கடந்த வாரம் இலங்கையில் அரசியல், சமூக, பொருளாதார பேசு பொருள் கொரோனா.
வார அடிப்படையில் நோக்கின் மிக அதிகமான இறப்புக்கள் ஏற்பட்ட வாரம் இதுவாகும். தினமும் 200, 300 என்று நோயாளர்கள் இனம் காணப்பட்டனர். கடந்த 29 ஆம் திகதி மேல் மாகாணம் முழுவதற்கும் போடப்பட்ட ஊரடங்கு கடந்த திங்கள்தான் நீக்கப்பட்டது.
இலங்கையின் அத்தியாவசிய பொருட்களின் விநியோக மையம் கொழும்பு. அங்கே ஊரடங்கு என்பதால் அதன் பிரதிபலிப்புகள் நாடு பூராகவும் அவதானிக்கத் தக்கதாக இருந்தது.
#வேலையில் இறங்கினார் பசில்#
ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட பொருளாதார மறுமலர்ச்சி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ. மீண்டும் கொரோனா பரவலைத் தொடர்ந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு வழங்க வேண்டிய பொருளாதார உதவிகள் குறித்து ஆராய்வதற்காக பசில் தலைமையில் அலரி மாளிகையில் ஒன்று கூடியது.
பவித்ரா, பந்துல, பிரசன்ன ரணதுங்க, ரோஹித, காமினி லோகுகே போன்ற அமைச்சர்களும், மேல் மாகாணத்தில் உள்ள ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் அதில் கலந்து கொண்டனர்.
ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள மாவட்டங்களில் 5000 ரூபா கொடுப்பனவு வழங்குதல், தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு 10,000 ரூபா வழங்குதல் போன்ற அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்லும் முறை பற்றி கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக களுத்துறை மாவட்டத்தில் 5000 ரூபா கொடுப்பனவு அதுவரை வழங்கப்பட்டிருக்கவில்லை என்பதுடன் அதனை வழங்க நடவடிக்கை எடுப்பது பற்றியும் பேசப்பட்டது.
கட்டுநாயக்க உட்பட சுதந்திர வர்த்தக வலயங்களில் தொழில் செய்யும் விடுதிகளில் தங்கியிருக்கும் தொழிலாளர்கள் பற்றிய விடயத்தை ஆரம்பித்தார் அமைச்சர் பிரசன்ன. "அவர்களுக்கு சாப்பிடக் கூட எதுவும் இல்லையென்று பாரிய பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது" என அவர் தெரிவித்தார். விடுதிகளில் உள்ளவர்களில் பலர் Man Power தொழிலாளர்கள். அவர்களுக்கான வேலைத்திட்டம் ஒன்று பிரதேச செயலாளர் ஊடாக முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
#கேபினட் கூட்டம்#
02/11/2020 கேபினட் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
வழமையாக கூட்ட மேசையை சூழ ஒரு வரிசையாக அமரும் அமைச்சர்கள் அன்றைய தினம் மீட்டர் இடைவெளி பேணியமை காரணமாக இரு வரிசைகளில் அமர வைக்கப்பட்டனர்.
அந்த கேபினட் கூட்டத்தின் பிரதான பேசு பொருளாக இருந்தது கோவிட்19 பிரச்சினை. "நிறைய பேர் சொல்வது போல லொக் டவுன் செய்து பிரச்சனை தீரப்போவதில்லை. அவ்வாறு மூடினால் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய பாதிப்பு ஏற்படும். பாடசாலைகளை மூடினால் அதன் தாக்கம் பல ஆண்டுகளுக்கு இருக்கும். அதனால் எமக்கு இப்போது இருக்கும் தெரிவு இதனுடன் வாழ்வது. நோயினால் பீடிக்கப்பட்டவார்களுக்கு சிகிச்சை அளிப்பதுடன், ஏனையவர்களை தனிமைப்படுத்தலுக்கு அனுப்புவது அதனாலாகும்" என ஜனாதிபதி நீண்ட விளக்கம் வழங்கினார்.
#போலீசுக்கு வாகனம் கேட்ட சமல்#
போலீஸ்க்கு பொறுப்பான அமைச்சர் சமல் ராஜபக்ச. போலீஸ்க்கு போதுமான வாகனங்கள் இல்லாமையினால் பாரிய சிக்கல்கள் உருவாகியுள்ளதாக கேபினட் இல் சொன்னது மாற்று ஏற்பாடு தொடர்பிலும் விளக்கியாகும்.
அமைச்சரின் கையில் அரசுடைமையாக்கப்பட்ட, சுங்கத்தின் கைவசம் உள்ள வாகனங்களின் பட்டியல் ஒன்றை கேபினட் இல் முன் வைத்த அமைச்சர் சமல் அவற்றை போலீஸ் திணைக்களத்திற்கு பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தார்.
#டிவியில் நேரம் கேட்ட பீரிஸ்#
கொரோனா காரணமாக பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளமையினால் மாணவர்களின் கல்வியில் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, அதனை நிவர்த்தி செய்வதற்காக தொலைக்காட்சி அலைவரிசைகளின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற யோசனையை கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் முன்வைத்தார்.
தொலைக்காட்சி அலைவரிசைகளில் பாடசாலை பாடங்களை உள்ளடக்கிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்வதன் மூலம் மாணவர்களின் கல்விக்கு அது உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.
#அரிசி மாபியாவிற்கு எதிராக பந்துல#
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட பின்னர் அரிசி விலைகள் அதிகரித்துள்ளன. அரிசி உற்பத்தியாளர்கள்/அரிசி ஆலை உரிமையாளர்களிடம் இருந்து அதிக விலைக்கு அரிசி கிடைப்பதால் விலையை அதிகரிக்க வேண்டியுள்ளதாக அரிசி விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அமைச்சர் பந்துல சில முறை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களை சந்தித்து விலையைக் குறைக்குமாறு கேட்டுக் கொண்ட போதிலும் அதற்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.
இதனால் அமைச்சர் பந்துல நுகர்வோர் அதிகார சபை ஊடாக அரிசிக்கான உச்ச சில்லறை விலையை நிர்ணயித்தார். என்ற போதிலும் விலை குறைவதாக இல்லை. அரிசி விலை நாட்டில் பாரிய சிக்கலாக உருவாகியுள்ளது.
அதே போன்று சீனிக்கான வரி குறைக்கப்பட்டு ஒரு மாதம் அளவு கடந்து விட்டது. ஆனால் குறைந்த விலையில் சீனி நாட்டில் இல்லை. சதோச இல் கூட மட்டுப்படுத்தப்பட்ட விநியோகம் நடக்கிறது. அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடாத்திய இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத் தலைவர் அது தொடர்பில் அரசு மீது நிறைய குற்றச்சாட்டுக்களை அடுக்கி இருந்தார். அவற்றில் முக்கியமானது நாட்டில் தேவையான சீனி கையிருப்பில் இருக்கும் போது துறைமுகத்தை அண்டியிருந்த அரசுக்கு ஆதரவளிக்கும் பிரபல வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான சீனியை வரியின்றி நாட்டுக்குள் கொண்டு வர அரசு செய்த சதியே இதுவென அவர் தெரிவித்தார்.
சீனிக்கான விலையை குறைக்கும் நோக்கில் வரிக் குறைப்பு செய்ததாகவும், அதன் நன்மை பொதுமக்களுக்கு சென்றடையவில்லை என்றும் இந்நிலை தொடருமாக இருப்பின் வரியை மீண்டும் விதிக்க வேண்டிய நிலை உருவாகும் என்று அமைச்சர் பந்துல ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
ஏற்கனவே இவ்வரசு வந்த பின்னர் அரிசி உட்பட பல அத்தியாவசிய பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலைகளை நிர்ணயம் செய்த போதிலும் அவை எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை
##வரவு செலவுத் திட்ட விவாதத்திற்கு குறுக்கே வந்த கொரோனா#
2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 17 ஆம் திகதி பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்படவுள்ளது.
வழமையாக வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்ட பின்னர் அதற்கான விவாதங்கள் சுமார் ஒரு மாதம் நீடிக்கும். ஆனால் இம்முறை கொரோனா காரணமாக அதனை 10 நாட்களுக்கு மட்டுப்படுத்தல் தொடர்பாக கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதம் 4 நாட்களும், குழுநிலை விவாதம் 6 நாட்களும் நடைபெறும் என் முடிவு செய்யப்பட்டுள்ளது.
#சிறிலங்கா பொது ஜன பெரமுனவை சந்தித்த சீன கமியூனிஸ்ட் கட்சி#
சிறிலங்கா பொது ஜன பெரமுனவிற்கும் சீன கமியூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று கடந்த வாரம் கொழும்பு வோட்டர்ஸ் எஜ் ஹோட்டலில் நடைபெற்றது.
சிறிலங்கா பொது ஜன பெரமுன சார்பில் அதன் தவிசாளர் ஜீ. எல். பீரிஸ், நாமல் ராஜபக்ஷ மற்றும் ஷெஹான் சேமசிங்ஹ ஆகிய அமைச்சர்களும் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்த்தனவும் கலந்து கொண்டார். சீன கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கொரோனா நிலைமை காரணமாக எவரும் இங்கு வரவில்லை. சீனாவில் இருந்து நிகழ்நிலை (Online) சந்திப்பாக இது நடைபெற்றது. இலங்கைக்கான சீனத் தூதுவர் இதில் பங்குபற்றுவதாக இருந்த போதிலும் அவர் புதிதாக நியமனம் பெற்று இலங்கை வந்து தற்போது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை காரணமாக பங்குபற்றவில்லை.
ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவின் மூளையாக கருதப்படும் பசில் ராஜபக்ஷ இந்தியாவின் பாரதீய ஜனதா கட்சி, சீனாவின் கமியூனிஸ்ட் கட்சி பாணியில் தமது கட்சியை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்த பின்னணியில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
#தம்புள்ளையில் தேங்கிய மரக்கறிகள்#
இலங்கையின் மிக முக்கியமான பொருளாதார மத்திய நிலையம் தம்புள்ளை. பல விவசாயிகள் மட்டுமன்றி ஏனைய பிராந்திய பொருளாதார மத்திய நிலையங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான மரக்கறி, பழ வகைகள் நாடுபூராக இங்கிருந்து விநியோகிக்கப்படுகின்றன. மேல் மாகாணத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக மேல் மாகாணத்தில் உள்ள முக்கிய பொருளாதார மத்திய நிலையங்கள் மூடப்பட்டதன் காரணமாக தம்புள்ளையில் உற்பத்திகளை விற்பனை செய்து கொள்ள முடியாத நிலை உருவானது.
உடனடியாக ஸ்தலத்திற்கு சென்ற அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் மற்றும் பா.உ பிரமித பண்டார தென்னகோன் ஆகியோர் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் சிக்கல்களை கேட்டறிந்தனர். அறுவடைகளை நீண்ட நேரம் வைத்திருப்பதால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை உணர்ந்த அவர்கள் அவசரமாக செய்யக்கூடிய மாற்று ஏற்பாடுகள் குறித்து தேவையான ஆலோசனைகளை வழங்கியதுடன், பொருளாதார மறுமலர்ச்சி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷவோடு தொடர்பு கொண்டு விடயத்தை எத்தி வைத்தார்.
பசில் உடனடியாக செயல்பட்டு மேல் மாகாணத்தில் உள்ள எல்லா பொருளாதார மத்திய நிலையங்களையும் ஊரடங்கு சட்டம் உள்ள நிலையிலும் திறக்க நடவடிக்கை மேற்கொண்டார். அதன் காரணமாக தம்புள்ளை நிலைமைகள் பெரும்பாலும் சீரடைந்தன.
#குருணாகளில் இருந்து பிரதமருக்கு முறைப்பாடு#
கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் குருநாகல் மாவட்டமும் ஒன்றாகும். எனினும் குருநாகல் போதனா வைத்தியசாலையில் உள்ள PCR இயந்திரத்தில் ஒரு நாளைக்கு 10 பரிசோதனைகளையாவது செய்ய முடியாதுள்ளது. இது தொடர்பில் பாராளுமன்றத்தில் பிரதமரை சந்தித்த பா.உ சாந்த பண்டார முறைப்பாடு ஒன்றை முன்வைத்தார்.
"Sir, குருநாகல் வைத்தியசாலையில் உள்ள PCR இயந்திரத்தின் கொள்ளளவு போதாது. ஏற்கனவே குருநாகல் மாவட்டத்தில் பல போலீஸ் பிரிவுகளில் ஊரடங்கு அமுலில் உள்ளது. எனவே, 5000 ரூபாய் நிவாரணம் குருநாகல் மாவட்டத்திற்கும் வழங்கப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.
பதிலளித்த பிரதமர் "இது தொடர்பில் பசிலுடன் கதைக்க வேண்டும். நானும் பேசுகிறேன். நீங்களும் பேசுங்கள்." என்று கூறினார்.
#மீண்டும் அபயாராமவில் மஹிந்த#
பிரதமரின் அரசியல் விவகார இணைப்புச் செயலாளர் குமாரசிரி ஹெட்டிக்கே இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தப்பனத்தின் தலைவர் சுமித் விஜேவிங்க ஆகியோர் கடந்த 30 ஆம் திகதி நரஹேன்பிடவில் உள்ள அபயாராம விகாரைக்கு சென்று முறுத்தெட்டுவே ஆனந்த தேரரை சந்தித்தனர்.
அப்போது வேறு அலுவல் விடயமாக சென்று வரும் வழியில் பிரதமரும் அங்கே வந்து சேர்ந்தார்.
தேரரை விழித்த பிரதமர் "வேறு அலுவலாக இந்தப் பக்கமாக வந்தேன். தங்களை தரிசித்து செல்ல எண்ணி இங்கே வந்தேன்" என்று கூற "நீங்கள் ஒரு போதும் மாறாத தலைவர். அதனால்தான் நாங்கள் இன்னும் உங்களை கவனிக்கிறோம்" என மிக பரிவுடன் கூறினார்.
"Sir தலைமை பிக்கு இப்போதெல்லாம் அரசாங்கத்திற்கு எதிராகவும் கொஞ்சம் காரமாக பேசுகிறார். அதனால் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் இந்தப் பக்கம் வந்து செல்ல ஆரம்பித்துள்ளனர்" என குமாரசிரி ஹெட்டிக்கே கூறினார்.
"ஆனந்த தேரரின் குணம் அப்படித்தான். குறைபாடுகள் உள்ள இடத்தில் பேசுவார். நாங்கள் அதை கணக்கில் எடுப்பதில்லை. உங்களுக்கு வேண்டியது வேகமாக வேலைகள் நடக்க. அப்படித்தானே! " என பிரதமர் கூற, "பிரதமர் அவர்களே! எதற்கும் சுற்றுப்புறம் குறித்து அவதானமாக இருங்கள். சில அமைச்சர்கள், உத்தியோகத்தர்கள் செய்யும் வேலை அவ்வளவு நல்லதல்ல. அரசின் மீது மக்கள் வெறுப்படைய அவையும் ஒரு காரணம்" என தேரர் குறிப்பிட்டார்.
#அனுராதபுரத்தில் சஜித்#
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கடந்த வாரம் அனுராதபுரத்திற்கு விஜயம் செய்து அங்குள்ள பல விகாரைகளுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். அந்த விஜயத்தின் போது விகாரைகளின் குறைபாடுகள் தொடர்பில் தேடிப் பார்க்கவும் அவர் தவறவில்லை.
இசுருமுனிய விகாரைக்கு சென்று பிக்குகளிடம் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டு வெளியே வரும் போது ஏராளமான மக்கள் அங்கே திரண்டிருந்தனர். "Sir நீங்கள் ஆரம்பத்தில் இருந்து சொல்லி விடயங்கள் உண்மையாகிக் கொண்டே வருகின்றன. பொய் வாக்குறுதிகளை வழங்கி ஆட்சியைப் பெற்றுக்கொண்டாலும் இப்போது உண்மை வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கிறது" என கூட்டத்தில் இருந்த ஒருவர் கூறியதுடன் கடந்த தேர்தல்களில் தான் மொட்டுவின் வெற்றிக்காக உழைத்ததாகவும் குறிப்பிட்டார்.
"அரசு நினைக்குமானால் மக்களை தொடர்ந்து ஏமாற்றலாம் என்று அது நடக்கப் போவதில்லை. எந்த ஆட்சிக்கும் ஏற்பட்ட தவறு மக்கள் பிரச்சினைகளை மறந்தமையே" என சஜித் பதிலளித்தார்.
தொடர்ந்து ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்த சஜித் "அரசு முன்னுரிமை அளிப்பது தேவையான விடயங்களுக்கு அல்ல. தேவையற்ற விடயங்களுக்கு. 20 கொண்டு வர இருந்த அவசரம் வெள்ளையர்கள் காலத்தில் கொண்டுவரப்பட்ட தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு பதிலாக புதிய ஒன்றைக் கொண்டு வருவதில் இல்லை" எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து மிரிசவெடிய விகாரைக்கும் சென்றார். அங்கே இருந்த ரோஹன பண்டார சஜித் இடம் "Sir அரசு கொரோனாவுக்கு மருந்து கண்டு பிடித்துள்ளது" என்று ஒரு வீடியோவை கட்டினார்
அதில் சுகாதார அமைச்சர் பவித்ரா, இன்னும் சில அமைச்சர்கள் குடங்களை ஆற்றில் வீசும் காட்சி இருந்தது. "இவ்வாறுதான் இந்த அரசாங்கம் கோரோணாவை ஒளிக்கப் போகிறது" எனக் கூற "ஒவ்வொருவரினதும் நம்பிக்கையை நாம் இகழ்ந்து பேசக் கூடாது. ஜனாதிபதி தேர்தலின் போது பாம்பு ஒன்றை வைத்து ஆட்டம் போட்டவர்கள் இவர்கள்" எனக் கூறினார்.
#சஜித் இன் பாராளுமன்ற உரைக்கு கிடைத்த பாராட்டு#
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கடந்த வாரம் பாராளுமன்றத்தில் சுமார் ஒரு மணி நேர உரையொன்றை ஆற்றியிருந்தார். சுகாதரத்துறை தற்போது எதிர்நோக்கியுள்ள சவால்கள் குறித்தும், அதன் மூலம் ஏற்பட்டுள்ள சமூக சிக்கல்கள் குறித்தும் அந்த உரையில் கருத்து தெரிவித்த அவர், தான் நல்ல நோக்கில் சொன்ன பல ஆலோசனைகளை அரசு தட்டிக் கழித்ததுடன், தன்னை எள்ளி நகையாடி, தனக்கு சேறு பூசிக்கொண்டு இருந்ததையும் நினைவுபடுத்தினார். இந்த உரையிலேயே முஸ்லிம்களின் ஜனாஸா அடக்கம் குறித்தும் அரசை காரசாரமான முறையில் விமர்சனம் செய்திருந்தார்.
கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் இந்த உரையை பாராட்டியிருந்தனர்.
#ருவன் விஜேவர்த்தனவின் கட்சிப் பணி#
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்த்தன கடந்த சில நாட்களாக கட்சிப் பணிகளில் முனைப்புடன் ஈடுபட்டு வருகிறார். கடந்த வாரம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தமை காரணமாக அவரால் கொழும்பை விட்டு வெளியே செல்ல முடியவில்லை. எனினும், Zoom தொழில் நுட்பத்தை ஊடாக பல முக்கியஸ்தர்களோடு தனியாகவும், கூட்டாகவும் கலந்துரையாடல்களை நடத்தினார்.
கடந்த போயா தினத்தை முன்னிட்டு கட்சித் தலைமையாகமான ஸ்ரீகொத்தவில் தர்ம உபதேசம் ஒன்றையும் ருவன் ஏற்பாடு செய்திருந்தார்.
அதன் பின்னர் அங்கே சேர்ந்திருந்தவர்களோடு பேசிய ருவன் "கட்சியை மீள கட்டியெழுப்ப மக்களிடையே செல்ல வேண்டும். அவ்வாறெல்லாமல் மக்களில் விசுவாசத்தை கட்டியெழுப்ப முடியாது" என்று தெரிவித்தார்.
அத்துடன் ரணில் விக்கிரமசிங்கவின் வேண்டுகோளை ஏற்று ஒன்லைன் மூலம் பத்திரிகையாளர் மாநாடு ஒன்றையும் நடத்தினார்.
இவை கடந்த வார நிகழ்வுகளின் சுருக்கமே. அடுத்த வாரம் ஜனாஸா எரிப்பு, Rapid Test தொடர்பான வாத விவாதங்கள் அரசியல் களத்தில் மேலோங்கலாம். அவை பற்றிய சுவையான உள்ளக தகவல்களோடு அடுத்த வாரம் மீண்டும் வரும்.
- fபயாஸ் MA fபரீட்.
அரசியல் களத்தில் திரைக்கு அப்பால்... சமகால அரசியல் பார்வை...
Reviewed by irumbuthirai
on
November 12, 2020
Rating:
Reviewed by irumbuthirai
on
November 12, 2020
Rating:

No comments: