சி.ஐ.டி. க்கு அழைக்கப்பட்ட அதிபரும் ஆசிரியையும்

 

தேசிய அதிபர் சங்கத்தின் தலைவர் மொஹான் வீரசிங்க அவர்களும், மினுவாங்கொடை வலயத்தைச் சேர்ந்த ஆசிரியை ஒருவரும் இன்று சிஐடி க்கு அழைக்கப்பட்டு ஐந்தரை மணித்தியாலத்திற்கும் மேலதிகமாக விசாரணை நடத்தி வருவதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தலைவர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். 
 
குற்றப்புலனாய்வு திணைக்கள சுற்றுவட்டாரத்தில் இருந்து காணொளி ஒன்றை வெளியிட்டு இந்தத் தகவலை தெரிவித்தார். 
 
இதன்போது இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட இன்னும் வேறு சங்கங்களின் பிரதிநிதிகளும் அங்கு காணப்பட்டனர். 
 
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த மஹிந்த ஜயசிங்க, 
 
இந்த இருவரும் காலை 10 மணிக்கு இன்று அழைக்கப்பட்டிருந்தனர். ஐந்தரை மணித்தியாலமாகியும் (காணொளி வெளியிடும்போது பிற்பகல் சுமார் 03:30 மணி) இன்னும் வெளியே விடவில்லை. 
 
விசாகா பாடசாலையை சேர்ந்த ஆசிரியை ஒருவருக்கு தொலைபேசி அழைப்பு எடுத்ததே இவர்கள் 
 
மீதுள்ள குற்றச்சாட்டாகும். தொலைபேசி அழைப்பு எடுத்து Online வகுப்புகள் நடத்துவதைப் பற்றி விசாரித்துள்ளனர். மற்றபடி அச்சுறுத்தல் விடுக்கவில்லை. இதற்காகவே இவர்கள் இருவரும் சுமார் ஐந்தரை மணித்தியாலத்திற்கு மேலதிகமாக விசாரிக்கப்படுகின்றனர். 
 
இதைவிட பாரிய குற்றச்சாட்டுக்கள் உள்ளவர்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள். நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டும் இருக்கிறார்கள். இது இந்த அரசாங்கத்தின் புதிய அடாவடித்தனம். என்ன செய்தாலும் நாம் எமது போராட்டத்தை கைவிடப் போவதில்லை என தெரிவித்தார். 
 
இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஜோசப் ஸ்டாலின், 

எந்தவித அடிப்படையும் அற்ற குற்றச்சாட்டுக்காக இவர்கள் இருவரும் இவ்வளவு நேரம் விசாரிக்கப்படுகிறார்கள். பொது ஜன பெரமுன குழு ஒன்று தான் முறைப்பாடு செய்துள்ளது. சரத் வீரசேகர அமைச்சரின் ஏற்பாட்டில்தான் அனைத்தும் நடக்கிறது. 
 
அதிபர் ஆசிரியர்கள் இதுதொடர்பில் பயப்படத் தேவையில்லை. சகலவற்றிற்கும் முகங்கொடுக்க நாம் தயாராக இருக்கிறோம் என தெரிவித்தார். 
 
பிந்திக் கிடைத்த செய்தி: விசாரணையின் பின் குறித்த இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சி.ஐ.டி. க்கு அழைக்கப்பட்ட அதிபரும் ஆசிரியையும் சி.ஐ.டி. க்கு அழைக்கப்பட்ட அதிபரும் ஆசிரியையும் Reviewed by Irumbu Thirai News on September 21, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.