அரசியல் அரங்கில் திரைக்குப் பின்னால் - சமகால அரசியல் பார்வை


அரசியலமைப்பிற்கான 20 ஆவது சீர்திருத்தம் தொடர்பாக உருவாகியுள்ள முரண்பாடுகள் தொடர்பில் ஆளும்கட்சி உறுப்பினர்களுக்கு தெளிவூட்டும் கூட்டம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை அலரி மாளிகையில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. 

ஆளும் கட்சிக்குள்ளேயே 20 ஆம் திருத்தம் தொடர்பில் பொது வெளியில் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் இக்கூட்டம் நடைபெற்றது. சிலர் 20 என்றால் என்னவென்றே தெரியாது என்று தெரிவித்திருந்தனர். இதனால் 20 குறித்து தமக்கு தெளிவுபடுத்துமாறு ஆளும்கட்சி ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்து வந்தனர். அதன் அடிப்படையிலேயே இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததது. பிரதான மேசையில் ஜனாதிபதிக்கு மேலதிகமாக பிரதமர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால, அமைச்சர் ஜிஎல், அலி சப்ரி, தினேஷ் ஆகியோர் அமர்ந்திருந்தனர். 20 தொடர்பில் ஆரம்ப தெளிவை அமைச்சர் ஜிஎல் வழங்கினார். 

"நாங்கள் 20 ஐ கொண்டு வந்ததன் நோக்கம் 19 ஐ நீக்குதல். 19 இனால் நாடு பின்நோக்கிச் சென்றது. அராஜகம் தலை தூக்கியது. அதனால் அதனை நீக்க வேண்டும். கடந்த தேர்தலில் நாம் இதனை மக்களிடம் சொன்னோம். இது புதிய யாப்பை கொண்டு வரும் செயன்முறையின் ஒரு படி" என நீண்ட விளக்கம் அளித்து அமர்ந்தார். 

பின்னர் அமைச்சர் அலி சப்ரி சில வீடியோக்களை 

ஒளிபரப்பி தன் விளக்கத்தை அளித்தார். குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால 19 ஆம் திருத்தம் தொடர்பில் சொன்ன விடயங்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்ன ஆகியோரின் வீடியோக்கள் அதில் உள்ளடங்கி இருந்தன. 19ஐ கொண்டு வந்தவர்களே அதன் குறைகளை சொல்லி உள்ளனர் என்றும் கூறினார். 20 ஆம் திருத்தம் தொடர்பில் பொது மக்களின் விமர்சனத்திற்குரிய விடயமாக மாறியுள்ள விடயங்கள் ஒவ்வொன்றாக விளக்கினார் அமைச்சர் சப்ரி. குறிப்பாக கணக்காய்வு ஆணைக்குழு, இரட்டைப் பிராஜாவுரிமை பற்றியும் அவர் விளக்கினார்.  

அதன் பின்னர் கருத்து தெரிவித்த உறுப்பினர் ஒருவர் சமூகத்தில் 20 க்கு எதிராக அதிகம் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் விடயங்கள் ஆளும் கட்சி உறுப்பினர்கள் சொன்ன கருத்துக்களே என்று கூறியதுடன், பிரச்சினைகளை வெளியே சென்று பேசாமல் உள்ளேயே பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் வாசுதேவ "அதனால்தான் இது கூட்டப்பட்டுள்ளது. இங்கே பேசி தீர்ப்போம்" என்று சொன்னார். 

 அதன் பின்னர் 20 தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்து வரும் மிகப் பலம் வாய்ந்த ஆளும் கட்சி உறுப்பினரான அமைச்சர் விமல் விரவங்ச பேசினார். கொண்டு வரப்பட்டுள்ள முன்மொழிவில் உள்ள குறைபாடுகளே இந்த சிக்கலை உருவாக்கியதாக அவர் கூற பதிலளித்த ஜனாதிபதி "பொது மக்கள் மத்தியில் 20 குறித்த பிழையான பிம்பத்தை உருவாக்கியது நம்ம ஆட்களே" என்று கூறினார். 

அதன் பின்னர் கெவிது குமாரதுங்க உரையாற்றினார். அவர் 20 ஐ கடுமையாக விமர்சனம் செய்தார். நாங்கள் மக்களுக்கு வாக்களித்தது புதிய அரசியல் யாப்பை கொண்டு வருவதாக. 20 ஐ அல்ல. என்று உரையாற்றுகையில் பின்வரிசை உறுப்பினர்கள் அவருக்கு இடையூறு விளைவித்தமையையும் காணக்கூடியதாக இருந்தது. எனினும் அதையும் தாண்டி அவரின் உரை அமைந்தது. அப்போது ஜனாதிபதி குறுக்கிட்டு பேசினார். "எனக்கு மக்கள் ஆணை வழங்கியது இந்த நாட்டை கட்டியெழுப்ப. மக்கள் சொன்னது இந்த நாட்டை எவ்வாறேனும் செய்யுங்கள் என்று. நான் போய் மக்களை சந்திக்கும் சந்தர்ப்பங்களில் மக்களின் சிறு பிரச்சினையை சொன்னாலும் சுற்றுநிறுபங்களை காரணம் காட்டி அதிகாரிகள் மறுக்கின்றனர். சுற்று நிறுபங்கள் அதிகாரிகளை இறுக்கி வைத்துள்ளன. அப்படி என்றால் நாங்கள் யாப்பை வைத்துக் கொண்டு தொடர்ந்து பேசிக் கொண்டே இருப்போம்" என்று சற்று கடுமையாக பேசினார். "ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு பேசி பேசி இருந்தோமானால் எமக்கும் கடந்த ஆட்சியாளர்களுக்கு நடந்தது போலவே நடக்கும். எனக்கு வேண்டியது நாட்டை கட்டி எழுப்ப. அதற்கான தடைகளை நீக்குவோம். புதிய யாப்பை கொண்டு வருவதற்கு நான் வாக்குறுதி தருகிறேன். தற்போது செய்வது 19 ஐ நீக்குதல். புதிய யாப்பை கொண்டு வர எல்லோரும் கலந்துரையாடி செய்வோம். 19 வெற்றிகரமானது என்றால் தற்போது இந்த ஆசனத்தில் இருப்பது ரணில். இல்லையென்றால் சஜித். முன்னாள் பிரதமருக்கு வெல்லக் கூட முடியாமல் போனது. 19 ஐ வைத்துக் கொண்டு நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது" என்றும் கூறினார். 

பின்னர் பல பின்வரிசை உறுப்பினர்களும் 19 ஐ நீக்குவதன் அவசியம் குறித்து பேசினர். அதன் பின் எழுந்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி என்ற அடிப்படையில் இதனை நீக்க நாம் பூரண ஒத்துழைப்பை வழங்குகிறோம் என்று கூறினார். 

அதனை தொடர்ந்து எழுந்து உரையாற்றிய அமைச்சர் விமல் "ஜனாதிபதி அவர்களே இந்த ஆள் சொல்வதை நம்ப முடியாது. நான் அமைச்சரவையில் 20 இல் உள்ள சில விடயங்கள் தொடர்பில் விமர்சனம் செய்து விட்டு வெளியே வந்த போது இவர் எனக்கு வெல் டன் விமல். எங்களால் இப்படி பேச முடியாது என்று சொன்னார். அதனால் இவ்வாறான துரோகிகள் சொல்வதை கேட்க வேண்டாம்" என்று கூறினார். உடனே குறுக்கிட்ட பிரதமர் மஹிந்த அந்த சொற்கள் காரம் கூடியவை. எனவே விமல் தயவுசெய்து அவற்றை வாபஸ் வாங்கிக்கொள்ளுங்கள் எனக் கோர விமல் அதை ஏற்று அந்த வார்த்தையை வாபஸ் வாங்கிக்கொண்டார். 

பின்னர் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும் கருத்து தெரிவித்தார். "18 கொண்டுவரப்பட்ட போது நான் அதனை எதிர்த்தேன். எனினும் ஆதரவாக வாக்களித்தேன்" என்று சொன்னார். 

தொடர்ந்தும் பலர் பேசினார். ஜனாதிபதி, பிரதமர் அவற்றை உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருந்தனர். இறுதியாக பேசிய ஜனாதிபதி "நாம் புதிய யாப்பை கொண்டு வரவில்லை. 19 ஐ நீக்க மாத்திரமே முயல்கிறோம். மக்களுக்கு நான் கொடுத்த வாக்கு உள்ளது. நாட்டை கட்டியெழுப்ப. அதற்கான தீர்மானங்களை எடுக்க அதிகாரிகள் பயப்படுகின்றனர். அவ்வாறு நாட்டை அபிவிருத்தி செய்ய இயலாது. நாம் இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும். அதற்கு எனக்கு ஒத்தாசை வழங்குங்கள்" என்று கூறினார். 

இக்கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால மற்றும் 20 ஐ கடுமையாக விமர்சித்து வரும் விஜேதாச ராஜபக்ஷ ஆகிய இருவரும் கலந்து கொண்ட போதிலும் எந்தவிதமான கருத்துக்களையும் முன்வைக்கவில்லை. 

 #20 அடுத்த வாரம் பாராளுமன்றில்

20 ஐ அடுத்த வாரமே பாராளுமன்றத்தில் நிறைவேற்றி நடைமுறைக்கு கொண்டு வருதல் அரசின் நோக்கமாகும். உயர் நீதிமன்றத்தின் கருத்து ஏற்கனவே சபாநாயகர், ஜனாதிபதி, பிரதமருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் 20 ஆம் திகதி அதனை சபாநாயகர் பாராளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளார். எனினும் அதில் உள்ள சில விடயங்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் கசிந்தும் இருந்தன. 20 இற்கான விவாதம் குறித்து தீர்மானம் எடுக்கும் கட்சித் தலைவர்கள் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் நடைபெற்றது. சட்டமூலத்தை முன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றும் நடவடிக்கையை அரசும் ஆரம்பித்துள்ளது. அரசுக்கு சரியா 150 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. 20 ஐ நிறைவேற்றிக் கொள்ள அது போதுமானது. எனினும் மஹிந்த யாபா சபாநாயகர் ஆனமையினாலும், விஜேதாச ராஜபக்ஷ 20 க்கு எதிராக இருப்பதாலும் அரசின் உறுப்பினர் எண்ணிக்கை 148 ஆகவே உள்ளது. இதனால் இன்னும் 2 பேர் எதிர்தரப்பில் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை அரசுக்கு உள்ளது. அதற்கான வேலைகளை ஏற்கனவே பசில் ராஜபக்ஷ ஆரம்பித்து விட்டார். 

#வெளிவராத சு.க அறிக்கை.# 

20 தொடர்பில் ஆராய்வதற்காக சு.க ஒரு குழுவை நியமித்திருந்தது. தகவல்களின் அடிப்படையில் அந்த குழு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் அமைச்சர் தயாசிறி ஜயசேகரவின் வீட்டில் ஒரே ஒரு தடவை மட்டுமே கூடியது. 20 க்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று சிலரும், அதில் உள்ள சில விடயங்கள் தொடர்பில் விமர்சனங்களும் முன்வைத்தனர் எனவும் அறியக் கிடைக்கிறது. 

எவ்வாறாயினும் அந்த குழுவின் அறிக்கை ஒன்று தயார் செய்யப்பட்டு கட்சிக்கு வழங்கப்பட்டு விட்டது. எனினும், இது இதுவரை ஊடகங்களுக்கு வெளியிடப்படவில்லை. 

#பின்வரிசை உறுப்பினர்கள் பசில் சந்திப்பு

ஆளும் தரப்பின் பின்வரிசை உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தம் பிரச்சினைகள் குறித்து காலந்துரையாடியமை குறித்து கடந்த வாரம் பதிந்தோம். அவர்கள் இவ்வாரம் பசில் ராஜபக்ஷவுடன் அலரி மாளிகையில் வைத்து சந்திப்பு ஒன்றை மேற்கொண்டனர். வீரசுமன வீரசிங்ஹ, ஜகத் குமார, பிரமித பண்டார தென்னக்கோன், பிரேம்நாத் தொளவத்த உட்பட பின்வரிசை உறுப்பினர்கள் அதில் இணைந்து கொண்டிருந்தனர். இவர்கள் அனைவரும் அரசில் பதவிகளை வகிக்காதவர்களாவர். அங்கு முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கை பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவர் பதவிகளை இந்த பின்வரிசை உறுப்பினர்களுக்கு பெற்றுக்கொள்தல் தொடர்பானதாகும். பசில் ராஜபக்ஷ அதற்கு இணக்கம் தெரிவித்தார். 

 ஐக்கிய மக்கள் சக்தியின் பொது மக்கள் சந்திப்புகள் கொரோனா காரணமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சி தலைவர் அலுவலகம், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகம் என எல்லா இடங்களிலும் சுகாதார வழிமுறைகளை கடைபிடிக்குமாறு சஜித் கோரியிருந்தார். பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் அலுவலக ஆளணியினரில் பலரை வீட்டில் இருந்தே பணியாற்ற சஜித் அனுமதி வழங்கியிருந்தார். இதேவேளை பகிரங்க கூட்டங்கள் நடைபெறாத போதிலும் சில உள்ளக கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. 

 "கொரோனா தடுப்பு தொடர்பில் அரசிடம் முறையான திட்டங்கள் இல்லை போன்றுதான் விளங்குகிறது. எதிர்க்கட்சி தலைவர் இது தொடர்பில் பாராளுமன்றத்தில் பேசினார். அரசுக்கு பதில் இருக்கவில்லை. மனுஷ நாணயக்காரவும் பாராளுமன்றத்தில் கேட்டார் எனினும் அரசு இதுவரை பதில் அளிக்கவில்லை" என்று ஹரின் பெர்னாண்டோ கூறினார். இந்தியாவில் இருந்து வந்து Brandix தொழிற்சாலைக்கு சென்றதாக சொல்லப்படும் நபர்கள் பற்றியும் இங்கே பேசப்பட்டது. இது தொடர்பில் ஆளும் தரப்புடன் தொடர்பில் உள்ள சிலருக்கு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளமை பற்றியும் பேசப்பட்டது. குறிப்பாக இந்தியாவில் இருந்து வந்தவர்களை தனிமைப்படுத்தி வைக்கப்பட்டமை தொடர்பில் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு தெரியாது என்று சொல்லப்படுகிறது. அதாவது PHI இன் தொடர்பு இல்லாமல் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனரா? என மனுஷ நாணயக்கார தனக்கு கிடைத்த தகவல்களை கூறினார். 

அப்போது சஜித் "கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பொது மக்கள் தொடர்பில் எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் தேடிப்பார்க்க வேண்டும்" என்று கூறினார். 5000 ரூபா கொடுப்பனவு தொடர்பான விடயங்களும் இங்கே கலந்துரையாடப்பட்டன. 

 #சஜித்க்கு வந்த அழைப்பு

இதற்கிடையில் சஜித் பிரேமதாசவுக்கு கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பணியாற்றும் சிலர் அழைப்பு ஒன்றை எடுத்தனர். "சேர் எங்களுக்கு PCR பரிசோதனை செய்ய ஒருநாள் வரச்சொன்னார்கள். அன்று சோதனை செய்யாமல் அனுப்பி விட்டனர். மீண்டும் வரச்சொன்னார்கள். ஒரு மணி நேர அவகாசத்தில். நாங்கள் கொண்டு வர வேண்டிய பொருட்களை எடுத்துக்கொண்டு செல்வதற்காவது இவர்கள் அவகாசம் தரவில்லை" என்று கூறினார். "அது மட்டும் அல்ல சேர். திடுப் என வந்து ஒரு நிமிடத்தில் தயாராக சொல்லி வாகனங்களில் ஏற்றிச் சென்றனர். நாங்கள் பலவந்தமாக கொரோனாவை உருவாக்கவில்லை. அவர்கள் எம்மை கொலைகாரர்கள் போல் நடத்தினர்" என்றும் கூறினார். 

 "கடந்த முறை படைவிரர்களை கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தி, அவர்களுக்கு கொரோனா ஏற்பட்டு பின்னர் மக்கள் கல்லால் எறிந்து விரட்டும் நிலை உருவானது. செய் நன்றி தெரியாத மக்கள் உள்ளனர். உங்களுக்காக நான் என்னால் இயன்றதை செய்கிறேன்" இத்துடன் நில்லாமல் பல்வேறு தரப்பினருடன் தொடர்பு கொண்டு இது தொடர்பில் கலந்துரையாடினார். 

 #காணாமல் போன ரிஷாட்

ரிஷாட் பதியுதீன்... இலங்கை அரசியலில் தவிர்க்க முடியாத நாமம். 2019 ஜனாதிபதி தேர்தலின் போது புத்தளத்தில் இடம்பெயர்ந்து வசிக்கும் மன்னார் வாக்காளர்களை வாக்களிக்க அழைத்து செல்ல அரச செலவில் பஸ்களை ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் பிடியாணை பெற்று கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பதில் போலீஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டதை தொடர்ந்து பதியுதீன் பற்றிய புதிய நாடகம் ஆரம்பமானது. 

பிடியாணை பெறப்பட்டு 6 விஷேட போலீஸ் குழுக்கள் தேடி வந்த நிலையில் இன்று (19) காலை போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இதற்கிடையே தன் மீது விதிக்கப்பட்ட பிடியாணைக்கு எதிராக அவர் நிதிமன்றத்தையும் நாடியுள்ளார். மிகப் பெரிய ஒரு அரசியல் நாடகமே இது என சமூக வலைத்தளங்களில் மட்டுமன்றி செயற்பாட்டு அரசியலிலும் கதைக்கப்பட்டு வருகிறது. 

20 ஆம் சீர்திருத்த வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில் ரிஷாட் இன் ஆதரவை அரசு பெற்றுக்கொள்ள உள்ளதாக கதைகள் உலாவும் நிலையில் அரசியல் அரங்கில் ஒரு ட்விஸ்ட் ஆக இது இழுபட்டு செல்கிறது. இன்று காலை கைது செய்யப்பட்டதுடன் இந்த அரசியல் ட்விஸ்ட் முடிந்ததா அல்லது புதிய ஒரு ட்விஸ்ட் இற்கான ஆரம்பமா என்பதை இவ்வாரம் அவதானிக்கலாம். 

 #பிரசன்னவின் கோரிக்கை

கடந்த திங்கட்கிழமை மாலை அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் கொரோனா நிலை தொடர்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா விளக்கினார். அதன் போது அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கம்பஹா மாவட்டத்தில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் 5000 ரூபா நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இது தொடர்பில் தாம் கவனம் செலுத்துவதாக ஜனாதிபதி தெரிவித்தார். 

 #20க்கு எதிரான பிக்குகள்

இந்த ஆட்சி உருவாக்குவதில் திரைமறைவில் மட்டுமன்றி திரைக்கு முன்னாலும் முக்கிய பங்காற்றியவர்கள் பெளத்த பிக்குகள். தற்போது 20 ஆம் திருத்தத்திற்கு எதிராக அவர்களில் முக்கியமான சிலர் வெளியே வர ஆரம்பித்ததுள்ளனர். 

குறிப்பாக 2015 தோல்வியடைந்து மெதமுலன திரும்பிய மஹிந்த ராஜபக்ஷவை கொண்டு வந்து மீண்டும் அரசியல் செய்ய வைத்த முறுத்தெட்டுவே ஆனந்த பிக்கு முக்கியமானவர். அபயாராம பிக்கு என பலரும் அறிந்திருப்பர். 

ஏற்கனவே, ரமான்ய, அமரபுர நிக்காயகளின் செயலாளர் தேரர்கள் கூட்டு அறிக்கை விடுத்திருந்த நிலையில் முறுத்தெட்டுவே ஆனந்த தேரர் மற்றும் அல்லே குணவங்ச ஆகிய இந்த ஆட்சியை உருவாக்கிய முக்கிய தேரர்கள் இருவரும் 20க்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டு ஊடக சந்திப்பை நடாத்தி உள்ளனர். 

குறிப்பாக 20 அம்ச கோரிக்கை ஒன்று ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் எந்த சமரசத்திற்கும் இடமில்லை என்றும் பிக்குகளுடன் விளையாட வேண்டாம் என்றும் கடும் தொனியில் தெரிவித்தார் அல்லே குணவங்ச தேரர். 

 #20 ஐ எதிர்க்கும் கணக்காய்வாளர் தொழிற் சங்கங்கள்

20 இன் மூலம் கணக்காய்வு தொடர்பில் ஏற்படும் சிக்கல்கள் தொடர்பில் கணக்காய்வாளர் தொழிற்சங்கங்கள் ஊடக சந்திப்பொன்றை நடத்தின. அதன் போது அரச கம்பனிகளின் கணக்காய்வை கணக்காய்வாளர் நாயகத் திணைக்களத்திடம் இருந்து பெற்று தனியாரிடம் வழங்க 20ஆம் திருத்தம் வழி ஏற்படுத்துவதாகவும், அதன் மூலம் அவை பாராளுமன்றத்தின் கட்டுப்பாட்டை விட்டு செல்வதாகவும் குற்றம் சாட்டியதுடன், ஸ்ரீலங்கன் போன்ற ஒரு நிறுவனத்தின் கணக்காய்வை தனியார் நிறுவனம் ஒன்று மேற்கொண்டால் சுமார் 600 மில்லியன் அளவில் கட்டணம் செலுத்த வேண்டி ஏற்படும் என்றும் தற்போது அரசுக்கு சொந்தமாக உள்ள 153 கம்பனிகளினதும் கணக்காய்வுக்காக எத்தனை கோடி ரூபாய்கள் தனியார் துறைக்கு செல்லும் என்றும் கேள்வி எழுப்பியதுடன், வியத் மக மூலம் அரசுடன் நல்லிணக்கம் கொண்ட சில வாண்மையாளர்களின் நலனே இதில் உள்ளன என்று அரசை நேரடியாக குற்றம் சாட்டினர். 

அத்தோடு இலங்கையை அபிவிருத்தி செய்வதற்கு இங்கே உள்ள எந்த சட்டமும் தடையாக இல்லையென்றும், அரசியல் தலைமைகளின் இயலாமையை மறைக்க காலத்திற்கு காலம் ஒவ்வொன்று செல்வதாகவும் தெரிவித்தனர். 

 தேசிய தொழிற்சங்க ஒருங்கிணைப்பு என்ற அமைப்பும் சில தினங்களுக்கு முன்னர் கோட்டே ரெயில் நிலையத்தின் முன் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டிருந்தது. 

இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஸ்டாலின் அதில் முன்னின்று செயற்பட்டார். இவர்கள் ஞாயிறன்று மல்வத்த, அஸ்கிரிய பீடங்களுக்கு சென்று 20 க்கான தமது எதிர்ப்புகளை பதிவு செய்தனர். 

 அடுத்த வாரம் இந்த தொடர் எழுதும் போது 20 காண வாக்கெடுப்பு நிறைவடைந்திருக்கும். பிக்குகளின் எச்சரிக்கையை மீறி 20 ஐ நிறைவேற்ற அரசு முயலுமா? அல்லது திருத்தங்களை மேற்கொண்டு எதிர்ப்பவர்களை திருப்திப்படுத்த முயற்சிக்குமா என்ற தகவல்களுடன் அடுத்த வாரம் சந்திக்கலாம். 

-  fபயாஸ் MA fபரீட்.

அரசியல் அரங்கில் திரைக்குப் பின்னால் - சமகால அரசியல் பார்வை அரசியல் அரங்கில் திரைக்குப் பின்னால் - சமகால அரசியல் பார்வை Reviewed by irumbuthirai on October 19, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.