உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க தீர்மானிக்கப்பட்டதா? பல விடயங்களை அம்பலப்படுத்திய ஊடகவியலாளர் சந்திப்பு!

 


இவ்வருடத்திற்கான உயர்தரப் பரீட்சைக்குரிய விண்ணப்பங்களை அனுப்ப எந்தவிதத்திலும் தீர்மானம் எடுக்கப்படவில்லை என அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது. 

 

இன்று(20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பின் போது தொழிற்சங்க தலைவர்கள் தெரிவித்த கருத்துக்களை தொகுத்து தருகிறோம். 

 

அதிபர் சங்கம் என்று தம்மை அழைத்துக்கொள்ளும் குழுவினர் நேற்றைய தினம் அறிவித்தல் ஒன்றை விடுத்திருந்தனர். அதாவது உயர்தரப் பரீட்சைக்குரிய விண்ணப்பத்தை மாத்திரம் அனுப்புவதாக தெரிவித்தனர். ஆனால் அவ்வாறான எந்த ஒரு தீர்மானமும் தொழிற்சங்க முன்னணி என்ற வகையில் நாம் எடுக்கவில்லை. 

 

இந்த முன்னணியானது அதிபர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் சேர்ந்த ஒரு முன்னணி ஆகும். இதில் 30க்கும் மேற்பட்ட தொழிற் சங்கங்கள் இருக்கின்றன. அன்று முதல் இன்று வரை இந்த தொழிற்சங்க நடவடிக்கைகளை இந்த அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க முன்னணியே வழி நடத்தி வருகிறது. 

 

நேற்றைய தினம் அறிக்கை விட்ட அந்த தரப்பினர் அரசாங்கத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுகின்றனர். மாணவர்களின் நலன் கருதி விண்ணப்பிப்பதாக தெரிவித்தனர். அவர்களுக்கு மாணவர்களின் நலன் இப்பொழுதா விளங்கியது? உண்மையிலேயே மாணவர்களின் நலன் என நினைத்திருந்தால் ஆரம்பத்திலிருந்தே விலகி இருக்க வேண்டும். 

 

இந்தத் தரப்பினர்தான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கல்வி அமைச்சுக்கு முன்னால் வைத்து ஆசிரியர் சங்க உறுப்பினர்களுக்கு நாம் யாரென்று காட்டுவோம். அவர்களுக்கு உரிய பாடம் புகட்டுவோம் என சவால் விட்ட தரப்பினர். எனவே நாம் மீண்டும் வலியுறுத்துகிறோம். நாம் எந்தெந்த விடயங்களில் இருந்து விலகுவதாக அறிவித்தோமோ 


அவை அனைத்தும் அப்படியே முன்னெடுக்கப்படும். குறித்த தரப்பினரின் பொறுப்பற்ற அறிவித்தலை கண்டு யாரும் ஏமாந்து விட வேண்டாம். 

 

எமது தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பித்து இன்றுடன் 71 நாட்கள் ஆகின்றன. அமைச்சரவை தீர்மானம் மேற்கொண்டு 21 நாட்கள் ஆகின்றன. நாம் பல சந்தர்ப்பங்களில் வேண்டுகோள் விடுத்தும் இதுவரை நிதியமைச்சருடனான பேச்சுவார்த்தைக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தப்படவில்லை. 

 

ஆனால் இன்னும் ஒரு விடயம் நடக்கிறது. நேற்றைய தினம் தங்கல்ல மற்றும் இன்னும் ஒரு சில இடங்களில் அரசாங்கத்தைச் சேர்ந்த ஒரு சில அரசியல்வாதிகளின் ஏற்பாட்டில் 

 

இந்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு எதிராக கூட்டங்களை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். 

 

இந்தக் கூட்டத்திற்கு இலங்கை பொதுஜன கல்வி சேவைகள் சங்கத்தின் தலைவி வசந்தா, கல்வி அமைச்சின் வாகனத்தில் சென்றுள்ளார். அவ்வாறு அவருக்கு அரச வாகனத்தில் செல்லலாமா? மேலும் அரசியல் நடவடிக்கைகளுக்கு பொதுச் சொத்துக்களை இவ்வாறு பயன்படுத்தலாமா? கல்வியமைச்சின் இலட்சினை பொறிக்கப்பட்ட அந்த வாகனத்தின் இலக்கம் WP NB-1420 ஆகும். இது தொடர்பில் நாம் கல்வி அமைச்சின் செயலாளரிடம் விளக்கம் கோர இருக்கிறோம். 

 

இதேவேளை எத்தனையோ வலயக்கல்விப் பணிப்பாளர்களுக்கு பாடசாலைகளின் மேற்பார்வை தொடர்பில் சென்று வர வாகனம் இல்லாமல் இருக்கிறது. அவர்கள் பேருந்தில் சென்று வருகிறார்கள். ஆனால் எவ்வாறாயினும் நேற்று நடைபெற்ற இந்த கூட்டம் 

 

வெற்றியளிக்கவில்லை. அதில் ஆசிரியர்கள் வெறும் 8 பேரே இருந்துள்ளனர். ஏனையவர்கள் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்காக வேலை செய்பவர்கள். 

 

அரசாங்கம் இது போன்ற விடயங்களில் பணத்தையும் நேரத்தையும் செலவழிப்பதை விட உண்மையிலேயே பிள்ளைகளின் கல்வியில் அக்கறை கொண்டவர்களாக இருந்தால் இந்தப் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து மீண்டும் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க வழிவகை செய்ய வேண்டும். 

 

Online இல் கற்பிப்பவர்களுக்கு அச்சுறுத்தல் இருந்தால் அவர்கள் பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடு செய்யலாம் என கூறுகின்றனர். ஆனால் தொழிற்சங்க நடவடிக்கையில் இருப்பவர்களுக்கு ஏதாவது அச்சுறுத்தல் வந்தால் அந்த முறைப்பாட்டிற்கு எந்த பலனும் இல்லாமல் இருக்கிறது. எவ்வாறாயினும் உரிய தீர்வு கிடைக்கும் வரை எமது தொழிற்சங்க போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.

உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க தீர்மானிக்கப்பட்டதா? பல விடயங்களை அம்பலப்படுத்திய ஊடகவியலாளர் சந்திப்பு! உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க தீர்மானிக்கப்பட்டதா? பல விடயங்களை அம்பலப்படுத்திய ஊடகவியலாளர் சந்திப்பு! Reviewed by Irumbu Thirai News on September 20, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.