பெண்கள் மீதான தொடர் பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்கள், கொலை, கொடூர தாக்குதல் ஆகியவை இன்று அன்றாடச் செய்திகளாகிவிட்டன. இப்படிப்பட்ட செய்திகளை கேள்விப்படுவதும், அதற்கு கண்டனங்கள் தெரிவிப்பதும், அதற்கான உண்மையறியும் குழு, அதன் அறிக்கை, அதற்கான போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், சட்டஉதவிகள் என முன்னேற்றங்களுடன் எதிர்வினைகள் ஆற்றுவதும் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
முதலில் பெண்கள் என்பதாலேயே அவர்கள் மீது பாலியல் குற்றங்கள் நிகழ்த்தப்படுகிறது. அதாவது ஒட்டுமொத்த பெண் சமூகமே இங்கு ஒடுக்கப்பட்ட சமூகமாக உள்ளது. அதிலும் கூடுதலாக தலித் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமைகள் சாதியம் தரும் துணிச்சலுடன் சேர்த்து இன்னும் கொடூரமாகத் தொடர்கின்றன.
பெண்கள் மீதான பல குற்றங்கள் வெளிவருவதே இல்லை. சமூகவலைத்தளங்கள் மூலம் நிகழ்ந்த நன்மையென்பது, ஊடகங்கள் நாளிதழ்கள் புறக்கணித்தாலும் செய்திகள் விரைவாகப் பற்றிக் கொள்கின்றன.
இப்போதைய கேள்வி... இந்த வன்கொடுமைகளுக்கான மூல காரணங்களைக் கண்டறிவதற்கும் அவற்றிலிருந்து மாற்றங்களைத் தெரிந்தெடுப்பதற்கும் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதே!
பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்கொடுமைகளுக்கு முதன்மைக் காரணம், ஆண்கள் பெண்கள் மீது கொண்டிருக்கும் பார்வை. பெண் துய்த்து அனுபவிப்பதற்குரிய பண்டம்! இதற்கு குடும்ப அமைப்பு, கல்விக்கூடங்கள், மொத்தத்தில் இந்தச் சமூகக் கட்டமைப்பு என அத்தனையும் காரணம் ஆகின்றன. இதில் ஒவ்வொரு குடும்பமாக சென்று மாற்றங்களை நிகழ்த்துவது என்பது நடைமுறை சாத்தியமற்றது. சமூகமாற்றம் என்பது முதல் கூறிய இரண்டு கூறுகளின் மாற்றத்தை ஒட்டி அமையக்கூடியது. ஆக அரசின் மக்களின் செயற்பாட்டாளர்களின் தலையீட்டில் மாற்றம் காணக்கூடிய இடம் அடிப்படையில் கல்விக்கூடமே!
கல்வி கூடங்களில் நாம் காண வேண்டிய மாற்றங்கள் பாலியல் சமத்துவக் கல்வியும், பாலியல் கல்வியும்!
பெண்வழி சமூகமாக இருந்த காலங்களில் பெண்கள் ஆண்களை காட்டிலும் பலமிக்கவர்களாக இருந்தார்கள். ஆணாதிக்கச் சமூகமாக மாறிய போது அதாவது பெண்கள் வெறும் உடைமைகளாக பார்க்கப்பட்டது முதல் பெண்வேலை என்ற புதிய வரையரை உருவானது. பெண்களின் உடல்வலிமை மனவலிமை மெல்ல மெல்ல இந்த வகையில் பலவீனமாக்கப்பட்டது. இன்று பெண்களென்றால் இலகுவானவர்கள் பலம் குன்றியவர்கள் எவ்வித வலிமையும் அற்றவர்கள் என்றாகிவிட்டது. இந்த வரையறையை உடைத்து பெண்கள், ஆண்களை காட்டிலும் உடலளவிலும் மனதளவிலும் வலிமை பெறுதல் அவசியம். பெறுதல் என்பதை விட பெண்ணுள் இயல்பாகவே உள்ளதை காலத்தால் இழந்ததை மீட்டெடுக்க வேண்டும்.
இன்று சமூகச் செயல்பாட்டாளர்கள் தங்கள் களச் செயல்பாட்டில் முன்னைக் காட்டிலும் வேகமாய் இருப்பதை மறுப்பதற்கில்லை.
ஆனால், 4 நாட்களாகக் காவல்நிலையம் அலைந்தும் சவுமியா குடும்பத்தால் வழக்குக் கொடுக்க முடியவில்லை. நம்மை நாம் அடையாள படுத்திக்கொள்ள வேண்டிய இடங்கள் அவை. அந்தந்த பகுதிக்கு நெருக்கமான செயல்பாட்டாளர்களை அவர்களுக்கு அடையாளம் தெரிவதில்லை. தமிழ்நாடு முழுவதும் மூலை முடுக்கெங்கும் நாம் மக்களுக்கு அறிமுகமாயிருக்க வேண்டும்.
மக்களும் நம்முடன்
கைகோர்க்காமல் எதுவும் சாத்தியமில்லைதான். நாம் நம்மால் முடிந்தளவில் அல்ல அதற்கும் மேல் ஒரு சந்து இடுக்கு விடாமல் மக்களை நோக்கிப் பயணிக்க வேண்டிய நேரமிது. இது பின்னாளில் ஊடகங்களையும் வாய்திறக்க வைக்கும். நம் வேலைகள் சிறிது இலகுவாகும். இந்தப் பயணத்தில் பெண்கள் ஒவ்வொருவருக்கும் கல்வி இன்றியமையாதது, அதனூடே தற்காப்புக் கலையும் இன்றியமையாதது என்பதைப் புரியச் செய்வதோடு நடைமுறைப்படுத்த வழி காண்போம்.
Sudha Thiagu.
பெண்கள் பாலியல் வன்முறை!
Reviewed by Tamil One
on
November 19, 2018
Rating:
Reviewed by Tamil One
on
November 19, 2018
Rating:

No comments: