மஹிந்தையா?? சஜித் பிரமதாசாவா??

விடுதலைப்புலிகளின் அட்டகாசங்களையும், அடக்குமுறைகளையும் தடுத்து நிறுத்த முடியாத காலகட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமர்களாக பதவி வகித்த சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் விடுதலைப்புலிகளுடன் பல்வேறுபட்ட போர்நிறுத்த ஒப்பந்தங்கள் மூலம் காலம் கடத்துகின்றனர். சிலநேரங்களில் விடுதலைப்புலிகளால் அப்போர் நிறுத்த ஒப்பந்தங்கள்கூட மீறப்படுகிறது.

கொலைகளும், கடத்தல்களும், குண்டுவெடிப்புக்களும், அரசியல் தலைமைகள் மீதான தாக்குதல்களும் தொடர்ந்துகொண்டிருந்த காலப்பகுதியில் நாட்டின் தலைமைத்துவத்தை மகிந்த ராஜபக்‌ஷ கையிலெடுக்கிறார். விடுதலைப்புலிகளின் மீதான ஒப்பந்தக் கதைகள் மீது நம்பிக்கையிழந்து கிழக்கிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நாட்டை மீட்கும் பணியில் மகிந்த முன்னேறிச் செல்கிறார். சர்வதேசத்தின் பல்வேறு அழுத்தங்களையும் கண்டுகொள்ளாமல் இறுதியில் முள்ளிவாய்க்கால்வரை சென்று நாட்டில் மொத்த பயங்கரவாதத்தையும் அழித்து ஒழித்து ஓர் கதாநாயகனாக மக்கள் மத்தியில் தடம் பதிக்கிறார்.


எமது நாட்டில் சமாதான காற்றை வீசச் செய்த மகா தலைவன் என்று மக்கள் மகிந்தவை உச்சத்திற்கு கொண்டு சென்றார்கள். புத்த பெருமானின் சிலைக்கு அருகில் மகிந்தவின் படத்தை வைத்து கும்பிடு போடுமளவுக்கு அவர்களின் நேசம் மகிந்தவுக்கு சொந்தமானது. மகிந்த நாட்டின் ஜனாதிபதியாக மட்டுமன்றி ஆயுட்கால அரசனாகவும் மக்களுத்தெரிந்தார். மகிந்தவும் அதனை உணர்ந்து கடைசிவரை நாட்டை நானே ஆளவேண்டும், நானே ராஜா, நானே மந்திரி என்ற கற்பனையில் மிதக்கலானார்.

அதிகார உச்சத்தின் எல்லைக்கே சென்ற ராஜபக்‌ஷ யுத்தத்தின் பின்னர் நாட்டினை அபிவிருத்தி நிலைக்கு கொண்டுசெல்ல எத்தனித்தது மட்டுமன்றி நாட்டின் அரசியலமைப்பையே தனக்கு சாதகமாக மாற்றியமைக்கிறார். தன்னோடு சுற்றியிருப்பவர்கள் எல்லோரும் அதிகாரத்தினை துஸ்பிரயோகம் செய்கின்றனர், அடக்கு முறைகளைக் கையாளுகின்றனர், இதனை கண்டும் காணாமல் அப்படியே இருக்கிறார் மகிந்த. சிறுபாண்மை மக்கள் மீதான இனவாதச் செயலை உச்சமாக பாவித்த பொதுபலசேனாவைக் கூட கண்டுகொள்ளவில்லை என்பது சிறுபாண்மை மக்கள் அவர்மீது கொண்ட ஆதரவை மிகவும் தூரமாக்கியது.

தொடரான ஊடகங்களின் மீதான அடக்குமுறை, சர்வாதிகார போக்கு, வெளிநாட்டுக் கடன்களின் அதிகரிப்பு, அரசியல் துஷ்பிரயோகங்கள், மர்மமான கொலைகள், சிறுபாண்மை மக்கள் மீதான அடக்குமுறை போன்ற இன்னோரன்ன செயல்களால் மகிந்தவை மக்கள் எந்நதளவு நேசித்தார்களோ அதே அளவு அதே மக்கள் வெறுத்தார்கள். ஆட்சியின் மீது அதிருப்தியும் கொண்டார்கள். அடுத்து வந்த தேர்தலில் புதிய ஜனாதிபதியாக மைத்திரியை தேர்ந்தெடுத்தார்கள்.

2015 ஜனவரி மாதம் பெரும்பாண்மை இனத்தவரை விட இலங்கையின் சிறுபாண்மை இனத்தவர்கள் அதிகம் சந்தோசமடைந்த மாதம். இலங்கை மீண்டுமொருமுறை சுதந்திரம் அடைந்ததுபோல ஒரு உணர்வு மக்கள் மனங்களில். ஊடகங்கள் சுயமாக தொழிற்படத் தொடங்கின. அராஜகங்களும் அட்டூழியங்களும் குறைந்தன. கருத்துச் சுதந்திரம் சிரித்து நின்றது. மக்கள் மனங்கள் குளிர்ந்தன.

ஆனால் இவை அனைத்தும் ஒரு கண்காட்டு வித்தையாக உடனே மறைந்துவிடும் என்பதை யாரும் உணரவில்லை. எந்த இனவெறியையும் அடக்குமுறைகளையும் மக்கள் எதிர்த்தார்களோ அதே விடயங்கள் தொடர்ந்தன. மைத்திரி என்ற ஒருவர் மூலமாக நாம் ஏமாற்றப்பட்டுவிட்டோமோ என்று மக்கள் எண்ணத்தொடங்கினர். இனங்களுக்கிடையிலான முறுகலை ஜனாதிபதியோ பிரதமரோ கண்டும் காணாமல் இருந்தனர். தொடர்ந்த இனவாதச் செயல்களைக் கண்டு மீண்டும் நாம் தவறான தலைமையத் தெரிவுசெய்துவிட்டோமா என்று எண்ணிக் கொண்டிருக்கும்போதே,

ரணிலை பிரதமர் பதவியிலிருந்து தூக்கி எந்த மகிந்தவின் ஆட்சி நாட்டை அழிக்கும் என்று சொன்னாரோ அதே மகிந்தவை மீண்டும் பிரதமர் அரியாசனம் ஏற்றி அழகு பார்த்தார் மகிந்த. இன்று மகிந்த விட்டுக்கொடுப்பதுமில்லை, ரணில் இதனை ஏற்றுக்கொள்ளப்போவதுமில்லை. நாடும் நாட்டு மக்களும் அல்லோலகல்லோலப் பட்டு நாட்டின் ஆட்சியின் அசிங்கத்தை கண்டு காரித் துப்பாத குறை.

ரணிலைத்தவிர உங்கள் கட்சியில் வேறு யாரையும் அழைத்து வாருங்கள் பிரதமர் பதவியைத் தருகிறேன் என்று மைத்திரியும், இல்லை வேறு யாருக்கும் கொடுக்கவிட மாட்டேன் என்று ரணிலும், இது என்னுடையது நான் விட்டுக்கொடுக்கவே மாட்டேன், முடிந்தால் தேர்தலை நடத்துங்கள் என்று மகிந்தவும் கூற, மக்களோ இவர்கள் மூன்றுபேரும் வேண்டாம் புதிய தலைமையை கொண்டுவாருங்கள் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்கின்றனர்.

இதுவரை ஆட்சி செய்த எந்த அரசாங்கத்திலும் எங்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படாத சந்தர்ப்பங்களே இல்லை. கடந்துபோன அனைத்து அரசாங்கங்களிலும் நாங்கள் எரிக்கப்பட்டிருக்கிறோம், தாக்கப்பட்டிருக்கிறோம். இனவாத வன்முறைகளால் பல உயிர்களை இழந்திருக்கிறோம். இதற்கு பின்னரான ஆட்சியும் எங்களை நிம்மதியாக வாழச்செய்யப் போவதில்லை. அவ்வாறான நம்பிக்கைகள் கூட எங்களிடம் இல்லை.

இன்று சுமார் 818பேரின் வாக்குமூலத்தில் 567பேர் அதாவது 69% மான மக்கள் புதிய பிரதமராக சஜித் பிரேமதாசாவை கொண்டுவாருங்கள் என்ற எண்ணத்தைக் கொண்டிருக்கிறார்கள். காரணம் ஓர் புதிய தலைமை எம் நாட்டை ஆளட்டும் என்ற எதிர்பார்ப்பே!

தொடரும் அரசியல் பழிவாங்கல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களில் எங்களுக்கு சாதகமான விடயங்கள் ஏற்படுவது கடினம். ஏற்படும் எந்த ஆட்சியும் எங்களுக்கு சுபீட்சமான எதிர்காலத்தையும் வாழ்வையும  உருவாக்கும் என்பதில் எந்தவித உத்தரவாதமும் இல்லை. இருந்த போதும் ஒரு சிறு நம்பிக்கைதான் எங்களை இன்னுமின்னும் இந்த நாட்டின் ஜனநாயகம் மற்றும் அதிகாரத்தின் மீது நம்பிக்கை கொள்ளச் செய்திருக்கின்றது. அந்த நம்பிக்கையின் இறுதி சந்தர்ப்பம்தான் சஜித் பிரேமதாசா என்னும் புதிய பிரதமர் என்ற நம்பிக்கை.

சொல்லப்போனால் சஜித் பிரேமதாசாவின் பிரதமர் பதவிக்கு இப்போது தடையாக இருப்பது மகிந்தவைப்போன்று தலைமைத்துவ ஆசையில் வெறிகொண்ட ரணில் என்ற ஒருவரே. இவர்கள் மாறி மாறி ஆட்சி செய்யத்தான் போகிறார்கள். நாங்களும் புதிய தலைமைகளை தேடி பின்னால் செல்லத்தான் போகிறோம். புதியவை அனைத்துமே எம்மை நோகடித்த வரலாறுகளே உண்டு. சஜித்தும் அந்த வரிசையில் வருவாரா என்பதும் சந்தேகமே! இருந்தும் அனைத்து பக்கங்களிலிருந்தும் எங்களுக்கு அடி விழத்தான் போகின்றது...

அஷ்ரப்!
மஹிந்தையா?? சஜித் பிரமதாசாவா?? மஹிந்தையா?? சஜித் பிரமதாசாவா?? Reviewed by Tamil One on November 21, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.