குழம்பிப்போன ஜனாஸா விவகாரம்: நடந்தது என்ன?


கொரோனாவினால் மரணமடையும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்குதல் தொடர்பான கதைகள் கடந்த வாரத்தில் இருந்து சமூகத்தில் அடிபட ஆரம்பித்தன. 
பாராளுமன்றத்தில் சஜித் ஆற்றிய உரையில் அது குறித்து குறிப்பிட்டதும், அமைச்சர் பவித்ரா அது குறித்து மீள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டமையை ஏற்றுக்கொண்டமையும் முஸ்லீம் தரப்பில் நம்பிக்கையை ஏற்படுத்தியது. 
அவ்வாறே 20 ஆம் சீர்திருத்தத்தின் போது அரசுக்கு ஆதரவளித்த முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களில் சிலர் நாம் ஆதரவு வழங்கியதன் நன்மையை சமூகம் கூடிய விரைவில் பெற்றுக்கொள்ளும் என்று எரிப்பு தடை நீக்கத்தையே குறிப்பிட்டதாக அவர்தம் ஆதரவாளர்கள் அடித்து விட ஆரம்பித்தனர். அப்படி என்றால் ஜனாசா விவகாரத்துக்கு மாத்திரம் 20 ன் பக்கம் சாய்ந்திருப்பார்களா?  அப்ப தலைவர்கள் இருவரும் இதற்கு எதிர்ப்பா? என்று பல கேள்விகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.
இந்நிலையில் இது தொடர்பில் நடைபெற்ற கூட்டம் இணக்கப்பாடுகள் எதுவும் இன்றி நிறைவடைய முஸ்லீம் சமூகம் மீண்டும் ஏமாற்றப்பட்டது. 
இச்சந்தர்ப்பத்தில் குறித்த ஒரே நேரத்தில் அனைவரும் துஆ இஸ்திஹ்பார் செய்யும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அவ்வாறே இரு அமைப்புக்கள் கொழும்பில் குறித்த தினத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றிற்கு அழைப்பு விடுத்தன. மீண்டும் விழித்துக் கொண்ட எமது அறைவேற்காட்டு வாட்சப், பேஸ்புக் ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் அவரவர் சிற்றறிவை பிரயோகித்து அதன் சாதக பாதகங்களை எழுதித் தள்ளினர். தடை நீக்கப்படும் சாத்தியம் உள்ளமையையும், அவ்வாறு நீக்கப்பட்டால் ஏற்படும் எதிர் வினைகளையும் நன்றாக விளங்கிக் கொண்ட பலர் இவ்வாறான சந்தர்ப்பத்தில் சமூகம் என்ற அடிப்படையில் நிதானமாக நடந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி நின்றனர். 
இந்நிலையில் யாருமே எதிர்பாராத தருணத்தில் ஜம்இய்யதுல் உலமா தலைவரின் ஒரு ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவி முஸ்லீம் மக்களை நிம்மதிப் பெருமூச்சு விடச் செய்தது. கடந்த திங்கள் (9) நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஜனாஸா அடக்கம் செய்ய ஏகமனதாக முடிவு செய்யப்பட்டதாகவும், மன்னார் பகுதியில் முஸ்லிம்கள் செறிவாக வாழும் இடம் ஒன்றில் அடக்கம் செய்யுமாறு சொல்லப்பட்டதாகவும் அந்த தகவல் சொன்னது. 
அதன் பின்னர் மேலே சொன்ன சமூக ஆர்வலக் குஞ்சுகளுக்கு, ஸ்மார்ட் போன் ஊடக பருப்புகளாலும் பொறுப்பற்ற விதமாக நன்றி தெரிவிக்கவும், வெற்றிக் கொண்டாட்ட பதிவுகளையும் இட்டு வேலையை ஆரம்பித்தனர். 
இனவாத செயற்பாட்டாளர்கள் தம் பங்கிற்கு மறுபுறம் ஆரம்பித்தனர். சுகாதார தொழில்நுட்ப குழுவின் பரிந்துரை இல்லாமல் ஜனாதிபதி எவ்வாறு தனித் தீர்மானம் எடுப்பார்? IDH வைத்தியசாலைக்கு மிக அண்மையிலுள்ள தகனசாலையில் எரிக்கும்போது கொழும்பிலிருந்து மன்னாருக்கு எப்படி அவ்வளவு தூரம் கொண்டு செல்லலாம்? அது பாதிப்பை ஏற்படுத்தாதா? தேர்தலுக்கு முன் முடியாது என்றால் தற்போது மாத்திரம் எவ்வாறு முடியும் ? அன்று கிருமி பரவும் என்றால் இன்று கிருமி பரவாதா? போன்ற பல்வேறு கோணங்களில் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. 
உடனே சுதாகரித்துக் கொண்ட அரசு சார்பில் அவ்வாறான தீர்மானம் எடுக்கப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
இன்னொரு புறம் அமைச்சர் அலி சப்ரி தான் அவ்வாறான தகவலை ரிஸ்வி முப்திக்கு சொல்லவில்லை என்று கூறிய தகவல்களும் வெளியாகின. இவ்விடயம் குழம்பிப்போன பின்னர் அமைச்சருக்கு வந்த தொலைபேசி அழைப்புகளுக்கு கூட பதிலளிக்காமல் இருந்ததாகவும் தகவல். 
எனவே இந்த விவகாரம் இன்னும் நீண்டு கொண்டு செல்லலாம். 
இங்கே அமைச்சர் அலி சப்ரி உண்மையில் அவ்வாறான செய்தி ஒன்றை ரிஸ்வி முப்தியிடம் சொன்னாரா? அவ்வாறு சொல்லியிருப்பின் அது அமைச்சரவை கூட்டுப்பொறுப்பை மறந்த செயலாகும். தனிப்பட்ட நட்பு காரணமாக சொல்லி இருப்பின் அதனை பகிரங்கப்படுத்தியமையும் தவறாகும். ஆ
ஆனால் அலிசப்ரி சொல்லாத ஒரு விடயத்தை தானாக நினைத்து ரிஸ்வி முப்தி சொல்லியிருக்கவும் வாய்ப்பில்லை. இங்கு அலிசப்ரி கூட்டுப்பொறுப்பை மீறினார். தனிப்பட்ட நட்பு காரணமாக சொல்லப்பட்ட ஒரு விடயத்தை உத்தியோகபூர்வ அறிவித்தல் வருவதற்கு முன்னர் பகிரங்கப் படுத்தினார் ரிஸ்வி முப்தி என்றே தோன்றுகிறது. மொத்தத்தில் இரு பக்கமும் தவறு என்றே தோன்றுகிறது. 
இது மாத்திரமன்றி எமது அரசியல்வாதிகளின் அல்லக்கைகளும், ஊடக பருப்புக்களும் கொஞ்சம் கூட அறிவு இன்றி செயற்பட்டமை அதை விட பிழையாகும். ஏனென்றால் உரிய வர்த்தமானி வெளியிடப்படும் வரை இனவாதிகளின் வாய்க்கு அவல் கொடுக்காமல் இருந்திருக்க வேண்டும். ஒரு சிறிய தவறு எந்தளவு பெரிய தாக்கத்தை சமூகத்தில் ஏற்படுத்தும் என்பதற்க்கு இது சிறந்த உதாரணம். 
அல்லாஹ்வின் நாட்டம் இருப்பின் அடக்கம் செய்ய அனுமதி கிடைக்கலாம். ஆனால் அது வரை எத்தனை ஜனாஸாக்களை எரித்து விடுவார்களோ... அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். 
 ஒருவேளை நாளையோ, இன்னும் ஓரிரு தினங்களிலோ அனுமதி கிடைத்தாலும் அடக்கம் செய்து விட்டு வேலையைப் பார்க்க வேண்டுமே தவிர வெட்டி பீற்றல் மூலம் சமூகம் அடைய போகும் நன்மைகள் எதுவும் இல்லை என்பதற்கு இச்சம்பவம் மிகப் பெரிய பாடமாக உள்ளது. 
அவசரத்தின் விளைவுகளை அறிந்து  நிதானமாக செயற்படுவோமாக! 
குழம்பிப்போன ஜனாஸா விவகாரம்: நடந்தது என்ன? குழம்பிப்போன ஜனாஸா விவகாரம்: நடந்தது என்ன? Reviewed by irumbuthirai on November 12, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.