பைடனின் வெற்றி உலக அரசியலில் ஏற்படுத்தப் போகும் மாற்றம் என்ன?


#அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்
அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் கடந்த 3ஆம் திகதி நடைபெற்றது. இரண்டு பிரதான கட்சிகள் சார்பாகவும் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் (பராக் ஒபாமாவின் கால) ஆகியோர் போட்டியிட்டனர். 
பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் பைடன் வெற்றியீட்டுவார் என தெரிவித்த போதிலும் கடந்த 2016 தேர்தலிலும் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெறுவார் என தெரிவிக்கப்பட்ட கருத்துக் கணிப்புகள் பொய்யானதில் இம்முறையும் என்ன நடக்குமோ என்ற ஆவல் தொக்கி நின்றது. 

#அமெரிக்க தேர்தல் முறை
அமெரிக்க தேர்தல் முறை எமக்கு பரிச்சயமான முறையல்ல. சற்று வித்தியாசமானது. அமெரிக்கா என்பது 50 குடியரசுகள் (States) களின் இணைவு. அந்த ஒவ்வொரு ஸ்டேட்ஸ்லிருந்தும் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும் Electorial College களே ஜனாதிபதியை தெரிவு செய்வார்கள். 
நடைபெற்ற தேர்தல் அவ்வாறான Electorial College காண உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தலாகும். ஒவ்வொரு ஸ்டேட்ஸ் இல் இருந்தும் Electorial College க்கு தெரிவு செய்யப்படும் உறுப்பினர் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டுள்ளது. அந்த அந்த ஸ்டேட்ஸ் இல் வெற்றி பெறும் கட்சி அந்த ஸ்டேட்ஸ் இன் எல்லா Electorial College ஐயும் வெற்றி கொள்ளும். மொத்தமாக 538 Electorial College கள் உள்ளன. அவற்றில் 270 ஐ வெற்றி பெறும் வேட்பாளர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார். 
அமெரிக்காவில் இரு பெரும் கட்சிகள் உள்ளன. Republican கட்சி, Democratic கட்சி என்ற இரண்டுமே அவையாகும். தேர்தல் நடைபெற முன்னர் உட்கட்சி தேர்தல் மூலம் கட்சியின் வேட்பாளர் தீர்மானிக்கப்படுவார். ஒருவருக்கு 4 வருடங்கள் கொண்ட இரு தவணைகள் பதவி வகிக்கலாம். முதல் தவணை ஜனாதிபதியாக இருப்பவர் மீண்டும் போட்டியிட விரும்பின் அவரது கட்சி சார்பில் உட்கட்சி போட்டியின்றி போட்டியிடலாம். 
அவ்வகையில் Democratic கட்சி சார்பில் ஜோ பைடன் உட்கட்சி தேர்தலில் வென்றார். அவர் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் உதவி ஜனாதிபதியாக இருந்ததுடன் 2016 ஆம் ஆண்டில் உட்கட்சி தேர்தலில் ஹிலாரியிடம் தோற்றிருந்தார். Republican சார்பாக பதவியில் உள்ள ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் போட்டியிட்டார். 

 #தேர்தலுக்கு முந்திய கள நிலவரம்
2016 ஆம் ஆண்டு தேர்தலில் டொனால்ட் டிரம்ப் குடியேற்றக்காரர்களுக்கு எதிரான கடும் நிலைப்பாட்டை பேசினார். அமெரிக்க பெருமை குறித்து பேசினார். மெக்சிகோவில் இருந்து களவாக அமெரிக்காவுக்குள் புகுபவர்களை பற்றி பேசினார். அதனால் மக்கள் ஆதரவு கிடைத்தது. பதவிக்கு வந்த அவர் மெக்சிகோ எல்லையில் மிகப் பெரும் மதில் ஒன்றை எழுப்பினார். அத்துடன் மத்திய கிழக்கில் இராணுவ செயற்பாடுகளை சற்று குறைத்து அதற்குப் பதிலாக சீனாவை சீண்ட ஆரம்பித்தார். 
 அதே நேரம் கொரோனா அமெரிக்காவில் மோசமான விளைவுகளை உண்டாக்கியுள்ளது. அதன் பரவலை கட்டுப்படுத்த அமெரிக்காவால் இயலவில்லை. குறிப்பாக அதன் ஆரம்பத்தில் சீனா காய்ச்சல் என்று எள்ளி நகையாடியமை, எனக்கும் கொரோனா என்று நக்கல் அடித்தமை, மாஸ்க் போடமாட்டேன், சனிடைசர் குடியுங்கள் போன்ற பேச்சுக்கள் ஜனாதிபதி டிரம்ப் இன் அபிமானத்தை இழக்கச் செய்தன. 
மறுபுறம் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட கறுப்பின ஜோர்ஜ் ப்ளயிட் தொடர்பில் டிரம்ப் நடந்து கொண்ட விதம் ஒட்டு மொத்த கறுப்பினதவர்களை மட்டுமல்லாமல், இனவாதமற்ற நடுநிலை சிந்தனையாளர்களையும் டிரம்ப் இன் பக்கம் இருந்து ஒதுங்கியது. இவை எல்லாவற்றையும் பைடன் அறுவடை செய்தார். 
 #தேர்தல்
அமெரிக்க தேர்தல் சட்டத்தின் படி ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கும் ஒருமுறை வரும் நவம்பர் மாதம் முதலாம் திங்கட்கிழமைக்கு அடுத்து வரும் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி தேர்தல் நடைபெறும். தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி ஜனவரி 20 ஆம் திகதி சத்தியப்பிரமாணம் செய்வார். 
அவ்வகையில் இம்முறை நவம்பர் 3 ஆம் திகதி நடைபெற்றது. பொதுவாக தேர்தல் நடைபெற்ற தினத்திற்கு அடுத்த தினம் முடிவுகள் வெளியாகும். ஆனால் பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக இம்முறை பூரண முடிவுகள் இன்னும் வெளியாகமல் தாமதமாக வருகின்றன. இம்முறை தாமதத்திற்கு முக்கிய காரணம் அதிகரித்த தபால் வாக்குகளாகும். 
அமெரிக்காவில் எந்தவொரு வாக்காளருக்கும் தபால் மூலம் வாக்களிக்கும் உரிமை உண்டு. இம்முறை கொரோனா பரவல் காரணமாக பல வாக்காளர்கள் வாக்குச் சாவடிகளுக்கு செல்லாமல் தபால் மூலம் வாக்களித்துள்ளனர். இது கடந்த தேர்தலை விட 16 மடங்கு அதிகம் என்று சொல்லப்படுகிறது. இதனால் வாக்கெண்ணும் பணிகள் தாமதமாகி வருகிறது. எவ்வாறான போதிலும் ஆரம்ப கட்ட முடிவுகளின் அடிப்படையில் ஜோ பைடன் முன்னிலை பெற ஆரம்பித்தாலும் பின்னர் ட்ரம்ப்க்கு சாதகமான ஸ்டேட்ஸ்களின் முடிவுகள் வர ஆரம்பித்ததும் இருவருக்கும் இடையில் கடும் போட்டி நிலவி யார் வேண்டுமானாலும் தெரிவாகலாம் என்ற நிலை காணப்பட்டது. 
எனினும் டிரம்ப் முன்னணியில் இருந்த சில ஸ்டேட்ஸ்களின் பைடன் முன்னிலை பெற்று வெற்றியை உறுதி செய்ய ஜோ பைடனின் வெள்ளை மாளிகை பிரவேசம் உறுதியாகியுள்ளது. 

 #அமெரிக்க அரசியல் மாற்றம் உலகில் என்ன மாற்றத்தை கொண்டு வரப் போகிறது
அமெரிக்கா என்பது லட்சக்கணக்கான செவ்விந்தியர்களின் இரத்தத்தின் மீது கட்டப்பட்ட தேசமாகும். அமெரிக்க புரட்சியின் பின்னர் வேகமாக வளர்ந்து அமெரிக்கா முதலாம் உலக யுத்தம் நிறைவடையும் போது அப்போதைய சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யத்திற்கு சமனான வல்லரசாக மாறியிருந்தது. இரண்டாம் உலக யுத்தம் நிறைவடைய சோவியத் ரஷ்யாவுடன் சமனான வல்லரசாக இருந்து 1990 இல் சோவியத் சிதைவடைய உலகின் தனிப் பெரும் வல்லரசாக, போலீஸ்காரனாக மாறிப்போனது. 
தான் நினைத்தவாறு உலகில் எல்லாம் நடக்க வேண்டும் என்ற போர்வையில் உலக நாடுகளில் உள் விவகாரங்களில் இருந்து எல்லாவற்றிலும் மூக்கை நுழைக்கும் நாடாக இருந்தும் வருகிறது. 
 டிரம்ப் இன் வருகையோடு இந்நிலையில் சற்று மாற்றம் ஏற்பட்டது. பெரும்பாலும் தம் பெருமை காட்டவோ, புது ஆயுதம் பரிசீலிக்கவோ என்று சொல்லிக் கொண்டு சிறு நாடுகள் மீது அடாவடி காட்டவில்லை. வடகோரியாவுடன் பேச்சுவார்த்தை நடாத்தினார். இரானுடன் முரண்பாடு யுத்தம் ஏற்படும் நிலைக்கும் சென்றது. கடைசி காலத்தில் தன் ஹீரோயிசத்தை மக்களிடம் காட்ட கொஞ்சம் சீனாவுடன் முரண்டு பண்ணினார். 
எனினும் இவரது காலத்தில் மிக முக்கியமாக சில ராஜதந்திர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்து சமுத்திரத்தில் சீன ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்கா ஆரம்பிக்கப்பட்டமை முக்கிய நிகழ்வாகும். குறிப்பாக இந்து பசுபிக் பிராந்தியத்தின் வலிமை மிக்க பொருளாதார, இராணுவ ஆதிக்க சக்திகளாக கருதப்படும் ஜப்பான், இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளை சீனாவின் ஆதிக்கத்திற்கு எதிராக ஒரே அச்சிற்கு கொண்டு வருவதில் அமெரிக்கா ஓரளவு வெற்றி கண்டுள்ளது. நேட்டோ பாணியிலான இராணுவ ஒத்துழைப்பு கூட்டமைப்பாக உருவாக்கும் நோக்கில் ஒன்று கூடும் நோக்கம் காணப்பட்ட போதிலும் அந்தளவு வெற்றி பெறவில்லை. ஆனால் இந்த நான்கு நாடுகளில் கூட்டு கடற்படை பயிற்சி ஒன்றை இந்து சமுத்திரத்தில் ஏற்பாடு செய்து நடத்துவதில் டிரம்ப் வெற்றி கண்டார். 
 1964 ல் சீனாவுடன் கண்ட தோல்வியை இன்னும் ஜீரணிக்க முடியாமல் தவிக்கும் இந்தியா அண்மையில் லாடக் பகுதியில் மீண்டும் ஒருமுறை கரியை பூசிக்கொண்டது. தனியாக இராஜதந்திர போரில் சீனாவை ஓரங்கட்ட முடியாது எனக் கண்ட இந்தியா அமெரிக்காவை நெருங்கி வந்துள்ளது. டிரம்ப் தேர்தலை மிக நெருங்கி இருந்த வேளையில், கருத்துக் கணிப்புக்களும் பைடனுக்கு சாதகமாக இருந்த வேலை இந்தியா அவசர அவசரமாக கையெழுத்திட்ட ஒப்பந்தம் இந்தியாவின் தேவைக்கா அமெரிக்காவின் தேவைக்கா என்ற கேள்வி இன்னும் உலக அரசியல் அரங்கில் நிற்கிறது. 
பொதுவாக அமெரிக்க போன்ற நாடுகள் தலைவர்கள் மாறும் போது வெளிநாட்டுக் கொள்கை மாற்றிக் கொள்ளும் நாடு அல்ல. நாட்டின் கொள்கை வகுப்பாளர்களின் வழிதான் ஆட்சி முன்னெடுக்கப்படும். சில அவதானிகள் சொல்வது போல அடுத்த தவனையும் டிரம்ப்தான் என்று அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் தீர்மானம் மேற்கொண்டதன் காரணமாகவே இந்த ஒப்பந்தத்தை செய்ய அனுமதித்தனர் என்று ஒரு தோற்றத்தை அமெரிக்க மக்கள் மத்தியில் உருவாக்க டிரம்ப் செய்த வேலையாக கூட இருக்கலாம். அல்லது பைடன் வெற்றி பெற்றால் சீனா ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் செயற்பாட்டில் வேறு உத்திகளை அமெரிக்கா கடைபிடிக்கலாம் என்று இந்தியா நினைத்ததாக கூட இருக்கலாம். 
பைடன் உள்நாட்டில் உள்ள இன, மத பாகுபாடுகளுக்கு எதிராக வலுவான குரல் கொடுத்த ஒருவராக இனம் காணப்பட்டவர். அதனை நடைமுறையில் கொண்டு வர அவரால் முடிந்தால் உண்மையில் உலக சமாதனத்திற்கும் காத்திரமான பங்களிப்பை வழங்க அவரால் முடியுமாகும். 

#பைடனின் வெற்றி இலங்கையில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும்
பொதுவாக எப்போதும் Democratic கட்சி ஆட்சியில் இருக்கும் போது சர்வதேச மனித உரிமைகள் ஆணையம், உலக வர்த்தக அமைப்பு, உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்ற சர்வதேச அமைப்புக்கள் ஊடாக ஏனைய நாடுகள் மீது அழுத்தங்களை பிரயோகித்து தனது ஆதிக்கத்தை செலுத்த முனைவது வழமை. பராக் ஒபாமா காலத்தில் இலங்கை மீதும் அத்தகைய அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டமையை வாசகர்கள் அறிந்திருப்பீர்கள். 
ஆனால் டிரம்ப் அவற்றை தூக்கி கடாசி விட்டு தன் வேலைகளை பார்த்தார். அத்தோடு, இலங்கை சீனாவின் பால் செல்வதை தடுக்க நேரடி மிரட்டல் எல்லாம் விடுத்தார். ஆனால் புதிதாக அமையும் பைடனின் ஆட்சி எவ்வாறானதாக அமையப் போகிறது என்பது குறித்து சொல்வதற்கு இன்னும் காலம் இருக்கிறது. எனினும் ஜோ பைடனின் உப ஜனாதிபதி கமலா ஹாரிஸ். இந்திய வம்சாவளி. தமிழ் நாட்டு வம்சாவளி. அத்தோடு கமலா ஹாரிஸ் இன் அலுவலக பணியாள் முதல்வர் இலங்கை வம்சாவளி தமிழ் பெண். 
எனவே, இவர்கள் இலங்கை இனப்பிரச்சினை, தமிழர் பிரச்சினை அல்லது இனப்படுகொலை என்று கிளம்ப சாத்தியம் உள்ளது. எனினும், அமெரிக்கா போன்ற ஒரு நாட்டில் ஒரு அரசியல்வாதியின் தேவைக்காக ஒரு நாட்டின் மீது இராஜதந்திர அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும் என்று எதிர்பார்க்க முடியாத போதிலும் சீனாவுடனான உறவை கட்டுப்படுத்த அதை ஒரு கருவியாக்கலாம். 
ஏற்கனவே, இலங்கை மனித உரிமைகள் பேரவையில் சம அனுசரணை வழங்கிய பிரேரணையில் இருந்து விலகியமை, பொறுப்புக்கூறல் தொடர்பில் ஆர்வம் காட்டாமை போன்ற காரணங்களால் அவர்களுக்கு தேவையான பிடியை உருவாக்கி வைத்துள்ளது. 

#பைடனின் பணி என்னவாக இருக்கும்
கொரோனா காரணமாக உலகில் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் அமெரிக்கா முதலில் உள்ளது. ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு நோய் தொற்றியுள்ளது. அதிகமான நோயாளர் இறப்பு அங்கேயே நிகழ்ந்துள்ளது. அமெரிக்க பொருளாதாரத்திலும் பாரிய தேக்கம் ஏற்பட்டுள்ளது. அதனை சீர் செய்வதே பைடனின் முதல் கடமையாக இருக்கப் போகிறது. 
அத்துடன் உள்நாட்டில் இனப்பாகுபாடு தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டிய தேவையுள்ளது. அவ்வாறே சீனாவுடனான உறவை சீர் செய்ய வேண்டியது இரு நாடுகளுக்கு மட்டுமன்றி முழு உலக சமாதனத்திற்கும் காரணமாக அமையும். சீனாவின் ஆதிக்கம் கட்டுப்படுத்தப்பட வேண்டியது எனினும், அது உலக நாடுகளில் சுதந்திரம், இறையாண்மையை பாதுகாக்கும் நோக்கில் இருக்க வேண்டுமே தவிர, அவற்றை அமெரிக்காவிடம் அடகு வைக்கும் நிலையில் இருக்க கூடாது. அமெரிக்க சீன முரண்பாடு யுத்தம் ஒன்றாக விருத்தியடையுமாக இருப்பின் உலகம் சாம்பல் மேடாக மாறுவதை தவிர்க்க இயலாமல் போகும். தேர்தலின் இறுதி முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை. வெளியிடப்பட்ட சில ஸ்டேட்ஸ்களில் வாக்குகளை மீள எண்ணக் கோரி ஜனாதிபதி டிரம்ப் நீதிமன்றத்தை நாடியுள்ளார். அதற்கு என்ன தீர்ப்பு வரப் போகிறது. மீள எண்ணப்படுமா? இல்லையா? அவ்வாறு மீள எண்ணப்பட்டால் முடிவுகள் மாறுமா? என்ற பல கேள்விகளுக்கு எதிர்வரும் ஓரிரு நாட்களில் விடை கிடைக்கும். அதுவரை ஜோ பைடனுக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்து வைப்போம்.
- fபயாஸ் MA fபரீட்.
பைடனின் வெற்றி உலக அரசியலில் ஏற்படுத்தப் போகும் மாற்றம் என்ன? பைடனின் வெற்றி உலக அரசியலில் ஏற்படுத்தப் போகும் மாற்றம் என்ன? Reviewed by irumbuthirai on November 08, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.