பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்த இஸ்லாமிய நாடுகள்!

 

இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் மக்கள் ஒடுக்கப்படுவதாகவும், ஓஐசி (இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு) இஸ்லாமிய உலகத்தின் மீதே அவர்கள் நம்பிக்கை வைத்திருப்பதாகவும், நியூயார்க்கில் OIC யின் தொடர்பு குழுவில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி தெரிவித்தார். 
 
இது மாத்திரமன்றி ஐக்கிய நாடுகள் பொதுச் சபை மற்றும் மனித உரிமைகள் கவுன்சில் உள்ளிட்ட சகல முக்கிய மன்றங்களிலும் இந்தப் பிரச்சினையை OIC உறுப்பு நாடுகள் எழுப்ப வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். 
 
ஆனால் பாகிஸ்தான் எதிர்பார்த்ததற்கு மாற்றமாகவே நடைபெற்றது. 
 
ஐநா பொதுச் சபையில் உரையாற்றிய சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான், ஹூதி பயங்கரவாதத்தைப் பற்றி பேசினார். சூடான் மற்றும் எகிப்துக்கு இடையிலான தண்ணீர் பிரச்சினை பற்றியும் பேசினார். லிபியா மற்றும் சிரியா பற்றிப் பேசினார். சவுதிக்கு தற்காப்பு உரிமை உள்ளது என்றும் கூறினார். ஆப்கானிஸ்தான் தொடர்பாகவும் பேசினார். ஈரான் பற்றியும் பேசினார். அணு ஆயுதங்கள் பற்றி கவலை வெளியிட்டார். ஆனால் 

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இந்தியாவுடனான அதன் வளர்ந்து வரும் உறவுக்கு முக்கியத்துவம் .கொடுத்து இந்த விவகாரத்தை  தவிர்த்திருக்கலாம் என அவதானிகள் தெரிவிக்கின்றனர். 
 
ஈரானின் புதிய ஜனாதிபதி இப்ராஹிம் ரயீசி ஐநா பொதுச்சபையில் உரையாற்றுகையில் காஷ்மீர் தொடர்பாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை. 
 
ஐநா பொதுச் சபையில் உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உலகெங்கிலும் உள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பேசினார். ஆனால் காஷ்மீர் தொடர்பாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை. 
 
ஆனால் துருக்கி ஜனாதிபதி எர்தூகான் மாத்திரம் தனது உரையில், 

காஷ்மீர் பற்றி பேசினார். ஆனால் அவரது தொணியும் முன்னரைப் போலல்லாமல் மென்மையாக மாறி இருந்தது. பேச்சுவார்த்தை மூலம் இந்தப் பிரச்சினையை தீர்க்கப்பட வேண்டும் என்று பொதுவாக கூறிவிட்டார். 
 
காஷ்மீர் பற்றி இதற்கு முன்னர் துருக்கி ஜனாதிபதியும் மலேசியாவின் மகாதிர் முஹம்மதும் சர்வதேச மன்றங்களில் பேசி வந்தனர். ஆனால் மஹாதீர் முஹம்மத் தற்போது பதவியில் இல்லை. 
 
பாகிஸ்தானுடனான சவுதி அரேபியாவின் உறவும் பிரச்சினையில்லை. 2018 இல் இம்ரான்கான் பதவிக்கு வந்தபோது 3 பில்லியன் டொலர் கடனாகவும் அதே பெறுமதியுடைய எண்ணையையும் கடனாக பாகிஸ்தானுக்கு சவுதி வழங்கியது. ஆனால் காஷ்மீருக்கான சிறப்பு அரசியலமைப்பு அந்தஸ்தை இந்தியா நீக்கியபோது பாகிஸ்தானுக்கு சவுதியின் ஆதரவு கிடைக்கவில்லை. இதற்காக சவுதி அரேபியா OIC கூட்டத்தை கூட்டவில்லை என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குற்றம் சுமத்தி இருந்தார். இதன் காரணமாக கோபமடைந்த சவுதி அரேபியா தான் வழங்கிய கடனை முன்கூட்டியே திருப்பி செலுத்துமாறு பாகிஸ்தானிடம் கூறியது குறிப்பிடத்தக்கது. 
 
எவ்வாறாயினும் OIC என்ற இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளிலிருந்து பாகிஸ்தான் ஏமாற்றத்தையே சந்தித்துள்ளது.
பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்த இஸ்லாமிய நாடுகள்! பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்த இஸ்லாமிய நாடுகள்! Reviewed by Irumbu Thirai News on September 27, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.