பாடசாலையை ஆரம்பித்த பின்னர் சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மேற்கொண்ட மதிப்பீட்டு ஆவணங்களை அன்றாடம் பூர்த்தி செய்யும் பணியை ஆசிரியர்களிடம் ஒப்படைத்து வாரத்துக்கு ஒரு தடவை அதிபரின் கையொப்பத்துடன் கோட்டக் கல்விப் பணிப்பாளருக்கு வழங்குதலும் பிரதிகளைப் பாடசாலையில் வைத்துக்கொள்ளலும்.  
 
 மாணவர்களை சுகாதாரப் பாதுகாப்புடன் பாடசாலைக்கு அனுப்பும்போது கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள் தொடர்பாகப் பெற்றோர்களை தெளிவூட்டுவதற்கு திட்டமொன்றை உருவாக்குதல் 
 
 இருமல், தடிமன் அல்லது காய்ச்சல் போன்ற நோயறிகுறிகள் இருக்குமாயின் அல்லது வீட்டில் வேறொரு உறுப்பினர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருப்பின் அல்லது குடும்ப உறுப்பினரின் அல்லது பிள்ளையின் பி.சீ.ஆர் பரிசோதனை/ துரித பிறபொருளெதிரிப் பரிசோதனை (Rapid Antigen Test) மேற்கொள்ளப்பட்டிருப்பின் அந்த அறிக்கைக்கு அமைய சுகாதார அறிவுறுத்தல் பெற்றுக் கொள்ளப்படும் வரை பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாமெனப் பெற்றோர்களை அறிவுறுத்தல் 
 
 சுகயீன நிலை காரணமாக வீட்டில் தங்கியிருக்கும் மாணவர்களுக்காக அன்றாட கல்வி நடவடிக்கைகள் தவறவிடப்படாதவாறு முறைமையொன்றைத் தயார் செய்வதினூடாக பிள்ளையை வீட்டிலேயே தங்கியிருக்கச் செய்யப் பெற்றோர்களைத் தூண்டுதல் 
 
 பாடசாலைக்கு மாணவர்கள் வரும் வண்டிகள் மற்றும் வேன்கள் தொடர்பாக தகவல்களைச் சேகரித்துக்கொள்வதற்கான திட்டமொன்றைத் தயார்செய்தல் 
 
 அடிக்கடி பயன்படுத்தும் பொருட்களைத் தொற்றுநீக்கம் செய்தல், கைப்பிடிகள், கதவுத் திருகிகள் என்பவற்றை அடிக்கடி தொற்றுநீக்கம் செய்வதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்.
 
 
 
பெற்றோர்களுக்கான அறிவுறுத்தல்கள்: 
 இருமல், சளி அல்லது காய்ச்சல் போன்ற நோய் அறிகுறிகள் இருப்பின் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாதிருத்தல். 
 
 வீட்டில் வேறு யாரேனும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தால் தங்கள் பி;ள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாதிருத்தல். 
 
 வீட்டிலுள்ள ஒருவர் அல்லது பிள்ளைக்கு பீ.சீ.ஆர் (PCR) பரிசோதனை/ துரித பிறபொருளெதிரி சோதனை (Rapid Antigen Test) செய்யப்பட்டிருந்தால் அவ் அறிக்கையின்படி சுகாதார அறிவுறுத்தல்கள் கிடைக்கப்பெறும் வரை பிள்ளையைப் பாடசாலைக்கு அனுப்பாதிருத்தல். 
 
 தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் இருந்து ஏனைய பிரதேசங்களில் உள்ள பாடசாலைக்குப் பிள்ளைகளை அனுப்பாதிருத்தல். 
 
 தங்கள் பிள்ளை பயன்படுத்தும் உபகரணங்கள் (பாடசாலைப் பை/ தண்ணீர்ப் போத்தல்/ சாப்பாட்டுப் பெட்டி/ புத்தகங்கள் போன்றன) சுத்தப்படுத்துதல் அல்லது வெயிலில் இட்டு உலர்த்துதல். 
 
 தினந்தோறும் பிள்ளையின் ஆடைகள் மற்றும் பாதணிகளைச் சுத்தம் செய்தல். 
 
 பாடசாலைக்குச் சென்று திரும்பியதும் பிள்ளையின் கைககளைக் கழுவுதல் மற்றும் பிள்ளையைச் சுத்தமாக இருக்கச் செய்தல். 
 
 பாடசாலை விட்டு வந்ததும் காலணிகளை வெளியே கழற்றிவிட்டு உள்ளே வருதல்  பாவித்த முகக் கவசங்களை எரித்தல் 
 
 வீட்டில் சமைத்த உணவுகளை மாத்திரம் பிள்ளைக்குக் கொடுப்பதோடு, எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பிள்ளை பயன்படுத்தும் பொருட்களை தனிப்பட்ட முறையில் பயன்படுத்துவதற்கு அறிவுறுத்தல்களை வழங்குதல். 
 
 பாடசாலை விட்டதும் பிள்ளையை வீட்டிற்கு வரும்படி அறிவுறுத்தல் வழங்குதல்/ அழைத்துக்கொண்டு வருதல். 
 
 பாடசாலைக்கு வரும்போது மற்றும் வீடுகளுக்குச் செல்லும்போது பயன்படுத்தும் தனிப்பட்ட அல்லது பொது போக்குவரத்துச் சேவைகளில் சுகாதார அறிவுறுத்தல்களைக் கடைப்பிடிப்பதற்கு அறிவுறுத்தல் வழங்குதல். 
 
 தங்கள் பிரதேசத்தில் சுகாதாரம் தொடர்பாக ஏதேனும் சிக்கல் இருந்தால் அது தொடர்பாக அதிபருக்கு அறிவிப்பதன் மூலம் பாடசாலைக்கு எற்படக்கூடிய பாதகமான விளைவுகளைக் குறைக்க உதவுதல். 
 
 
 
மாணவர்களுக்கான போக்குவரத்து சேவையை வழங்குபவர்களுக்கான அறிவுரைகள்: 
 இருவர் அமரும் ஆசனங்களில் எப்போதும் இருவரை மாத்திரம் அமரச்செய்தல் மேலும் ஆசனங்களின் எண்ணிக்கைக்கமைவாக மாத்திரம் மாணவர்களை அழைத்து வருதல். 
 
 பாடசாலை வாகனங்களில் மாணவர்கள் ஏறும் போதும் இறங்கும்போதும் கைகளை சுத்தப்படுத்திக் கொள்வதற்காக தொற்றுநீக்கி திரவங்களை வைத்தல். 
 
 முற்றிலும் குளிரூட்டப்பட்ட வாகனமாயின் மாணவர்களை அழைத்து வரும் போது குளிரூட்டியை நிறுத்தி யன்னல்களை திறந்து காற்றோட்டம் கிடைக்கப்பெறச் செய்தல். 
 
 மாணவர்கள் வாகனத்தினுள் முகக்கவசங்களை அகற்றல், உணவுகளை பரிமாறல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடாதிருக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளல். 
 
 தினமும் ஒரே மாணவர் குழுவினை அழைத்துவருதல். ஒரே பாடசாலை மாணவர்களை ஒரு வாகனத்தில் அழைத்துவருதல். 
 
 வாகனத்தில் தினமும் வருகை தரும் மாணவர்களின் தகவல்களைப் பேணிவருதல். 
 
 தினமும் வருகை தரும் மாணவர்களை பதிவு செய்யும் இடாப்பு ஒன்றை பேணுதல். 
 
 பாடசாலை மாணவர்கள் வரும் வாகனங்களில் வெளி ஆட்களை அழைத்துவராதிருத்தல். 
 
 காலையில் மாணவர்கள் வாகனத்தில் ஏறும் போது அவர்களுக்கு ஏதேனும் சுகவீன நிலைமை இருக்கின்றதா என கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளல். 
 
 தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களிலிருக்கும் மாணவர்களை அழைத்துவராதிருத்தல். 
 
 காலையில் மாணவர்கள் வாகனத்திலிருந்து இறங்கிச் சென்றதன் பின்னர் வெளி ஆட்களை வாகனங்களில் ஏற்றாதிருத்தல். 
 
 வாகன சாரதி மற்றும் நடாத்துனர் எப்போதும் முகக்கவசங்களை அணிந்திருத்தல். 
 
 தினமும் காலையில் மாணவர்கள் வாகனத்தில் ஏறும் முன்னரும் மாலையில் ஏறும் முன்னரும் அடிக்கடி தொடுகைக்கு உட்படும் இடங்களை முறையாக சுத்தப்படுத்தல். 
 
 அவசர நிலைமைகளின் போது அழைப்பதற்கான தொலைபேசி இலக்கங்களை வாகனங்களில் காட்சிப்படுத்தல். 
 
 கோரோனா நோய் தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் பிரதேசங்களிலிருப்பவர்களை பணியில் அமர்த்தாதிருத்தல். 
 
 இயன்றவரையில் ஒரே சாரதி மற்றும் நடாத்துனரைக் கொண்டு சேவையை வழங்குதல். 
 
 சரியான தகவல்களை வழங்காத பணியாளர்களை வேலைக்கமர்த்தாதிருத்தல். 
 
 தினமும் பணியாளர்களை மாற்றாதிருத்தல். 
 
 சாரதி அல்லது நடாத்துனர் சுகயீனமுற்றிருப்பின் அவர்களை பணிக்கமர்த்தாதிருத்தல். 
 
 சாரதி, நடாத்துனர் காலையில் வாகனத்தில் ஏறும் முன்னர் அவர்களது உடல் வெப்பநிலையை பரீட்சிப்பதற்கான நடைமுறையை உருவாக்கல். 
 
 சாரதி மற்றும் நடாத்துனர் வெற்றிலை மெல்லுவதற்காக முகக்கவசங்களை அகற்றாதிருப்பதற்கான அறிவுரைகளை வழங்க நடவடிக்கை எடுத்தல். 
 
 முச்சக்கர வண்டிகளில் சமூக இடைவெளி பேணத்தக்க முறையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள எண்ணிக்கையிலான மாணவர்களை மாத்திரம் அழைத்து வருதல். 
 
 சேவையில் ஈடுபடும் பாடசாலை போக்குவரத்துச் சேவை சாரதிகள் மற்றும் நடாத்துனர்கள் பூரணமாக தடுப்பூசியை பெற்றிருத்தல் வேண்டும்.
 
 
பாடசாலை ஆரம்பித்ததன் பின்னர் சுகாதார பாதுகாப்பான முறையில் பாடசாலையை நடாத்துதல்:
 நீண்ட நாட்களுக்கு பின்னர் பாடசாலைக்கு வருகை தரும் மாணவர்களை இனிதாக வரவேற்பதுடன், அவர்களின் உளவியல் நிலைய உயர்த்துவதற்கு உளவியல் சுகாதார செயற்பாடுகளை முன்னெடுத்தல். 
 
 வீட்டில் இருந்த காலப்பகுதியில் நிகழ்நிலை கற்றல் தொடர்பாக மாணவர்களை வினவாதிருத்தல். இலகுவான மட்டத்திலிருந்து கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிக்குமாறு சகல ஆசிரியர்களையும் அறிவுறுத்தல். 
 
 எப்போதும் மாணவர்கள் மத்தியில் சாந்தமான மனநிலையைப் பேணுவதை உறுதி செய்வதற்காக உளவிழிப்புணர்வு அபிவிருத்தி செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தல். 
 
 பாடசாலைக்கு வரும்போதும், பாடசாலையில் இருக்கும்போதும் மற்றும் பாடசாலையிலிருந்து வெளிச்செல்லும் வழியில் முகக்கவசம் அணிவதைக் கட்டாயப்படுத்தல். 
 
 பாடசாலைக்குள் நுழையும் போது சகல மாணவர்களதும் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்தல் மற்றும் தேவையான சந்தர்ப்பங்களில் வகுப்பறையில் உடல் வெப்பநிலையை மீண்டும் பரீட்சித்தல். 
 
 மாணவர்கள் பாடசாலையினுள் நுழையும்போது கைகளைக் கழுவுவதை கட்டாயப்படுத்தல் மற்றும் அச்செயற்பாடு சரியாக மேற்கொள்ளப்படுகின்றதா என தினமும் மேற்பார்வை செய்தல். 
 
 மாணவர்களுக்கிடையில் சமூக இடைவெளி பேணுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தல். 
 
 மாணவர்கள் ஒன்றுகூடுவதை; தடுப்பதற்காக வகுப்பு மட்டத்தில் பொருத்தமான நேரத்தில் இடைவேளை வழங்குதல். 
 
 வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவு, நீர் மற்றும் ஏனைய உபகரணங்களை பகிர்ந்து கொள்வதை தடுத்தல். 
 
 உணவுவேளையின்போது முகக்கவசத்தை கழற்றுவதால் மாணவர்கள் மத்தியில் இடைவெளியைப் பேணுதல். உணவு இடைவேளை நேரத்தைக் குறைத்தல். 
 
 ஒருவருக்கொருவர் ஸ்பரிசம் செய்யும்படியான விளையாட்டுக்களில் ஈடுபடுவதனை தவித்தல் மற்றும் உடற்பயிற்சி செயற்பாடுகளை சமூக இடைவெளி பேணி நடாத்துதல். 
 
 அவசர நிலைமையின் போது தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி இலக்கங்கள் மற்றும் தகவல்களை சேகரித்து அலுவலகத்தில் காட்சிப்படுத்தல் மற்றும் அது தொடர்பாக ஊழியர்களை தெறியப்படுத்தல். 
 
 கொவிட் 19 நோய்யறிகுறி காணப்படும் பிள்ளையொன்று இனங்காணப்படும் சந்தர்ப்பத்தில் அவரை நோயாளர் அறைக்கு அனுப்பி உடனடியாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியூடாக வலய மட்டத்தில் இணைக்கப்பட்டிருக்கும் பிள்ளை நோய்/ சரும நோய் தொடர்பான வைத்திய நிபுணரிடத்தில் காண்பித்தல் வேண்டும் பிள்ளைக்கு அவசர சிகிச்சை தேவை என உணரும் சந்தர்ப்பத்தில் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதுடன் பிரதேசத்தில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரிக்கு தெரியப்படுத்தல் வேண்டும். 
 
 சகல கல்வி வலயத்துக்கும் சிறுவர் நோய் விஷேட வைத்தியர் ஒருவரை நியமிப்பதற்கு சிறுவர்நோய் விஷேட வைத்தியர்களின் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமையால், அவர்களைத் தொடர்புகொண்டு தேவையான தயவல்களைப் பெற்றுக்கொள்ளல் மற்றும் பிள்ளைகளை காண்பித்தல் வேண்டும். மேலும் குறித்த வைத்தியர்களின் தொலைபேசி இலக்கங்களை காட்சிப்படுத்தல் வேண்டும். 
 
 பாடசாலை அதிபரின் தலைமையில் பாடசாலையின் சுகாதார மேம்பாட்டுக் குழுவை செயற்பாட்டில் வைத்திருப்பதன் மூலம் கோவிட் 19 தொற்றுநோய் பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் மற்றும் ஊழியர்களுக்கு பொறுப்புக்களை வழங்குதல். 
 
 பாடசாலைகளை சுகாதார பாதுகாப்பன இடமாக மாற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் மற்றும் பெற்றோர், பாடசாலை சமூகத்தின் மத்தியில் அதுதொடர்பான நம்பிக்கையை கட்டியெழுப்புதல். 
 
 பாடசாலைகளை நடாத்திச் செல்லும்போது சுகாதாரப் பாதுகாப்பினை உறுதி செய்யும் மதிப்பீட்டு ஆவணங்களை சரியாக பேணிவருதல்.  
 
 காய்ச்சல், மூச்சுக்கோளாறுகள் காணப்படும் பிள்ளைகள்/தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களின் பிள்ளைகள்/ கொவிட் நோய் பரிசோதனை செய்யப்பட்ட குடும்பங்களின் பிள்ளைகளை சுகாதார வழிகாட்டல்கள் கிடைக்கும்வரை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என பெற்றோரை அறிவுறுத்தல். 
 
 மாணவர்களின் உள நலத்தை மேம்படுத்துவதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ளல். 
 
 கொவிட் 19 வைரஸ் தொடர்பான ஏதேனும் ஒரு நிலைமை காரணமாக வீட்டில் தங்கியிருக்கும் மாணவர்களின் அன்றாட கற்றல் நடவடிக்கைகளில் தடையின்றி ஈடுபடுவதற்கான ஏற்பாடுகளை செய்துகொடுத்தல். 
 
 மாணவர்களை உயிர் பாதுகாப்பு குமிழி முறைமைக்கு அமைய பாடசாலைக்கு அழைத்தல் வேண்டும். (ஒரே மாணவர் குழு ஒரே நாளில் சந்திக்குமாறு அழைத்தல்) 
 
 மாணவர்களை எப்போதும் பாராட்டுவதினூடாக அவர்களை உளரீதியாக வலுவூட்டுதல் 

 விசேட சந்தர்ப்பத்தில் 1390 க்கு அழைத்து தேவையான அறிவுரைகளைப் பெறுதல்.
 
Source: Ministry of Education.

 
இவை மாத்திரமன்றி இன்னும் பல விடயங்களும் விளக்கமாக தரப்பட்டுள்ளன. எனவே இந்த கையேட்டை முழுமையாக இங்கே பார்வையிடலாம். 

 
பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பான முழுமையான வழிகாட்டல் - 2021 பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பான முழுமையான வழிகாட்டல் - 2021 Reviewed by Irumbu Thirai News on November 05, 2021 Rating: 5

தரம் 10 - 13 வரையான தரங்களை மீள ஆரம்பித்தல் தொடர்பாக வெளியான சுற்றுநிருபம்!

November 03, 2021

நான்கு கட்டங்களாக பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் திட்டத்தின்கீழ் 3வது கட்ட ஆரம்பத்திற்கான அறிவிப்பும் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதற்கான சுற்றறிக்கையும் வெளியாகியுள்ளது. 
 
அந்த வகையில் 10 ,11 , 12 மற்றும் 13 ஆம் தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகள் 

எதிர்வரும் 8 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
எனவே தரம் 10 தொடக்கம் 13 வரையிலான வகுப்புகளுக்குரிய கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் தேவையான கல்விசார் ஊழியர்கள் சேவைக்கு அழைக்கப்பட வேண்டும். 
 
மேலும் சகல கல்விசாரா ஊழியர்களும் சேவைக்கு அழைக்கப்பட வேண்டும். 
 
வகுப்பறை முகாமைத்துவ முறையின் கீழ் உரிய முறையைப் பயன்படுத்தி மாணவ-மாணவியர்கள் அழைக்கப்படுவதோடு (பகுதி பகுதியாக) இணையவழி கற்றல் முறையை பயன்படுத்தி, 

பாடசாலைக்கு சமூகமளிக்காத மேற்படி தரங்களை சேர்ந்த மாணவர் குழுக்களுக்கு குறித்த பாடப்பகுதி நிறைவு செய்யப்பட வேண்டும். இதற்கு தேவைப்படும் வசதிகளை பெற்றுக்கொள்வதற்காக கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை 09/2021 மற்றும் 09/2021 (1) என்பவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நிதி ஒதுக்கீடுகளை பயன்படுத்தலாம். 
 
கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் ஒரு வயதிற்கு குறைந்த பிள்ளைகள் உள்ள உத்தியோகத்தர்கள் சேவைக்கு சமூகமளிப்பது கட்டாயமில்லை என்பதுடன் வேறு நோய்த் தாக்கத்திற்குள்ளானவர்களை அத்தியாவசியமான நேரத்தில் மட்டும் சேவைக்கு அழைக்கலாம். எவ்வாறாயினும் இதனை உறுதிப்படுத்தும் ஆவணங்களுடன் வேண்டுகோள் கடிதத்தையும் வலயக்கல்விப் பணிப்பாளரிடம் சமர்ப்பித்து அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும். 
 
பாடசாலை ஆரம்பிக்கப்படுகின்ற ஆரம்ப காலங்களில் பாடசாலை சீருடை கட்டாயமாக்கப்படவில்லை. அதனடிப்படையில் பொருத்தமான 

உடையில் பாடசாலைக்கு வருவதற்கு மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குமாறும் கல்வி அமைச்சின் சுற்று நிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 
தரம் 10 - 13 வரையான தரங்களை மீள ஆரம்பித்தல் தொடர்பாக வெளியான சுற்றுநிருபம்! தரம் 10 - 13 வரையான தரங்களை மீள ஆரம்பித்தல் தொடர்பாக வெளியான சுற்றுநிருபம்! Reviewed by Irumbu Thirai News on November 03, 2021 Rating: 5

சகல பாடசாலைகளிலும் ஏனைய வகுப்புக்களை மீள ஆரம்பித்தல்: கல்வி அமைச்சரின் அறிவிப்பு!

October 30, 2021

04 கட்டங்களாக பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் நடைமுறையின் கீழ் தற்போது முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் நாட்டிலுள்ள சகல பாடசாலைகளிலும் ஆரம்பப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் பாடசாலைகளில் ஏனைய வகுப்புகளையும் ஆரம்பிப்பது தொடர்பாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவிக்கையில், 

ஏனைய வகுப்புக்களை அடுத்த வாரத்தின் பின்னர் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 
 
நேற்று (29) கண்டி அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடாதிபதிகளை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். 
 
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 

தற்போது மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் இடம்பெற்று வருவதோடு பாடசாலைகளை சுத்திகரிக்கும் பணிகளும் இடம்பெறுகின்றன. மேலும் கொரோனா பரவலும் ஒப்பீட்டளவில் கட்டுப்பாட்டுக்கு வந்துள்ளது. எனவே சகல பாடசாலைகளிலும் ஏனைய வகுப்புக்களை அடுத்த வாரத்தின் பின்னர் மீள ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு மீள ஆரம்பிக்கும் திகதி தொடர்பில் அடுத்து வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
சகல பாடசாலைகளிலும் ஏனைய வகுப்புக்களை மீள ஆரம்பித்தல்: கல்வி அமைச்சரின் அறிவிப்பு! சகல பாடசாலைகளிலும் ஏனைய வகுப்புக்களை மீள ஆரம்பித்தல்: கல்வி அமைச்சரின் அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on October 30, 2021 Rating: 5

மாணவர்கள் தடுப்பூசியை வைத்தியசாலைகளிலும் பெறலாம் - சுகாதார அமைச்சு

October 24, 2021

மாணவர்களுக்கான தடுப்பூசிகள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன. 
 
இந்நிலையில் பாடசாலைகள் மூலம் தடுப்பூசி பெற முடியாத மாணவர்கள் வைத்தியசாலைகளில் பெற்றுக்கொள்ளலாம் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார். 
 
இவ்வாறு பாடசாலைகள் மூலம் தடுப்பூசியை பெற முடியாத மாணவர்கள் சனி ஞாயிறு தினங்களில் வைத்தியசாலைகளில் பெற்றுக்கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.
மாணவர்கள் தடுப்பூசியை வைத்தியசாலைகளிலும் பெறலாம் - சுகாதார அமைச்சு மாணவர்கள் தடுப்பூசியை வைத்தியசாலைகளிலும் பெறலாம் - சுகாதார அமைச்சு Reviewed by Irumbu Thirai News on October 24, 2021 Rating: 5

கையொப்பமிடாமல் சில ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர் - கல்வியமைச்சர்

October 23, 2021

கையொப்பமிடாமல் சில ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். 
 
நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, 
 
திட்டமிட்டபடி 98% மான பாடசாலைகளை மீள திறக்க முடிந்தது. 26% ஆன ஆசிரியர்களும் 16% ஆன மாணவர்களும் பாடசாலைக்கு சமூகம் அளித்துள்ளனர். அடுத்த வாரம் ஆசிரியர் மாணவர் வருகை அதிகரிக்கும் என நான் நம்புகிறேன். 
 
மேலதிக வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்க பெற்றோர்களின் அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது...
 
ஆசிரியர்கள் மொடியூலை நிறைவு செய்வதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது...
 
சில ஆசிரியர்கள் கையொப்பமிடாமலும் பணிக்கு திரும்பியுள்ளனர். துரிதமாக பாடசாலைகளைத் திறந்து நாட்டை வழமை நிலைக்கு கொண்டு வருவது முக்கியமாகும். எனவே இதற்கு சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
கையொப்பமிடாமல் சில ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர் - கல்வியமைச்சர் கையொப்பமிடாமல் சில ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர் - கல்வியமைச்சர் Reviewed by Irumbu Thirai News on October 23, 2021 Rating: 5

மேலதிக வகுப்புகளை ஆரம்பிப்பதற்கான திகதி அறிவிப்பு!

October 23, 2021

மேலதிக வகுப்புக்களை (ரியுசன்) எதிர்வரும் நவம்பர் 1ம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என அகில இலங்கை நிபுணத்துவ விரிவுரையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. 
 
இது தொடர்பில் அச்சங்கத்தின் செயலாளர் கமல் பிரியங்கர தெரிவித்ததாவது, 
 
டியூஷன் வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கான அனுமதியை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தந்துள்ளார். அந்தவகையில் சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய 100க்கும் குறைவான மாணவர்களைக் கொண்டு நவம்பர் 1ஆம் தேதி முதல் இது ஆரம்பிக்கப்படும். 
 
கடந்த காலங்களில் ஆசிரியர் தொழிற்சங்க வேலைநிறுத்தம் நடைபெற்றாலும் எமது சங்கம் Online மூலம் கற்பித்தல் நடவடிக்கைகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகிறது. எனவே மாணவர்களுக்கு இது ஒரு பிரச்சினையாக அமையவில்லை. 
 
தடுப்பூசி பெறும் மாணவர்களுக்கு பெற்றோரின் அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான செய்திகளுக்கு...
 
தற்போது நாடளாவிய ரீதியில் சுமார் ஒரு லட்சம் டியூஷன் ஆசிரியர்கள் இருக்கின்றனர். இது மாத்திரமன்றி சாதாரண தர, உயர்தர, புலமைப்பரிசில் பரீட்சை போன்றவற்றுக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டு கற்பிக்கப்பட உள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலதிக வகுப்புகளை ஆரம்பிப்பதற்கான திகதி அறிவிப்பு! மேலதிக வகுப்புகளை ஆரம்பிப்பதற்கான திகதி அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on October 23, 2021 Rating: 5

மாணவர்களுக்கான தடுப்பூசி தொடர்பில் விதிக்கப்பட்ட நிபந்தனை!

October 23, 2021
மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் தற்பொழுது நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் இந்த மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பொழுது அவர்களது பெற்றோரின் அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் பாடசாலை செயற்பாடுகள் தொடர்பான மேலதிக செயலாளர் எல்.எம்.பி. தர்மசேன தெரிவித்துள்ளார். 
 
நேற்று(22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, 
 
சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோர் கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோருக்கு மாணவர்களுக்கு தடுப்பூசியை வழங்குவது தொடர்பாக அறிவித்துள்ளனர். 
 
அந்த வகையில் இம்முறை தரம் 11 மற்றும் தரம் 12 இல் கற்கும் மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி தற்போது வழங்கப்படுகிறது. இம்முறை தரம் 11 இல் இரண்டாவது தடவையாக பரீட்சைக்கு தோற்றுபவர்களும் இதில் உள்ளடங்குவர். 
 
மாகாண கல்விப் பணிப்பாளர், மாகாண சுகாதார பணிப்பாளர் ஆகியோரின் இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே தற்போது இந்த வேலைத்திட்டம் நடைபெறுகிறது. 
 
தடுப்பூசி வழங்கும் நிலையங்கள் தொடர்பான தகவல்களை சுகாதார வைத்திய அதிகாரிகளையோ அதிபர்களையோ மற்றும் வலயக்கல்வி காரியாலயம் என்பவற்றையோ தொடர்பு கொள்வதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம். இது மாத்திரமன்றி மாகாண கல்வித் திணைக்களத்தின் இணையத்தளம் கல்வி அமைச்சின் இணையத்தளம் என்பவற்றிலும் தகவல்களை பெற்றுக் கொள்ளலாம். 
 
மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்க பெற்றோரின் அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக மாதிரி படிவம் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. அதை நிரப்பி பெற்றோர்கள் கையொப்பமிட்டு வழங்க வேண்டும். 
 
இது மாத்திரமன்றி நீண்ட கால விடுமுறையில் இருந்ததனால் குறித்த மாணவர்கள் சீருடை அணிந்து செல்வதில் சிக்கல்கள் இருக்கலாம். சீருடை அணிய முடியாத அளவுக்கு உடல் நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். எனவே முடியுமாணவர்கள் சீருடை அணிந்து செல்லலாம். ஏனையவர்கள் பொருத்தமான வேறு ஆடையை அணிந்து செல்லலாம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
மாணவர்களுக்கான தடுப்பூசி தொடர்பில் விதிக்கப்பட்ட நிபந்தனை! மாணவர்களுக்கான தடுப்பூசி தொடர்பில் விதிக்கப்பட்ட நிபந்தனை! Reviewed by Irumbu Thirai News on October 23, 2021 Rating: 5

சகல பாடசாலைகளிலும் ஆரம்பப்பிரிவு ஆரம்பம்! திகதி அறிவிப்பு!

October 22, 2021
 

சகல பாடசாலைகளிலும் ஆரம்ப பிரிவை ஆரம்பிப்பதற்கான திகதியை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 
 
அந்தவகையில் எதிர்வரும் திங்கட்கிழமை அதாவது 25 ஆம் திகதி சகல பாடசாலைகளிலும் ஆரம்பப்பிரிவை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். 
 
கொரோனா காரணமாக கடந்த ஆறு மாதமாக மூடப்பட்ட பாடசாலைகளை நான்கு கட்டங்களில் மீள ஆரம்பிப்பதற்கான பரிந்துரைகளை சுகாதார அமைச்சு கல்வி அமைச்சுக்கு வழங்கியிருந்தது. 
 
அந்தவகையில் முதலாம் கட்டத்தில் 200க்கும் குறைவான ஆரம்பப்பிரிவு பாடசாலைகள் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டு இருந்தது. 
 
இதேவேளை தமது தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நேற்றும் இன்றும் பெரும்பாலான அதிபர்கள் ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்கவில்லை. அவர்கள் 25ஆம் திகதி முதலே தமக்கு பாடசாலைக்குச் செல்லலாம் என ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 
சகல பாடசாலைகளிலும் ஆரம்பப்பிரிவு ஆரம்பம்! திகதி அறிவிப்பு! சகல பாடசாலைகளிலும் ஆரம்பப்பிரிவு ஆரம்பம்! திகதி அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on October 22, 2021 Rating: 5

அதிபர்கள் ஆசிரியர்கள் இல்லாமல் நாளை பாடசாலை ஆரம்பமாகுமா? சம்பளம் நிறுத்தப்படுமா? கல்வியமைச்சின் செயலாளர் விளக்கம்

October 20, 2021

கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா நாளை பாடசாலைகளை ஆரம்பித்தல் தொடர்பாகவும் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பாகவும் பரீட்சை தொடர்பாகவும் சம்பளம் நிறுத்தப்படுவது தொடர்பாகவும் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டுள்ளார். 
 
இன்று (20) காலை தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அவரது அந்த பேட்டியை உங்களுக்காக irumbuthirainews.com தொகுத்து வழங்குகிறது.
 
கேள்வி: 
21ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகும் என அரசு தெரிவித்தாலும் சில தொழிற்சங்கங்கள் 21ஆம் தேதி 22 ஆம் தேதி பாடசாலைக்கு செல்வதில்லை என தெரிவித்துள்ளனர். அப்படியானால் நாளை அதிபர்கள் ஆசிரியர்கள் இல்லாமல் பாடசாலை ஆரம்பமாகுமா? பெற்றோர்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவார்களா? 
 
பதில்: 
பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புமாறு நான் பெற்றோர்களிடம் அன்பாக வேண்டுகோள் விடுக்கிறேன். 21 மற்றும் 22 ஆகிய தினங்களில் விசேட வேலைத் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளோம். 
 
"மகிழ்ச்சிகரமான நாளையை கட்டியெழுப்ப மீண்டும் பாடசாலைக்கு வருவோம்" என்ற தொனிப்பொருளில் இந்த வேலைத்திட்டம் கல்வி அமைச்சால் தேசிய கல்வி நிறுவகம் மற்றும் குழந்தைகளுக்கான விஷேட வைத்திய நிபுணர்கள் என்பவற்றை இணைத்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
 
நாம் 06 மாத காலத்திற்கு பின்னர் அதாவது இந்த வருடம் ஏப்ரல் 23 க்கு பின்னர் தற்போதுதான் பிள்ளைகளுக்காக பாடசாலையை ஆரம்பிக்க சுகாதார தரப்பினரின் அனுமதி கிடைத்துள்ளது. எனவே பிள்ளைகளுக்காகத்தான் பாடசாலை ஆரம்பிக்கப்படுகிறது. ஆகவே நாம் அழைப்பு விடுக்கிறோம்... எதைச் சொன்னாலும்.. நமது ஆசிரியர்கள் தானே... எனவே நான் நினைக்கிறேன் நீங்களும் விருப்பத்தோடு இருப்பீர்கள் ஆசிரியர்களின் முகத்தை பார்க்க. ஆசிரியர்களும் பார்த்துக்கொண்டிருப்பார்கள் பிள்ளைகளின் முகத்தை பார்க்க. 
 
எனவே நாம் வார்த்தைகளுக்குள் மாட்டிக் கொண்டிருக்காமல் பிள்ளைகளுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்று நிறைய ஆசிரியர்கள் கதைக்கிறார்கள். நாங்கள் எடுத்திருக்கும் இந்த நடவடிக்கை மிகவும் நல்ல வேலை. அப்படி என்றால் நான் பாடசாலைக்கு சென்ற முதல் நாள்.. பாலர் பாடசாலைக்கு சென்ற முதல் நாள்... எனது பிள்ளைகளை சேர்த்த முதல் நாள்.. எனக்கு நினைவுக்கு வருகிறது. 
 
என்னை பார்த்துக் கொண்டதும் ஆசிரியர்கள். உங்களை பார்த்துக் கொண்டதும் ஆசிரியர்கள். அம்மா பாடசாலையில் விட்டுவிட்டு செல்வார். பிள்ளைகள் அழுவார்கள். அந்தப் பிள்ளைகளை பார்த்து கொள்வது ஆசிரியர்களே! யாராக இருந்தாலும் இது தேசிய பொறுப்பு. பாடசாலைக்குச் சென்று பிள்ளைகளை நாம் வரவேற்க வேண்டும். 
 
எந்த நிலையில் இருந்தாலும் பிள்ளைகள் என்று சொல்லும்பொழுது எல்லோருடைய அவதானமும் குவிகிறது. இலங்கையிலும் சுனாமி வந்த பொழுது சுனாமி பேபி என்று சொல்லப்பட்ட அந்த பிள்ளையின் மீது கவனம் சென்றது. இன்றுவரை அது பேசப்படுகிறது. 
 
எவ்வாறாயினும் பிள்ளைகள் மீதான அவதானம் இருந்தாலும் இவ்வாறான பெருந்தொற்று நிலைமையின் போது அவர்களது கல்வியைப் பற்றி பேசுவது குறைவு. ஆனால் அவர்களது கல்வியைப் பற்றி கவனம் செலுத்தினால்தான் இது போன்ற பெரும் தொற்றுக்கான தடுப்பூசியை தயாரிக்கவோ ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவோ முடியும். எனவே இவையெல்லாவற்றுக்கும் கல்வி அவசியம். 
 
கேள்வி: 
தற்போதைய நிலையில் தொழிற்சங்கங்கள் எதைச் சொன்னாலும் நாளைய தினம் அதிபர்கள் ஆசிரியர்கள் பாடசாலைக்குச் செல்வார்கள் என்ற ஒரு நம்பகரமான தகவல் உங்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ளதா? 
 
பதில்: 
நானும் எனது கௌரவ அமைச்சரும்தான் தொழிற்சங்கங்களுடன் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கதைத்துள்ளோம். நாம் கதைப்பது அவர்களது பிரச்சினைகள் தொடர்பாக... அவர்களது கோரிக்கைகள் தொடர்பாக... அவர்களுக்கு முன்வைக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானம் தொடர்பாக. 
 
நாம் கதைக்கும் எல்லா சந்தர்ப்பங்களிலும் தொழிற்சங்கங்கள் கூறுவது "எங்கள் பிரச்சினைக்கு தீர்வை தாருங்களே செயலாளர்.. நாம் பாடசாலைக்குச் செல்கிறோம்" என்று தான் கூறுவார்கள். அவர்கள் பாடசாலைக்குச் செல்லும் விருப்பத்துடன் இருக்கிறார்கள். 
 
ஆசிரியர்கள் என்பவர்கள் தொழிற்சாலை ஊழியர்கள் அல்ல. அவர்கள் மூலம்தான் நாட்டின் கல்வியும் உலகின் கல்வியும் உருவாக்கப்படுகிறது. நான் தனிப்பட்ட முறையில் நம்புகிறேன் அவர்கள் பாடசாலைக்குப் போவார்கள் என்று. 
 
நாம் உண்மையில் 02 நாட்கள் (21 & 22) பொறுமை காக்க முடியும் தானே... ஏப்ரல் 23 க்கு பிறகு எங்களுக்கு முதன்முறையாக சுகாதார அமைச்சு இப்பொழுது தான் வாய்ப்பை தந்திருக்கிறது பாடசாலை ஆரம்பிக்கும் தினத்தை தீர்மானிக்க. நான்கு கட்டங்களாக ஆரம்பிக்க எம்மிடம் சொன்னார்கள். 
 
அதன் பின்னர்தான் நாம் ஒன்று சேர்ந்து கௌரவ அமைச்சர், இராஜாங்க அமைச்சர்கள் 4 பேருடன் கதைத்து அமைச்சரவைக்கு அறிவித்து அரசாங்கத்திற்கு அறிவித்து... பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவர்கள் 145 பேர் அளவில் இருக்கின்றனர். அவர்களை பாராளுமன்றத்திற்கு அழைத்து இதற்கு ஒத்துழைப்பு தருமாறு கோரி... சுகாதார அமைச்சின் செயலாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், சிறுவர்களுக்கான விசேட வைத்தியர்கள் சங்கம், சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப குழு உட்பட பல தரப்பினரும் இதில் விசேட கவனம் செலுத்திதான் இந்த நடைமுறை உருவாக்கப்பட்டது. 
 
எந்த அளவுக்கு என்றால் யாராவது பிள்ளைக்கு சுகாதாரப் பிரச்சினை ஏற்பட்டால் அதனை பார்ப்பதற்காக வேண்டி ஒவ்வொரு வலயத்துக்கும் ஒவ்வொரு விஷேட சிறுவர் வைத்தியர் நியமிக்கப்பட்டு அவர்களது பெயர், தொடர்பு இலக்கங்கள் என்பனவும் எம்மிடம் தரப்பட்டுள்ளன. 
 
அதேபோன்று பொது சுகாதார பரிசோதகர்கள்... கிராம சேவையாளர்கள்... இது மட்டுமன்றி பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் என்னுடன் தனிப்பட்ட முறையில் கதைத்துள்ளனர். அதேபோன்று ராணுவத் தளபதி சவேந்திர சில்வா தனிப்பட்டமுறையில் கதைத்துள்ளார். ஆசிரியர்கள் கதைத்திருக்கிறார்கள்.... நீங்கள் பாடசாலைகளை ஆரம்பியுங்கள் என்று கூறுகிறார்கள். எனவே கிடைத்த முதலாவது சந்தர்ப்பத்திலேயே இந்த பாடசாலைகளை நான்கு கட்டங்களாக ஆரம்பிக்க நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். 
 
கேள்வி: 
பேராசிரியரே... கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் ஆரம்பமாவதற்கு முன்னர் நீங்கள் சொன்ன அந்த விசேட வேலைத்திட்டம் எத்தனை நாட்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது? 
 
பதில்: 
சுமார் ஒரு வாரத்திற்கு திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் ஆரம்பிப்பது ஆரம்பப்பிரிவு என்பதனால் அவர்களுக்கு உரிய சில செயற்பாடுகள் அடங்கிய வேலைத் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. (ஒவ்வொரு தரத்திற்கும் ஒவ்வொரு தினமும் என்னென்ன செயற்பாடுகள் உத்தேசிக்கப்பட்டுள்ள என்ற விடயத்தை விளக்கமாக சொன்னார்) 
 
கேள்வி: 
இவற்றை செயற்படுத்துவதற்கு ஆசிரியர்களின் பங்களிப்பு அவசியம். அப்படித்தானே..? 
 
பதில்: 
ஆசிரியர்கள் இருந்தால்தான் மிகவும் நல்லது. 
 
கேள்வி: 
ஆசிரியர்கள் இல்லாவிட்டால் எப்படி செய்வது என்ற வேலைத்திட்டம் உங்களிடம் உள்ளதா? 
 
பதில்: 
ஆம் உள்ளது. அது எப்படி என்றால் 100 வலயங்கள் உள்ளன. 312 கோட்டங்கள் உள்ளன. இவை எல்லாவற்றிலும் பாடரீதியான பணிப்பாளர்கள் உள்ளனர். ஒவ்வொரு பாடசாலைக்கும் இவ்வாறான அதிகாரிகளை நாம் பெயரிட்டுள்ளோம். 
 
200 பிள்ளைகளுக்கு குறைவான ஆரம்ப பிரிவை கொண்ட பாடசாலைகள் 5106 இருக்கின்றன. (ஒரே ஒரு மாணவரை கொண்ட இரண்டு பாடசாலைகள் இலங்கையில் ஊவா மாகாணத்தில் இருக்கும் விடயத்தையும் ஏனைய சில பாடசாலை தரவுகளையும் இதன்போது குறிப்பிட்டார்) எனவே இந்த நடவடிக்கையின்போது தரம் ஒன்றையும் இரண்டையும் இணைத்து அவர்களுக்கான செயல்பாடுகளை மேற்கொள்ளலாம். மூன்றையும் நான்கையும் இணைத்து அவர்களுக்கான செயல்பாடுகளை மேற்கொள்ளலாம். 
 
கேள்வி: 
நாளையும் நாளை மறுதினமும் பாடசாலை செல்லாத ஆசிரியர்களின் சம்பளத்தை நிறுத்துவதாக வடமேல் மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். ஆளுனர் என்ற வகையில் அவருக்கு அந்த அதிகாரம் இருக்கிறதா? இரு நாட்கள் பாடசாலை செல்லாத ஆசிரியர்களின் ஒரு மாத சம்பளத்தை நிறுத்துவது தொடர்பில் கல்வி அமைச்சின் நிலைப்பாடு என்ன? 
 
பதில்: 
மாகாணசபை இல்லாத சந்தர்ப்பத்தில் அரசியல் யாப்பின் படி ஆளுநர்களுக்கு அதிகாரம் இருப்பது உண்மை. அதுவும் மாகாண பாடசாலைகள் தொடர்பில் அந்த அதிகாரம் இருக்கலாம். ஆனால் அவர் எந்த தொணியில் அதைச் சொன்னார் என்று எனக்கு தெரியாது. 
 
நான் பொதுவாக அரசியல்வாதிகளின் கருத்துக்களை கவனிப்பதில்லை. நான் அவரிடம் இது தொடர்பில் கதைக்க வேண்டும். ஜனாதிபதி உள்ளிட்ட அமைச்சரவை இதற்கு உரிய ஆலோசனை வழங்கும். ஆனால் நான் நினைக்கவில்லை அவ்வாறு நடக்கும் (சம்பளம் நிறுத்தப்படும்) என்று. 
 
கேள்வி: 
நாளைய தினம் முதற்கட்டமாக பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு அடுத்த கட்டத்திற்கு செல்ல சாதாரணமாக எவ்வளவு காலம் எடுக்கும்? 
 
பதில்: 
இது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனைக்கமைய மாணவர்களின் சுகாதார நிலைமைகள் ஆய்வு செய்யப்பட்டு முடிவு எடுக்கப்படும். அந்தவகையில் ஒரு வார காலத்திற்குள் நாம் எதிர்பார்க்கிறோம் இரண்டாம் கட்டத்தை ஆரம்பிக்க... 
 
இதுமட்டுமன்றி  கட்டங்கட்டமாக தேவையில்லை எல்லா வகுப்புகளையும் ஒன்றாக ஆரம்பிக்கும்படி முன்னணி தொழிற்சங்கம் ஒன்று சொன்னார்கள். உண்மையில் அவர்கள் நேர்மறையானவர்கள். அவர்களின் அந்த கருத்தை நினைத்து சந்தோஷம் அடைகிறேன். 
 
கல்வி அமைச்சர் நான்கு ராஜாங்க அமைச்சர்களுடன் இணைந்துதான் செயற்பாடுகளை முன்னெடுக்கிறார். அந்த நால்வரில் இருவர் ஆசிரியர் பணியோடு சம்பந்தப்பட்டவர்கள். 
 
கேள்வி: 
மேல் மாகாண பாடசாலைகள் மாணவர்கள் அதிகம் கொண்ட பாடசாலைகள். ஏனைய மாணவர்களைப் போன்று அவர்களுக்கும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவது முக்கியம். எனவே சகல பாடசாலைகளையும் ஆரம்பிக்க எவ்வளவு காலம் எடுக்கும்? 
 
பதில்: 
நாளை முதல் தரம் 10, 11, 12, 13 ஆகிய மாணவர்களுக்கு நாடுபூராகவும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பமாகின்றன. இவ்வாறு தடுப்பூசி செலுத்தும் பணிகள் முடிந்ததும் ஒரு மாத காலத்திற்குள் சகல பாடசாலைகளையும் ஆரம்பிக்க முடியுமாயிருக்கும். 
 
இது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனைகளும் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த நான்கு கட்டங்களுக்கும் காலப்பகுதி குறிப்பிடப்படவில்லை. 
 
கேள்வி: 
பாடசாலைகள் ஆரம்பமானதும் பாடவிதானத்தை நிறைவுசெய்ய மேலதிக காலம் வழங்கப்படுமா? 
 
பதில்: 
இது தொடர்பில் ஒவ்வொரு பாடத்திற்கும் விசேட திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்காக 100 நாட்களாவது தேவைப்படும் என தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் என்னிடம் தெரிவித்தார். 
 
கேள்வி: 
அப்படியானால் டிசம்பர் மாதமும் நிறைவு செய்ய முடியாமல் இருக்கும்? 
 
பதில்: 
ஆம். ஆனால் தொழிற்சங்கங்கள் நேற்று என்னுடன் கதைக்கும் பொழுது சொன்னார்கள் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதும் அவர்களுக்கு மாலை வேலையா? அல்லது சனிக்கிழமையா? என்றெல்லாம் பிரச்சினை இல்லை. கற்பிக்க முடியும் என்று சொன்னார்கள். 
 
ஆனால் நாம் பிள்ளைகளுக்கு அதை உள்வாங்க முடியுமா என்று பார்க்கவேண்டும். பிள்ளைகளுக்கு தொடர்ச்சியாக கற்றுக் கொண்டிருப்பது சிரமமாகவே இருக்கும். 
 
கேள்வி: 
டிசம்பர் மாத விடுமுறை இம்முறை குறைக்கப்படுமா? 
 
பதில்: 
ஆம் கடந்த வருடத்தைப் போன்று இந்த முறையும் அவ்வாறே நாம் செய்வோம். 
 
கேள்வி: 
உயர்தர பரீட்சை தொடர்பில் உங்களது நிலைப்பாடு என்ன? பொதுவாக ஆசிரியர்களிடம் நேரடியாக சென்று படிப்பவர்களுக்கு பரிட்சை என்று வரும்பொழுது தடுமாறுகின்றனர். ஆனால் இவர்கள் அவ்வாறு படிக்காதவர்கள். எனவே இவர்களது மனநிலையை வைத்து பரீட்சையை எவ்வாறு தீர்மானிக்கலாம்? 
 
பதில்: 
இது தொடர்பில் நானும் கல்வி அமைச்சரும் 4 ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பரீட்சை ஆணையாளர் என்பவர்கள் தொடர்ந்து கதைத்து வருகிறோம். மாணவர்களுக்காககவே பரிட்சை. எனவே அவர்களின் நிலையை அறிந்து முடிவு எடுக்க வேண்டும். 
 
திகதியை அறிவிக்க அவசரப்படமாட்டோம். ஆனால் அறிவிப்போம். ஒரு வகுப்பை எடுத்துக் கொண்டால் உடனே பரீட்சை முடிய வேண்டும் என்று ஒரு தரப்பினர். பிற்போடப்பட வேண்டும் என்று இன்னொரு தரப்பினர். பரிட்சை எப்போது நடந்தாலும் பரவாயில்லை என்று இன்னொரு தரப்பினர் இருப்பர். ஆனால் எப்படியும் இன்னும் இரு வாரங்களில் அல்லது ஒரு மாதத்திற்குள் திகதியை அறிவிக்கும் நிலையிலேயே நாம் இருக்கிறோம். 
 
ஆனால் எனது தனிப்பட்ட நிலைப்பாடு என்னவென்றால்... அவசரமாக திகதியை அறிவித்து பின்னர் அதை பிற்போடுவது பொருத்தமில்லாத விடயம் என்பதுதான். 
 
கேள்வி: 
புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் என்ன முடிவு எடுத்துள்ளீர்கள்? 
 
பதில்: 
எனக்கு கிடைக்கும் தகவல்களின்படி இந்த பரீட்சை பிற்போட பிற்போட தாய்மார்கள் இன்னும் இன்னும் அதிகமாக பிள்ளைகளை படிக்க வைக்கிறார்கள். உண்மையிலேயே தாய்மார்களின் பரீட்சை போன்று தான் நடந்து கொள்கிறார்கள். 
 
இந்தப் பரீட்சை தொடர்பில் நாம் விஷேடமாக கதைத்து வருகிறோம். ஆனால் அதை விரைவாக நடத்தி முடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் நாம் உள்ளோம். இவர்களுக்கான பாடவிதானம் எவ்வளவு நிறைவு செய்யப்பட்டுள்ளது? என்ற விடயத்தை மாத்திரம் வைத்து இந்த பரீட்சையை நாம் தீர்மானிக்கலாம். எவ்வாறாயினும் சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடல் செய்தே திகதியை அறிவிக்கலாம். 
 
கேள்வி: 
பாடசாலைக்கு ஆசிரியர்கள் செல்வார்களா? இல்லையா? என்ற சந்தேகத்தில் பெற்றோர்கள் பிள்ளைகளை அனுப்புவதா இல்லையா என்ற தீர்மானம் இன்றி இருக்கலாம். எனவே அந்தப் பெற்றோர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? 
 
பதில்: 
நான் ஆரம்பத்தில் சொன்னதைப் போன்று பிள்ளைகளுக்கு என்றே விசேடமாகத் தயாரிக்கப்பட்ட செயற்பாடுகளை நாம் அறிமுகப்படுத்தி உள்ளோம். எனவே இந்த சந்தர்ப்பத்தை உங்களது பிள்ளைகளுக்கு பெற்றுக் கொடுங்கள். உதாரணமாக மேல் மாகாணத்தை எடுத்துக்கொண்டால் தரம் 1 ஐ சேர்ந்த மாணவர்கள் ஒருநாளாவது பாடசாலைக்குச் செல்லவில்லை. அவர்களுக்கு பாடசாலை இது.. வகுப்பறை என்பது இது என்பதை எல்லாம் காட்ட வேண்டும். 
 
உண்மையில் ஆரம்பப்பிரிவு ஆசிரியர் விசேடமாணவர். ஆனால் அவர் வரவில்லை என்பதற்காக நீங்கள் பிள்ளைகளை அனுப்பாமல் இருக்க வேண்டாம். நாம் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்வதற்காக ஆட்களை நியமித்துள்ளோம். அவர்கள் எந்த பிரச்சனையும் இன்றி பார்த்துக் கொள்வார்கள்.
---x---
அதிபர்கள் ஆசிரியர்கள் இல்லாமல் நாளை பாடசாலை ஆரம்பமாகுமா? சம்பளம் நிறுத்தப்படுமா? கல்வியமைச்சின் செயலாளர் விளக்கம் அதிபர்கள் ஆசிரியர்கள் இல்லாமல் நாளை பாடசாலை ஆரம்பமாகுமா? சம்பளம் நிறுத்தப்படுமா? கல்வியமைச்சின் செயலாளர் விளக்கம் Reviewed by Irumbu Thirai News on October 20, 2021 Rating: 5
Powered by Blogger.